எனது டி20 அணியில் விராட் கோலிக்கு இடமில்லை - அஜய் ஜடேஜா

By செய்திப்பிரிவு

லண்டன்: தனது டி20 அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா. கோலியை அணியில் இருந்து நீக்கலாம் என கபில் தேவ் சொல்லியுள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார் ஜடேஜா.

‘ரன் மெஷின்’ என எல்லோராலும் போற்றப்படுபவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து பார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்குபவர் கோலி. மொத்தம் 23,963 ரன்களை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி எடுத்துள்ளார்.

இருந்தாலும் அண்மைய காலமாக மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் சேர்க்க முடியாமல் தவித்து வருகிறார் கோலி. 11, 1, 20, 11, 13 என அவர் கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் ஐந்து இன்னிங்ஸ் ரன்கள் உள்ளன. இந்த மோசமான ஃபார்மில் இருந்து மீண்டு வரும் நோக்கில் அவருக்கு தொடர்ச்சியாக ஓய்வு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் கோலியை நீக்கலாம் என கபில் தேவ் சொல்லி இருந்தார். இப்போது அந்த வரிசையில் ஜடேஜாவும் இணைந்துள்ளார்.

"விராட் கோலி மிகச் சிறந்த வீரர் அதில் மாற்றுக் கருத்து கிடையாது. அவர் சதம் பதிவு செய்யவில்லை. ரன் சேர்க்கவில்லை என சொல்லி அவரை அணியிலிருந்து நீக்கிவிட முடியாது. இருந்தாலும் பழைய பாணியில் ஆட்டத்தை அணுகுவதா அல்லது புதிய பாணியில் அதிரடியாக ஆட்டத்தை அணுகுவதா என்பது குறித்து இந்திய அணி ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.

ஏனெனில் பழைய பாணியில் மிகவும் கவனத்துடன் இன்னிங்ஸை நிதானமாக தொடங்குவோம். பினிஷர்களை நம்பியே ஆட்டத்தின் கடைசி ஓவர்கள் இருக்கும். ஆனால் இப்போது இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறது. நான் அணியின் டி20 அணுகுமுறை குறித்து சொல்கிறேன்.

இது கொஞ்சம் கடினமான சாய்ஸ் தான். டி20 அணியை நான் தேர்வு செய்தால் அதில் கோலிக்கு நிச்சயம் இடமில்லை" என தெரிவித்துள்ளார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE