ரோகித் தலைமையில் இந்திய டி20 அணி தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வென்று சாதனை

By செய்திப்பிரிவு

லண்டன்: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 13 சர்வதேச டி20 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தொடர்ச்சியாக 13 சர்வதேச டி20 போட்டிகளில் வென்ற கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

கடந்த நவம்பர் வாக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார் அணியின் சீனியர் வீரரான ரோகித் சர்மா. அப்போது முதல் அவர் இந்திய அணியின் கேப்டனாக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளை வென்றுள்ளது இந்தியா. இதில் இங்கிலாந்தை தவிர மற்ற அணிகளை ஒயிட் வாஷ் செய்துள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரையும், இலங்கைக்கு எதிராக டி20 மற்றும் டெஸ்ட் தொடரையும் இந்தியா வென்றுள்ளது. அவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 13 சர்வதேச டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது கிரிக்கெட் உலகில் புதிய சாதனையாக அமைந்துள்ளது.

அதேபோல ரோகித் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் வழி நடத்திய அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் (15) இந்தியா வென்றுள்ளது. அவரது இந்த சாதனையை ரசிகர்கள் ட்வீட் போட்டு கொண்டாடி வருகின்றனர். இந்திய அணியின் இந்த செயல்பாடு தொடர்ந்தால் எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் அணிக்கு சாதகமான ரிசல்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE