2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை | இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியை சமன் செய்த இந்தியா

By செய்திப்பிரிவு

ஆம்ஸ்டெல்வீன்: இந்திய மகளிர் ஹாக்கி அணி இங்கிலாந்துக்கு எதிரான 2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை குரூப் சுற்று போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்துள்ளது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

15-வது மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி ஆட்டத்தை சமனில் நிறைவு செய்துள்ளது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் பகுதியில் உள்ள வேகனர் மைதானத்தில் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி கோல் பதிவு செய்தது. தொடர்ந்து 28-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா கோல் பதிவு செய்தார். அதன்பிறகு இரு அணிகளும் மிக தீவிரமாக அடுத்த கோலை பதிவு செய்ய முயற்சி செய்தன. ஆனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் நிறைவு அடைந்தது. அதனால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றுள்ளன.

வரும் 5-ஆம் தேதி சீனா மற்றும் 7-ஆம் தேதி நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது இந்தியா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE