சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஓய்வு

By செய்திப்பிரிவு

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஷார்டர் ஃபார்மெட் கேப்டன் இயன் மோர்கன். கடந்த சில நாட்களாக அவர் ஓய்வு பெற உள்ளதாக பல்வேறு தரப்பில் சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்போது அது உறுதியாகியுள்ளது.

35 வயதான மோர்கன், அயர்லாந்து நாட்டில் பிறந்தவர். 2006 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமானார். அவர் முதன் முதலில் விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி அயர்லாந்து அணிக்காக தான். 2009 ஏப்ரல் வரை அயர்லாந்து அணிக்காக விளையாடி வந்தார். அதே ஆண்டின் மே மாதம் முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாட தொடங்கினார். அப்போது முதல் கடைசியாக நெதர்லாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டி வரையில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்த கேப்டன் என அறியப்படுகிறார் மோர்கன்.

இங்கிலாந்து அணியை சர்வதேச ஒருநாள் (126 போட்டிகளில் 76 வெற்றி) மற்றும் டி20 (72 போட்டிகளில் 42 வெற்றி) கிரிக்கெட் ஃபார்மெட்டுகளில் அதிக போட்டிகளில் வழிநடத்திய கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். அதிக வெற்றி விகிதத்தை தன்னகத்தே வைத்துள்ளவர். கிட்டத்தட்ட பத்து ஆண்டு காலம் இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை கவனித்தவர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 225 போட்டிகளில் விளையாடி 6957 ரன்கள் குவித்துள்ளார். 13 சதங்கள் இதில் அடங்கும். அதே போல டி20 கிரிக்கெட்டில் 115 போட்டிகள் விளையாடி 2458 ரன்கள் எடுத்துள்ளார்.

"மிகுந்த கவனத்துடன் ஆழமாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவு இது. நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இரண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் விளையாடிய வகையில் நான் பாக்கியசாலி என கருதுகிறேன். இங்கிலாந்து அணியின் ஷார்டர் ஃபார்மெட் கிரிக்கெட்டின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. டொமஸ்டிக் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன்" என தெரிவித்துள்ளார் மோர்கன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE