IND vs SA | அரை சதம் விளாசிய தினேஷ் கார்த்திக்; தென்னாப்பிரிக்காவுக்கு 170 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

ராஜ்கோட்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அரை சதம் பதிவு செய்து அசத்தியுள்ளார் தினேஷ் கார்த்திக். இந்திய அணி இந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் நான்காவது போட்டி ராஜ்கோட்டில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, பவுலிங் தேர்வு செய்தார். அதனால் இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இந்திய அணிக்கு பேட்டிங்கில் எதிர்பார்த்த சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. அணி 81 ரன்கள் எடுத்த போது ருதுராஜ், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், பந்த் என டாப் நான்கு பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி இருந்தனர். இதில் கிஷன் மட்டுமே 27 ரன்கள் எடுத்து ஆறுதல் கொடுத்தார். பின்னர் ஐந்தாவது விக்கெட்டிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் இணைந்தனர்.

இருவரும் 33 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தனர். பாண்டியா 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்திருந்தார். 15 ஓவர்கள் முடிவில் இந்தியா வெறும் 96 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் 73 ரன்களை இந்தியா எடுத்தது. அதற்கு தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா உதவினர். 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களை எடுத்தது இந்தியா. இப்போது தென்னாப்பிரிக்க அணி 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது.

இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போது தான் தொடரை சமன் செய்ய முடியும். இல்லையெனில் தொடரை இந்தியா இழந்துவிடும். தற்போது தென்னாப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE