மகளிருக்கான டெஸ்ட் கிரிக்கெட்டை அதிகம் நடத்த வேண்டும்: இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மகளிர் கிரிக்கெட் அணிக்கான டெஸ்ட் போட்டிகளை அதிகம் நடத்த வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். மகளிர் கிரிக்கெட் போட்டி பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை என்றாலும், மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச அளவில் நடைபெற்றுதான் வருகின்றன. எனினும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அளவுக்கு மகளிருக்கான டெஸ்ட் போட்டிகள் அதிகம் நடத்தப்படுவதில்லை.

31 வயதாகும் மிதாலி ராஜ் 148 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால் 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் பங்கேற்க முடிந்தது. மகளிருக்கான டெஸ்ட் போட்டிகள் குறைந்த அளவில் நடத்தப்படுவதே இதற்குக் காரணம்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ் இது குறித்து நேற்று ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு இந்திய மகளிர் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது ஒரே ஒருடெஸ்ட் போட்டியில் பங்கேற்றோம். அந்த போட்டியில் நான் 214ரன்கள் எடுத்தேன். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதுதான் மீண்டும் டெஸ்ட் போட்டியில் நான் விளையாடினேன்.

டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம்தான் வீராங்கனைகள் சிறந்த அனுபவத்தை பெற முடியும். எனவே அதிக டெஸ்ட் போட்டிகளை நடத்த வேண்டுமென்று பிசிசிஐ-க்கு நான் கோரிக்கை வைக்கிறேன்.இந்திய அணியில் விளையாடும் வீராங்கனைகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒப்பந்த முறையை பிசிசிஐ கொண்டு வர வேண்டும்.

தேசிய அணியில் விளையாடும் வீராங்கனைகளுக்கு இதுமாதிரியான ஒப்பந்தம் இல்லாத அணி இந்தியா மட்டும்தான். எனவே மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் கடைப்பிடிக்கும் வீராங்கனைகளுக்கான ஒப்பந்தத்தை பிசிசிஐ-யும் மேற்கொள்ள வேண்டும். போதிய பணிப் பாதுகாப்பு இல்லாமல் தேசிய அணிக்காக விளையாடும் மகளிருக்கு இது உதவிகரமாக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE