ரெய்னா தலைமையில் குஜராத் லயன்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டது, ஆனாலும் பிளே ஆஃப் முதல் போட்டியில் டிவில்லியர்ஸ், நேற்று டேவிட் வார்னர் ஆகியோரால் அந்த அணி இறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் முறையாக சன் ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி, விராட் கோலியின் கோப்பைக் கனவை அச்சுறுத்தியுள்ளது. சன் ரைசர்ஸ் அணியின் வெற்றிக்குக் காரணம் அந்த அணியின் பந்து வீச்சு மற்றும் டேவிட் வார்னரின் அபாரமான விடா முயற்சி பேட்டிங் என்றால் மிகையாகாது.
முதல் பிளே ஆஃபில் குஜராத் வெற்றி வாய்ப்பை 68/6 என்ற நிலையிலிருந்து டிவில்லியர்ஸ், இக்பால் அப்துல்லா தட்டிப் பறிக்க, நேற்று டேவிட் வார்னர், பிபுல் சர்மா குஜராத் கனவைப் பொய்யாக்கினர்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் முதலில் குஜராத் அணியை பேட் செய்ய அழைத்தது. புவனேஷ் குமார், டிரெண்ட் போல்ட், ஆல்ரவுண்டர் பிபுல் ஷர்மா சிறப்பாக வீச, ஏரோன் பிஞ்ச் மட்டுமே 32 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுக்க மெக்கல்லம் 32, தினேஷ் கார்த்திக் 26 ஆகியோர் பங்களிப்புடன் 162/7 என்று ஓரளவுக்கு நல்ல இலக்கை எட்டியது
தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி வார்னர் நீங்கலாக விக்கெட்டுகளை இழந்து 61/2 என்ற நிலையிலிருந்து யுவராஜ் விக்கெட் உட்பட 84/5 என்று சரிவு கண்டது. பிறகு 15.5 ஓவர்களில் ஓஜாவையும் இழந்து 117/6 என்று ஆனது.
ஆனால் வார்னர் மட்டும் ஒருமுனையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தார். 25 பந்துகளில் 46 தேவை என்ற தருணத்தில்தான் பிபுல் சர்மா வார்னருடன் களத்தில் இணைந்தார்.
இவர் ஆல்ரவுண்டர் என்றாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் பேட்டிங் ஆல்ரவுண்டர் என்று அறியப்பட்டாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் இல்லாமலிருந்தது. அன்று எலிமினேட்டரில் கொல்கத்தா அணியின், உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் மோர்னி மோர்கெல் வீசிய கடைசி ஓவரில் அடித்த 2 சிக்சர்கள் பிபுல் சர்மாவின் ஹிட்டிங் பவரை உலகிற்கு எடுத்துரைத்தது. ஒன்று லாங் ஆஃபில் அருமையான சிக்ஸ், 2-வது சிக்ஸ் இன்னும் ஆக்ரோஷமானது, ஷார்ட் பிட்ச் பந்தை குறுக்குவாகு மட்டையுடன் நேராக சிக்ஸ் அடித்தார் பிபுல் சர்மா.
இந்நிலையில் அவர் வார்னருடன் இணைந்த போது எதிர்பார்ப்பு இருந்தது. இவர் இறங்கும் போது வார்னரும் நல்ல மூடில் இல்லை. நமன் ஓஜா அவுட் ஆன விதம் குறித்து அவர் கடும் கோபத்துடன் காணப்பட்டார். ஆனால் பிரவீன் குமாரின் 2 பந்துகளில் இரு இரண்டு ரன்களை அவர் எடுத்தது வார்னருக்கு அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. இடையே பிரவீண் தவறிழைக்க நேராக ஒரு சிக்சரையும் அடித்தார் பிபுல் சர்மா. தவல் குல்கர்னி அடுத்த ஓவரில் யார்க்கர்களை துல்லியமாக வீச 4 பந்துகளில் 1 ரன்னே வந்தது. 14 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்கொயர் லெக் திசையில் பிபுல் ஒரு அபார ஸ்கூப் சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 10 ரன்கள் வந்தது
19-வது ஓவரை பிராவோ வீச வார்னர் முதல் பந்தை சுழற்ற அது எட்ஜ் எடுத்து தேர்ட்மேன் திசையில் பவுண்டரி ஆனது. அடுத்த 2 பந்துகளிலும் வார்னர் வைடு லாங் ஆனில் தட்டி வேகமாக 2 ரன்களையும், மீண்டும் அடுத்த பந்தை பாயிண்டில் அடிக்க பிஞ்சின் அருமையான ஒரு கை தடுப்பினால் மீண்டும் 2 ரன்களையும் எடுத்தார் வார்னர். அடுத்த பந்து வார்னரின் ‘கிளாஸ்’ நிரூபிக்கப்பட்ட ஒன்றானது. வேகம் குறைவான ஷார்ட் பிட்ச் பந்தில் உண்மையில் அவர் ஆட நினைத்த வாகுக்கு வரவில்லை, ஆனால் விரைவில் தனது நிலையை மாற்றிக் கொண்டு பந்தை பாயிண்டில் கட் செய்ய பவுண்டரிக்கு பறந்தது.
அடுத்து 1 ரன் எடுத்து பிபுல் சர்மாவிடம் ஸ்ட்ரைக்கை கொடுக்க, அவர் அமைதியாக பிராவோவின் மிடில் அண்ட் லெக் பந்தை லாங் ஆனில் அனாயச சிக்ஸ் அடித்தார். 19 ரன்கள் வந்தது அந்த ஓவரில். கடைசி ஓவரில் 5 ரன்கள் வெற்றிக்குத் தேவை எனும்போது வார்னர் ஒரு பவுண்டரி, ஒரு சிங்கிள் எடுத்து முடித்து வைத்தார். வார்னர் 58 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 93 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். பிபுல் சர்மா 11 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், இது அருமையான இன்னிங்ஸ் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.
முன்னதாக ஷிகர் தவண் (0), ஹென்ரிக்ஸ் (11), யுவராஜ் சிங் (8), ஹூடா (4), கட்டிங் (8) ஓஜா, (10) ஆகியோர் சோபிக்கவில்லை, குஜராத் அணியில் கவுஷிக், பிராவொ தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
சன் ரைசர்ஸ் 19.2 ஓவர்களில் 163/6 என்று வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் கோலியின் பெங்களூருவைச் சந்திக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago