பாண்டிச்சேரி டி10 கிரிக்கெட் | கடைசி ஓவரில் 24 தேவைப்பட வரிசையாக 4 சிக்ஸர்கள் விளாசிய பேட்ஸ்மேன்

By செய்திப்பிரிவு

துத்திப்பட்டு: பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட, வரிசையாக 4 சிக்ஸர்கள் விளாசி அசத்தியுள்ளார் பேட்ஸ்மேன் ஒருவர். அதன் மூலம் அந்த அணி வெற்றியும் பெற்றுள்ளது.

உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் திறன் படைத்த வீரர்களை வளர்த்தெடுக்கும் களம் என சொல்லலாம். கடந்த காலங்களில் இந்திய அணியில் விளையாடிய பல வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய பிறகே இந்திய அணிக்காக அந்த பணியை தொடர்ந்து செய்திருந்தனர். அந்த வகையில் பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்டு வரும் டி10 தொடர் ஒன்றில் தனது அபார திறனை வெளிப்படுத்தியுள்ளார் அபீஷ் என்ற பேட்ஸ்மேன்.

பாண்டிச்சேரியின் துத்திப்பட்டு பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோரிக்கை வைக்கப்பட்டது. இங்கு டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றும் வருகிறது. பாண்டிச்சேரி அணி பிசிசிஐ நடத்தும் உள்ளூர் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் டி10 கிரிக்கெட் தொடர் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. வரும் ஜூன் 8-ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெறுகிது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் ஈகிள்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் அபீஷ். அவர் நேற்று ஸ்மேஷர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 பந்துகளில் 25 ரன்களை எடுத்து அசத்தினார். இதன் மூலம் அவரது அணி வெற்றியும் பெற்றுள்ளது. அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது ஈகிள்ஸ் அணி.

Loading...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE