சிலிர்ப்பூட்டிய ஆட்டத்தால் நடப்பு சாம்பியன் ஸ்பெயினை வெளியேற்றியது சிலி

By ஆர்.முத்துக்குமார்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி, சிலி அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி வெளியேறியது.

முதல் போட்டியில் நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல் கணக்கில் தோற்க, இன்றைய போட்டியில் சிலி அணி 2-0 என்று அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நெதர்லாந்து மற்றும் தற்போது சிலி அணிகள் அடுத்த சுற்றுக்குத்தகுதி பெற்றுவிட்டது.

மரகனாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிலி அணி முழு ஆதிக்கம் செலுத்தியது. ஸ்பெயின் அணி நிறைய இடைவெளிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

எடுபடாத ஸ்பெயின் உத்தி

அதன் மூகோண வடிவ பாஸ் முறை இந்த உலகக் கோப்பையில் எடுபடாமல் போனது. முக்கோணம் நகர்ந்தால்தானே? அதனை சிலியும் முறியடித்தது. உத்தியை மாற்றியிருக்க வேண்டும்.

மாற்றாமல் அதே ஷார்ட் பாஸ் உத்தியைக் கடைபிடித்தது. இதனால் பந்தின் கட்டுப்பாட்டை அடிக்கடி இழந்ததோடு தங்கள் கோல் பகுதியில் நிறைய இடைவெளிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

உலக சாம்பியன் மற்றும் இரட்டை ஐரோப்பிய சாம்பியன்கள் ஓர் உலக அளவிலான தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறுவது 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன்பாக கோப்பையைக் கையில் பிடித்துத் தூக்கிய கேப்டன் கேசிலாஸ் முகத்தில் ஈயாடவில்லை. பிரேசிலை விடுத்து ஸ்பெயினுக்கு ஆடிய கோஸ்டாவினால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ரசிகர்களின் வசைக்கு ஆளானார்.

சிலிர்க்க வைத்த சிலி

ஸ்பெயின் அணியின் பொற்காலம் உடைக்கப்பட்டது. அதன் வலி ஆட்டம் முடியும்போது அவர்கள் கண்களில் தெரிந்தது. துவக்கத்தில் சுமாராக ஆடிய ஸ்பெயின் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் இடைவெளிகளை உருவாக்கியது.

சிலி வீரர்கள் அலெக்சிஸ் சான்சேஸ், ஆர்ச்சூர்ரோ வைடால், அராங்விஸ் ஆகிய மூவர் கூட்டணி வலதுபுறத்தில் தங்களிடையே பாஸ்களுடன் வேகமாக முன்னேறினர்.

அராங்விஸ் சாதுரியமாக வார்கஸிடம் பந்தை அளித்தார். அவர் ஒரு டச்சில் கேசிலாஸைக் கடந்து எடுத்துச் சென்று கோலுக்குள் அடித்தார். இந்த ஒரு கோல் சிலியின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியது. வேகம், ஆக்ரோஷம், திறன் என்று ஆட்டம் சிலிக்கு சாதகமாக சூடுபிடிக்கத் தொடங்கியது.

இதற்குப் பதிலாக சவால் கொடுக்க முடியாமல் ஸ்பெயின் ஃபவுல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிறைய ஃபவுல்கள் செய்தது. அப்படிப்பட்ட ஒரு எதிர்மறை அணுகுமுறைக் கணத்தில்தான் சிலிக்கு ஃப்ரீ கிக் கிடைக்க 2-வது கோல் அடிக்கப்பட்டது. இதுவே பின்பு வெற்றி கோலாகவும் மாறியது.

அற்புத கோல்

2வது கோல் ஸ்பெயின் அணியின் போதாமைகளை பறை சாற்றியது. ஸ்பெயின் அணியின் கோலை நோக்கி சிலி முன்னேற வலது புறத்த்தில் சிலி வீரர் சான்சேசிடம் பந்து அளிக்கப்படுகிறது. அவர் ஒரே அடியில் கோலாக மாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஸ்பெயின் வீரர் சாபி அலான்சோ (ஸ்பெயினின் ஒரே கோலை அன்று நெதர்லாந்துக்கு எதிராக அடித்தவர்) சான்சேசை முறை தவறி இடையூறு செய்ததாக சிலிக்கு ஃப்ரீ கிக் வழங்கப்பட்டது. சான்சேஸெ ஃப்ரீ கிக்கை எடுத்துக் கொண்டார். ஒரே அடி அடித்தார். பந்து வளைந்து கோல் கீப்பர் கேசிலாஸிடம் செல்ல, அதனை அவர் பிடித்து வைத்துக்கொள்வதற்கு பதிலாக முன்பக்கமாக தள்ளி விட்டுத் தவறு செய்தார். பந்து நேராக சிலி வீரர் அராங்விஸிடம் வர அதனை அபாரமான கோலாக மாற்றினார்.

இதுதான் ஸ்பெயினை வெலியேற்றிய அந்தக்கணத்தின் அற்புத கோல். கேசிலாஸ் செய்த தவறு பந்தை பிடிக்காமல் தள்ளிவிட்டது. அதுவும் தள்ளி விடும்போது குறிபார்த்து சிலி வீரரிடம் தள்ளிவிட்டது!

அதன் பிறகு ஸ்பெயின் சில பல மூவ்களைச் செய்தாலும் ஆட்டம் கைவிட்டுப் போனதை அவர்கள் அறிந்தனர். அவர்களே எப்போது இறுதி விசில் ஊதப்படும் என்று காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.

ஆதிக்கத்தை முடித்த விசில்

ஸ்பெயினின் வலியைக் குறைக்கும் அந்த இறுதி விசிலும் ஊதப்பட்டது. அது ஸ்பெயினின் வெளியேற்றத்தை அறிவிக்கும் விசில் என்பதோடு ஸ்பெயினின் ஆதிக்கத்தை முடிக்கும் விசிலாகவும் அமைந்தது.

4 ஆண்டுகளுக்கு முன்பு சாவி (Xavi) வளர்த்தெடுத்த அணி, ஆனால் இன்று அவர் விளையாட முடியாமல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு தன் அணி வெளியேறியதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டது. அவரது காயமும் ஸ்பெயின் அணியின் இத்தகைய நிலைமைக்கு ஒரு வகையில் காரணமானது.

ஸ்பெயினின் சரிவை ஆங்கில ஊடகங்கள் "ஒரு ஆதிக்கத்தின் முடிவு" என்று கேட்பதற்கு வருத்தம் காண்பிப்பது போன்ற, ஆனால் உள்ளுக்குள் மகிழ்ச்சியுடன் எழுதி வருகின்றன.

ஏதோ இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்ல ஸ்பெயின் மட்டுமே இடையூறாக இருந்ததுபோல் அவர்களுக்கு ஒரு நினைப்பு.

எது எப்படியிருந்தாலும் சிலி அணி ஓர் அபாயகரமான அணியாக மாறியுள்ளதை மற்ற அணிகள் அடுத்த சுற்று ஆட்டங்களின் போது கவனத்தில் கொள்வதே நல்லது.

ஸ்பெயின் ரசிகர்கள் கண்களில் கண்ணீரும் அதிர்ச்சியும் இரண்டறக் கலந்து வெளிப்பட்டது. ஸ்பெயின் வீரர்கள் உடல்மொழி உண்மையான தோல்விகளைச் சந்தித்த இயலாமையை வெளிப்படுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்