2-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1934-ம் ஆண்டு மே 27 முதல் ஜூன் 10-ம் தேதி வரை இத்தாலியில் நடைபெற்றது. இதுதான் ஐரோப்பா கண்டத்தில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை.
உருகுவேயில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பை போட்டியை ஐரோப்பிய நாடுகள் புறக்கணித்ததன் எதிரொலியாக 2-வது உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க நடப்பு சாம்பியன் உருகுவே மறுத்துவிட்டது. இன்றளவிலும் நடப்பு சாம்பியன் விளையாடாத ஒரே உலகக் கோப்பை இத்தாலியில் நடைபெற்ற 2-வது உலகக் கோப்பைதான்.
இந்த உலகக் கோப்பையில்தான் முதல்முறையாக தகுதிச்சுற்று நடத்தப்பட்டது. இத்தாலி அணியும் தகுதிச்சுற்றில் விளையாடியே பிரதான சுற்றுக்கு முன்னேறியது. போட்டியை நடத்தும் நாடு தகுதிச்சுற்றில் விளையாடிய ஒரே உலகக் கோப்பை இதுதான். இதன்பிறகு நடைபெற்ற எல்லா உலகக் கோப்பைகளிலுமே போட்டியை நடத்தும் நாடு தகுதிச்சுற்றில் விளையாடாமலேயே நேரடித்தகுதி பெற்றது.
முதல் ஆப்பிரிக்க அணி
32 நாடுகள் பங்கேற்ற தகுதிச்சுற்று, கண்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட்டன. தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த பெரு மற்றும் சிலி அணிகள் தகுதிச்சுற்றில் இருந்து விலகியதால் ஆர்ஜென்டீனாவும், பிரேசிலும் தகுதிச்சுற்றில் விளையாடாமலேயே உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
ஐரோப்பாவில் இருந்து 12 அணிகளும், அமெரிக்க கண்டத்தில் இருந்து பிரேசில், ஆர்ஜென்டீனா, அமெரிக்கா ஆகிய 3 அணிகளும், ஆப்பிரிக்காவில் இருந்து எகிப்து அணியும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றன. இதன்மூலம் உலகக் கோப்பையில் பங்கேற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையைப் பெற்றது எகிப்து.
10 புதிய அணிகள்
முதல் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய 6 அணிகள் மட்டுமே 2-வது உலகக் கோப்பையில் விளையாடின. எஞ்சிய அணிகளான இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து, ஹங்கேரி, செக்கோஸ்லோவேகியா, ஸ்வீடன், ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, எகிப்து ஆகிய 10 அணிகளும் முதல்முறையாக உலகக் கோப்பையில் விளையாடின. எகிப்து அணி இந்த உலகக் கோப்பைக்கு பிறகு 1990-வரை உலகக் கோப்பையின் பிரதான சுற்றுக்கு தகுதி பெறவில்லை. 1990-ல் மீண்டும் இத்தாலியில் உலகக் கோப்பை நடைபெற்றபோதுதான் பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. முதல் உலகக் கோப்பை உருகுவே தலைநகர் மான்டிவிடியோவில் மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் 2-வது உலகக் கோப்பை போட்டி இத்தாலியின் 8 நகரங்களில் நடைபெற்றது.
பெனால்டி ஷூட் இல்லாத நாக் அவுட்
இந்த உலகக் கோப்பை நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டது. ஆனால் அப்போது வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்படவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி டிராவில் முடிந்தால், வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் டிராவானால், வெற்றியைத் தீர்மானிக்க அடுத்த நாளில் மீண்டும் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியை நடத்திய இத்தாலி அணி தனது முதல் ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. முதல் உலகக் கோப்பையில் தென் அமெரிக்கா நாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் 2-வது உலகக் கோப்பையில் எந்த அமெரிக்க அணியும் முதல் சுற்றை தாண்டவில்லை.
ஐரோப்பா ஆதிக்கம்
2-வது சுற்றுக்கு ஐரோப்பிய அணிகள் மட்டுமே முன்னேறின. உருகுவே அணி போட்டியில் பங்கேற்காதது, முதல் உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவரும், அதிக கோலடித்தவருமான கில்லர்மோ போன்றவர்கள் ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்ததால் அந்த அணி முழுமையாக மாற்று ஆட்டக்காரர்களோடு ஆடியது ஆகியவையும் ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம் செலுத்தியற்கு காரணம்.
ஆக்ரோஷமான காலிறுதி
இத்தாலி-ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு பிறகும் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மிக ஆக்ரோஷமாக ஆடப்பட்ட இந்த ஆட்டத்தில் இரு அணி தரப்பிலும் பல வீரர்கள் காயமடைந்தனர். இதில் காயமடைந்த ஸ்பெயின் கோல் கீப்பர் ரிக்கார்டோ சமோராவால், வெற்றியைத் தீர்மானிப்பதற்காக மீண்டும் நடத்தப்பட்ட மாற்று காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது. அதேநேரத்தில் ஸ்பெயின் வீரர்களின் ஆக்ரோஷ ஆட்டத்தில் சிக்கி காலை முறித்துக் கொண்ட இத்தாலி வீரர் மரியோ பிஸியோலோ, தன் வாழ்நாள் முழுவதும் கால்பந்து விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
இத்தாலி சாம்பியன்
பின்னர் நடைபெற்ற மாற்று காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் 3 ஸ்பெயின் வீரர்கள் காயமடைந்து களத்தில் இருந்து வெளியேறினர். இதையடுத்து நடைபெற்ற அரையிறுதியிலும் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவைத் தோற்கடித்த இத்தாலி, தனது இறுதிச்சுற்றில் செக்கோஸ்லோவேகியாவை சந்தித்தது. அந்த அணி தனது அரையிறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் 80 நிமிடங்கள் முடிந்திருந்தபோது செக்கோஸ்லோவேகியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் இத்தாலி கோலடிக்க, வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் 95-வது நிமிடத்தில் கோலடித்த இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு சாம்பியன் ஆனது. இதன்மூலம் உலகக் கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற வரலாற்றைப் படைத்தது.
கலக்கியவர்கள்
1934 உலகக் கோப்பை போட்டியில் இத்தாலியின் ராய்முன்டோ ஆர்சி, ஏஞ்ஜெலோ ஷியாவியோ, கியூசெப்பி மெஸ்ஸா ஆகியோர் தங்களின் அபார ஆட்டத்தால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டனர். ஸ்பெயின் கோல் கீப்பர் ரிக்கார்டோ சமோரா, செக்கோஸ்லோவேகியாவின் ஸ்டிரைக்கர் ஆல்ட்ரிச் நிஜெட்லி ஆகியோரும் அந்த உலகக் கோப்பையின் மறக்க முடியாத வீரர்கள் ஆவர்.
குறைந்தபட்ச கோல் சாதனை
இத்தாலி அணி 5 போட்டிகளில் விளையாடி 3 கோல்களை மட்டுமே வாங்கியிருந்தது. இது உலகக் கோப்பை போட்டியில் கோப்பையை வென்ற அணிகள் வாங்கிய குறைந்தபட்ச கோல் சாதனையாக இருந்தது. 1966-ல் இங்கிலாந்தும், 1994-ல் பிரேசிலும் இந்த சாதனையை சமன் செய்தன. ஆனால் 1998, 2006, 2010-ம் ஆண்டுகளில் முறையே சாம்பியனான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் அணிகள் தலா இரு கோல்களை மட்டுமே வாங்கி, எதிரணியிடம் குறைந்தபட்ச கோல் வாங்கிய அணி என்ற புதிய சாதனையை படைத்தன.
இறுதியாட்டத்தில் இரு முறை ஆடியவர்
2-வது உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணிக்காக விளையாடிய மிட்பீல்டர் லூயிஸ் மான்டி, முதல் உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவுக்காக விளையாடினார். அதில் ஆர்ஜென்டீனா இறுதிச்சுற்று வரை முன்னேறியது. இதன்மூலம் இரு அணிகளுக்காக இரு உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் விளையாடியவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
1934 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்
17 மொத்த ஆட்டங்கள்
70 மொத்த கோல்கள்
4.12 ஒரு போட்டிக்கு சராசரி கோல்
1ரெட் கார்டு, 0 ஓன் கோல்
3,95,000 மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை
டாப் ஸ்கோர்
5 கோல்கள்: ஆல்ட்ரிஜ் நெஜெட்லி (செக்கோஸ்லோவேகியா)
4 கோல்கள்: ஏஞ்ஜெலோ ஷியாவியோ (இத்தாலி)
4 கோல்கள்: எட்மன்ட் கானென் (ஜெர்மனி)
3 கோல்கள்: ராய்முன்டோ ஆர்சி (இத்தாலி)
3 கோல்கள்: லியோபால்ட் கீல்ஹோல்ஸ் (ஸ்விட்சர்லாந்து)
உங்களுக்கு தெரியுமா?
இதுவரை 19 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவையனைத் திலும் விளையாடிய ஒரே அணி பிரேசில். அதற்கடுத்தபடியாக இத்தாலி, ஜெர்மனி ஆகியவை தலா 17 முறையும், ஆர்ஜென்டீனா 15 முறையும், மெக்ஸிகோ 14 முறையும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தலா 13 முறையும், பெல்ஜியம், ஸ்வீடன், செர்பியா/யூகோஸ்லேவியா, உருகுவே ஆகியவை தலா 11 முறையும் உலகக் கோப்பையின் பிரதான சுற்றில் விளையாடியுள்ளன.
வரலாற்று நாயகன் கியூசெப்பி மெஸ்ஸா
இத்தாலி கால்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுவர் கியூசெப்பி மெஸ்ஸா. 1934-ல் இத்தாலி அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்.
இத்தாலியின் மிலன் நகரில் பிறந்தவரான மெஸ்ஸா, 1927-ம் ஆண்டு தனது 17-வது வயதில் மிலன் அணிக்காக ஸ்டிரைக்கராக விளையாடத் தொடங்கினார். 1929-30 சீசனில் இத்தாலி லீக்கில் 33 கோல்களை அடித்த அவர், அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். இதேபோன்று மேலும் இரு முறை சாதனை படைத்த அவர், 1930-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக ஆடியதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அடியெடுத்து வைத்தார். அறிமுகப் போட்டியிலேயே இரு கோல்களை அடித்த அவர், 1939 வரை கொடிகட்டிப் பறந்தார்.
தாய்நாட்டுக்காக 53 சர்வதேச போட்டிகளில் 33 கோல்களை அடித்ததோடு, 1934-ல் இத்தாலி உலகக் கோப்பையை வெல்லவும் முக்கியக் காரணமாக இருந்தார். 1938-ல் பிரான்ஸில் நடைபெற்ற 3-வது உலகக் கோப்பையில் மெஸ்ஸா தலைமையிலான இத்தாலி கோப்பையை வென்றது.
இதன்பிறகு காயத்தால் அவதிப்பட்ட மெஸ்ஸா, 1939-ல் ஏசி மிலன் அணிக்காக இத்தாலி லீக்கில் விளையாட ஆரம்பித்தார். இதன்பிறகு ஜுவென்டஸ் மற்றும் வர்சி அணிகளுக்காக சிறப்பு அழைப்பு வீரராக விளையாடிய அவர், 1945-ல் அட்லாண்டா கிளப்புக்காக ஆடினார். அதோடு அவருடைய கால்பந்து பயணம் முடிந்தது.
இத்தாலி சீரி ஏ லீக்கில் மட்டும் 440 போட்டிகளில் விளையாடி 269 கோல்களை அடித்த மெஸ்ஸா 1979-ம் ஆண்டு தனது 69-வது வயதில் காலமானார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago