லிவிங்ஸ்டன். 
விளையாட்டு

IPL 2022 | லிவிங்ஸ்டன் அதிரடி: ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்

செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

நடப்பு ஐபிஎல் சீசனின் 70-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார், பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக அபிஷேக் ஷர்மா (43 ரன்கள்), ரோமாரியோ ஷெப்பர்ட் (26 ரன்கள்), வாஷிங்டன் சுந்தர் (25 ரன்கள்), மார்க்ரம் (21 ரன்கள்), ராகுல் திரிபாதி (20 ரன்கள்) எடுத்திருந்தனர்.

பஞ்சாப் அணிக்காக ஹர்ப்ரீத் பிரார், 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். அதே போல நாதன் எல்லிஸ் 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ரபாடா, 1 விக்கெட் எடுத்திருந்தார்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் விரட்டியது. அந்த அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. பேர்ஸ்டோ, ஷிகர் தவான், ஷாருக்கான், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி இருந்தனர். லிவிங்ஸ்டன், 22 பந்துகளில் 49 ரன்களை எடுத்திருந்தார். 15.1 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது பஞ்சாப்.

நடப்பு சீசனில் லீக் சுற்று ஆட்டங்கள் இந்த போட்டியுடன் நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 70 லீக் போட்டிகளில் 10 அணிகளும் விளையாடி உள்ளன. புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களை பெற்ற குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

SCROLL FOR NEXT