நிகத் ஜரீன். 
விளையாட்டு

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் | தங்கம் வென்றார் இந்தியாவின் நிகத் ஜரீன்; யார் இவர்?

செய்திப்பிரிவு

இஸ்தான்புல்: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை தட்டித் தூக்கியுள்ளார் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன்.

இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்கை (Jutamas Jitpong) 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் நிகத். இதன் மூலம் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஐந்தாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி மற்றும் லேகா ஆகிய இந்திய வீராங்கனைகள் இந்த பட்டத்தை வென்றுள்ளனர். 52 கிலோ எடைப் பிரிவில் இந்த தங்கத்தை வென்றுள்ளார் நிகத்.

யார் இவர்?: 25 வயதான நிகத் ஜரீன், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர். அவரது அப்பா முகமது ஜமீல் அகமது தான் குத்துச்சண்டையை அறிமுகம் செய்துள்ளார். அவர் வளைகுடா நாடுகளில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். முதல் ஓராண்டு குத்துச்சண்டை விளையாட்டின் அடிப்படை பாடத்தை அப்பாவிடம் தான் கற்றுள்ளார். தொடர்ந்து இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சிக்கு இணைந்துள்ளார்.

மகளிர் குத்துச்சண்டையில் நிகத் பெரிய அளவில் சாதிப்பார் என முடிவு செய்தது தெலங்கானாவில் குத்துச்சண்டை பயிற்சி கொடுத்த ஷம்சம்சுதீன். சிறு வயதில் நிகத் வசம் இருந்த தீரம் மற்றும் மனோபாவம் தான் அதற்கு காரணம் என தெரிகிறது.
15 வயதில் இதே துருக்கியில் ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் ஃப்ளைவெயிட் பிரிவில் தங்கம் வென்றார். தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று வருகிறார். 2019 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார் நிகத்.

பிப்ரவரியில் நடைபெற்ற ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று அசத்தி இருந்தார் நிகத். இப்போது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT