சர்வதேச மகளிர் டென்னிஸ் சென்னையில் நடைபெறுகிறது - முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் கடிதம் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்துவதற்கான தமிழக அரசின் கொள்கை அளவிலான இசைவு கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக, மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. 186 நாடுகளில் இருந்து 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசு - இந்திய சதுரங்க கூட்டமைப்பு (AICF) இடையே இப்போட்டிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்.26 முதல் அக்.2-ம் தேதி வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடக்க உள்ளது. இதற்கான தமிழக அரசின் கொள்கை அளவிலான இசைவு கடிதத்தை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலர் இறையன்பு, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அபூர்வா, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் இரா.ஆனந்தகுமார், சதுரங்கப் போட்டிக்கான சிறப்பு அலுவலர் டாக்டர் தாரேஸ் அஹமது, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், செயலர் பரத் சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE