செர்ஜியோ அகுரோ | புகழ்மிக்க வீரருக்கு சிலை நிறுவிய மான்செஸ்டர் சிட்டி அணி

By செய்திப்பிரிவு

மான்செஸ்டர்: மான்செஸ்டர் சிட்டி கால்பந்தாட்ட கிளப் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான செர்ஜியோ அகுரோவுக்கு சிலை நிறுவியுள்ளது அந்த அணி. இது கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அர்ஜென்டினாவை சேர்ந்தவர் கால்பந்தாட்ட வீரர் செர்ஜியோ அகுரோ. 2011 முதல் 2021 வரையில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக அவர் விளையாடினார். அகுரோ, மொத்தம் 184 கோல்களை இந்த அணிக்காக பதிவு செய்துள்ளார். அது தவிர அர்ஜென்டினா அணிக்காக 41 கோல்களை பதிவு செய்துள்ளார். அவரது பெயரை சொன்னாலே 2011-12 பிரீமியர் லீக் தொடரின் கடைசி போட்டியில் அவர் பதிவு செய்த கோல் தான் ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும்.

அந்த அளவுக்கு அந்த கோல் ஃபேமஸ். சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே 13, 2012) அந்த கோலை பதிவு செய்தார் அகுரோ. அந்த போட்டியில் ஆட்டத்தின் 93:20 நிமிடத்தில் அவர் அந்த கோலை பதிவு செய்தார். அதன் மூலம் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மான்செஸ்டர் சிட்டி. அதனை கொண்டாடும் விதமாக மைதானத்தில் தான் அணிந்திருந்த மேலாடையை கழட்டி, சுழற்றி கொண்டாடி இருந்தார் அகுரோ. அது அந்த அணியின் ரசிகர்கள் ஒவ்வொருவராலும் மறக்க முடியாத கொண்டாட்டமாகும்.

இப்போது அந்த கொண்டாட்ட தருணத்தை அப்படியே ஒளிப்படம் எடுத்து வைத்தது போல சிலையாக நிறுவியுள்ளது மான்செஸ்டர் சிட்டி. அந்த அணியின் சொந்த மைதானமாக கருதப்படும் Etihad மைதானத்தில் துருப்பிடிக்காத இரும்பினை கொண்டு சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை விருது பெற்ற சிலை வடிவமைப்பாளர் ஆண்டி ஸ்காட் வடிவமைத்தார். இந்த சிலை அந்த அணியின் நிர்வாகிகளுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE