IPL 2022 | சிஎஸ்கே அணியின் அப்பீலை அடுத்து முடிவை மாற்றிய நடுவர்; ட்ரோல் செய்த ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முறையீட்டை தொடர்ந்து தனது முடிவை மாற்றிக் கொண்ட நடுவரை பங்கம் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது சென்னை. இந்த போட்டியில் இரு அணிகளும் மொத்தம் 21 ஓவர்கள் தான் விளையாடின என்பதும் குறிப்பிடத்தக்கது.

98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை விரட்டிய மும்பை அணி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான அந்த சூழலில் பலமான கூட்டணி அமைத்தனர் திலக் வர்மா மற்றும் ஹிருத்திக் ஷோக்கீன். பவர் பிளேயின் கடைசி ஓவரை சிமர்ஜித் சிங் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ஹிருத்திக் ஷோக்கீன், இறங்கி வந்து ஆட முயன்றார். ஆனாலும் அதை மிஸ் செய்திருந்தார் அவர். அதற்கு வொய்ட் சிக்னல் கொடுக்க முயன்றார் நடுவர் சிர்ரா ரவிகாந்த் ரெட்டி. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அப்பீல் செய்தனர். அதையடுத்து தனது முடிவை மாற்றிக் கொண்ட நடுவர், அவுட் என அறிவித்தார்.

இருந்தாலும் DRS ரிவ்யூ எடுத்து தப்பினார் ஹிருத்திக் ஷோக்கீன். தொடர்ந்து ரசிகர்கள் அதனை ட்ரோல் செய்திருந்ததை பார்க்க முடிந்தது. மோசமான அம்பயரிங், நல்ல வேளையாக DRS ரிவ்யூ வேலை செய்தது, நடுவர் அவுட் என அறிவிக்க காரணமே தோனி தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தனர்.

முன்னதாக, இந்த போட்டியில் மின்தடை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டெவான் கான்வே, DRS ரிவ்யூ ஆப்ஷனை எடுக்க முடியாமல் வெளியேறினார். அது சர்ச்சையாக எழுந்திருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE