மருத்துவ ஆலோசனையின் படியே ஜடேஜா விடுவிக்கப்பட்டுள்ளார்; வேறெதுவும் இல்லை - சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன்

By செய்திப்பிரிவு

மும்பை: "மருத்துவ ஆலோசனையின் படியே ஜடேஜா விடுவிக்கப்பட்டுள்ளார். மற்றபடி வேறெதுவும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.

நடப்பு ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடாமல் விலகியுள்ளார் சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் ஜடேஜா. இந்த சீசன் தொடங்கிய போது கேப்டனாக நியமிக்கப்பட்டார் அவர். இருந்தாலும் அவரது தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற தவறியது. அதனால் கேப்டன் பொறுப்பை தோனி வசம் ஒப்படைத்தார். பின்னர் அணியில் வீரராக விளையாடினார். கடந்த போட்டியை காயம் காரணமாக மிஸ் செய்தார். இப்போது அந்த காயத்தால் தொடரை விட்டு விலகி உள்ளார்.

இந்நிலையில், அவரது விலகல் குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்தை சொல்லி வருகின்றனர். ஜடேஜாவுக்கும், அணி நிர்வாகத்திற்கும் கருத்து முரண் என கூட சொல்லப்பட்டது. இப்படி பல்வேறு கருத்துகள் நிலவி வரும் சூழலில் அது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் காசி விஸ்வநாதன்.

"சமூக வலைதளங்களில் நான் எதையும் ஃபாலோ செய்வது கிடையாது. எங்களுக்குள் எந்த சிக்கலும் இல்லை என்பதை நிர்வாகத்தின் தரப்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைதளத்தில் உள்ளது குறித்து எனக்கு தெரியாது. ஜடேஜா எப்போதும் சிஎஸ்கே அணியின் எதிர்கால திட்டங்களில் இருக்கிறார்.

பெங்களூருக்கு எதிரான போட்டியில் அவர் காயமடைந்தார். டெல்லிக்கு எதிராக அவர் விளையாடவில்லை. மருத்துவ ஆலோசனையின் படியே ஜடேஜா விடுவிக்கப்பட்டுள்ளார். மற்றபடி வேறெதுவும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார் காசி விஸ்வநாதன்.

சென்னை அணி தற்போது மும்பை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் 59-வது லீக் போட்டியில் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE