IPL 2022 | கேட்ச் மிஸ், சொதப்பல் பவுலிங் - ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி அணி

By செய்திப்பிரிவு

ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஓப்பனிங் செய்த பட்லர் ஜெய்ஸ்வால் இணை. பட்லர் இம்முறை ஏழு ரன்களுக்கே நடையைக்கட்டினார். சிறிதுநேரம் தாக்குப்பிடித்த ஜெய்ஸ்வாலும் 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். எனினும் சர்ப்ரைஸாக தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் இன்றைய போட்டியில் பேட்ஸ்மேனாக ஜொலித்தார்.

கடந்த சில போட்டிகளாகவே முன்வரிசை வீரராக சோதனை முயற்சியில் களமிறங்கிய அஸ்வின், இன்று அதில் வெற்றிகண்டார். டெல்லி பவுலர்களை எளிதாக சமாளித்து ஆடிய அவர் 38 பந்துகளில் அரைசதம் எடுத்தார். 50 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார். அவருக்கு பக்க பலமாக தேவ்தத் படிக்கல் 48 ரன்கள் எடுக்க, இருவர் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே ஸ்ரீகர் பரத் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். முதல் ஓவரிலேயே சரிவை சந்தித்த அந்த அணியை மீட்டெடுத்தனர் ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னரும், மிச்சேல் மார்ஷ் இருவரும். அவர்கள் மீட்டெடுத்தார்கள் என்பதைவிட மீட்டெடுக்க, ராஜஸ்தான் பீல்டர்கள் வழி செய்தார்கள் எனலாம். ஏனென்றால், நிறைய கேட்ச்களை இருவருக்குமே கோட்டைவிட்டனர். இதனால், இருவருமே ராஜஸ்தான் பவுலர்களை துவம்சம் செய்தனர்.

இருவரும் சேர்ந்து மட்டுமே 144 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தனர். 89 ரன்கள் எடுத்திருந்த மார்ஷ் சஹால் ஓவரில் இரண்டாவது விக்கெட்டாக நடையை கட்டினார். இறுதியில் 18.1 ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை எட்டியது டெல்லி கேபிட்டல்ஸ். வார்னர் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்து 52 ரன்கள் சேர்த்தார். 8 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 6 வெற்றி 6 தோல்வி உடன் 5வது இடத்தில் உள்ளது டெல்லி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE