மாட்ரிட் ஓபன் தோல்வி | 'நேற்று, நான் காலை 5:20 மணிக்குதான் தூங்கச் சென்றேன்' - அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்

By செய்திப்பிரிவு

மாட்ரிட்: 'நேற்று, நான் காலை 5:20 மணிக்கு தான் தூங்க சென்றேன்' என்று மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றவர் ஜெர்மன் நாட்டு வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ். 25 வயதான அவர் தொடர்ச்சியாக டென்னிஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி வீரர்களுக்கு கடுமையான சவால் கொடுத்து வருகிறார். டென்னிஸ் வீரர்களுக்கான சர்வதேச ரேங்கிங் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்நிலையில், ATP தொடருக்கான போட்டிகள் நடத்தப்படும் நேரத்தை விமர்சித்துள்ளார் அவர்.

"இரு தினங்களுக்கு முன்னர் நான் அதிகாலை 04:30 மணி அளவில்தான் தூங்கச் சென்றேன். நேற்று காலை 05:20 மணி அளவில்தான் தூங்கச் சென்றேன். இப்படி போட்டிகள் அனைத்தும் பின்னிரவு நேரங்களில் மிகவும் தாமதமாக நடத்தப்பட்டது. அதனால் எனக்கு போதிய தூக்கம் இல்லை.

நான் ரோபோ கிடையாது. நான் சாதாரண மனிதன். இந்தப் போட்டி சிறந்த போட்டியாக அமைந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு உலகின் சிறந்த வீரர் கார்லோஸ் அல்கரஸ் தான். அவர் இறுதிப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி இருந்தார். நான் அனைத்திலும் பின்தங்கி இருந்தேன். ஒரு சிறந்த வீரருக்கு எதிராக விளையாடும் போது நம் கை ஓங்கி இருக்க வேண்டும். ஆனால், நான் பின்தங்கி இருந்தேன். நான் இந்த போட்டியில் பிழைகள் மேற்கொண்டிருந்தேன்" என போட்டி திட்டமிடலை கடுமையாக சாடியுள்ளார் ஸ்வெரேவ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE