டிவில்லியர்ஸ் அதிரடியில் குஜராத்தை வீழ்த்தி இறுதியில் நுழைந்தது பெங்களூரு!

By இரா.முத்துக்குமார்

பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் முதல் பிளே ஆஃப் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 158 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி விராட் கோலி, ராகுல் ஆகியோரை அவர்கள் ரன் எடுக்கும் முன்னரே இழந்து 29/5 என்றும், பிறகு 68/6 என்றும் பின்னடைவு நிலை கண்டது. ஆனால் டிவில்லியர்ஸ் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 47 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் 159 என்ற வெற்றி இலக்கை எட்ட உதவினார்.

நிறைய போட்டிகள் ஆடப்பட்டதால் பிட்ச் பேட்டிங்குக்குச் சாதக நிலையை இழக்காவிட்டாலும் கொஞ்சம் மந்தமடைந்தது. குஜராத் லயன்ஸ் முதலில் பேட் செய்தபோது இடது கை சுழற்பந்து வீச்சாள இக்பால் அப்துல்லா, 2-வது ஓவரில் ஏரோன் பிஞ்ச், மெக்கல்லம் ஆகியோரை விரைவில் வீட்டுக்கு அனுப்பினார்.

ரெய்னா வழக்கம் போல் வாட்சனின் ஷார்ட் பிட்ச் பந்தை ஆட முடியாமல் ஷார்ட் ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 9/3 என்று மோசமான தொடக்கம் கண்டது. பிறகு டிவைன் ஸ்மித் அற்புதமான இன்னிங்ஸை ஆடினார். இக்பால் அப்துல்லாவை 2 பவுண்டரி அடித்த அவர் கிறிஸ் ஜோர்டானை ஒரு ஹூக் சிக்ஸ் அடித்தார். ஆனாலும் முதல் 6 ஒவர்களில் 23 ரன்களையே எடுத்ததால் டிவைன் ஸ்மித் அடிக்கு ஏற்ப ரன் விகிதம் உயர முடியவில்லை.

10-வது ஓவரில் தினேஷ் கார்த்திக், டிவைன் ஸ்மித் 16 ரன்களை அடித்தாலும் ரன் விகிதம் 6 ரன்களுக்கு சற்று கீழ்தான் இருந்தது. பிறகு இக்பால் அப்துல்லா வீசிய 13-வது ஓவரில் 17 ரன்கள் விளாசப்பட்ட போதும் கூட ரன் விகிதம் ஓவருக்கு 7 ரன்களுக்குக் கீழ்தான் இருந்தது. காரணம் கார்த்திக் 30 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களையே எடுத்தார். இருவரும் இணைந்து 10 ஓவர்களில் 4-வது விக்கெட்டுக்காக 85 ரன்களைச் சேர்த்தாலும், கார்த்திக் மெதுவாக ஆடியதால் 14 ஓவரில் கூட 7 ரன்களுக்குக் குறைவாக 94 ரன்களில்தான் இருந்தது. அப்போது தினேஷ் கார்த்திக் ஜோர்டான் பந்தில் பவுல்டு ஆனார்.

ஜடேஜா 16-வது ஓவரில் காலியானார், டிவைன் ஸ்மித் இரண்டு லெக் திசை சிக்சர்களை அடித்த பிறகு 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்து 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

19-வது ஓவரை வாட்சன் வீச வந்தார், திவேதி அவரை ஒரு மிட்விக்கெட் புல் ஷாட் சிக்ஸ் பிறகு ஒரு அருமையான எக்ஸ்ட்ரா கவர் சிக்ஸரை அடித்து அதிரடி காட்டினார், ஆனால் அவர் அடுத்த பந்தில் கோலியின் கேட்சுக்கு வீழ்ந்தார். அடுத்த பந்திலேயே டிவைன் பிராவோ 8 ரன்களில் வாட்சனிடம் பவுல்டு ஆனார்.

தவல் குல்கர்னி இறங்கி அதே ஓவரில் 2 பவுண்டரிகளை அடிக்க அந்த ஓவரில் 21 ரன்கள் வந்தது. வாட்சன் முதல் 3 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்தவர் கடைசி ஓவரில் 21 ரன்கள் மூலம் 4 ஓவர்களில் 29 ரன்களுக்க்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குஜராத் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தவல் குல்கர்னி அபாரம், கோலி பூஜ்ஜியம்:

இலக்கை துரத்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு களமிறங்கிய போது கோலி ரன் எடுக்காமல் தவல் குல்கர்னி பந்தை காலை நகர்த்தாமல் கட் செய்ய முயன்று உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார், ரசிகர்கள் அமைதியடைந்தனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கோலி அடிக்கும் டக் ஆகும் இது. கிறிஸ் கெயிலுக்கு அருமையான சில ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி அவரை முன்னால் வந்து ஆட விடாமல் செய்தார் குல்கர்னி, ஒரு அபார பவுன்சர் கெயில் ஹெல்மெட்டில் கம்பியிலும் பட்டு அவரை வெறுப்பேற்றியது.

இந்நிலையில், திடீரென வேகம் குறைந்த பந்து ஒன்றை வீச அவர் பொறுமை இழந்து சுற்றி பவுல்டு ஆனார். அடுத்த பந்திலேயே ராகுலுக்கு நல்ல அளவில் ஒரு அவுட்ஸ்விங்கரை வீச எட்ஜ் செய்து ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குல்கர்னி 2-1-5-3.

வாட்சன் பந்து வருவதற்கு முன்னாலேயே ஸ்லாக் ஸ்வீப் ஆட முயன்று ஜடேஜாவிடம் 1 ரன்னிற்கு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு சச்சின் பேபி ரன் எடுக்காத நிலையில் குல்கர்னி பந்தில் தளர்வான ஒரு ஷாட்டை ஆடி எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 6-வது ஓவரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 29/5. குல்கர்னி 3-1-8-4.

அதன் பிறகு ஸ்டுவர்ட் பின்னி துணை கொடுக்க அடுத்த 4 ஓவர்களில் 39 ரன்களை டிவில்லியர்ஸும், இவரும் சேர்த்து ஸ்கோரை 10-வது ஓவரில் 68 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது நடுவர் சவுத்ரியின் மோசமான தீர்ப்புக்கு ஜடேஜாவிடம் பின்னி 21 ரன்களில் எல்.பி.ஆனார். பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி பின்னியின் பேடைத் தாக்கும் போது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேதான் இருந்தது. இவர் நேற்று படுமோசமாக நடுவர் பணியாற்றினார். ஆனால் பின்னி அவுட் ஆகும் முன்பு இடது கை ஸ்பின்னர் ஜகாதியை 2 பவுண்டரி ஒருசிக்சரை ஒரே ஓவரில் அடித்தார்.

டிவில்லியர்ஸின் அதிரடி:

10 ஓவர்களில் 89 ரன்கள் தேவை என்ற நிலையில் இக்பால் அப்துல்லா, டிவில்லியர்ஸுடன் இணைந்தார். 11-வது ஓவரில் ஜடேஜா நோ-பாலுக்குப் பிறகான பந்தை டிவில்லியர்ஸ் நேராக சிக்ஸ் அடித்தார். ஆனால் அதன் பிறக் டிவைன் பிராவோ, ஜடேஜா ஆகியோர் சிக்கனமாக வீச 13, 14-ம் ஓவர்களில் மொத்தம் 7 ரன்களே வந்தது.

36 பந்துகளில் 63 ரன்கள் தேவை. 15-வது ஓவரை வீச ஸ்மித் வந்தார். டிவில்லியர்ஸ் மேலேறி வந்து ஒரு பவுண்டரி அடித்து 33 பந்துகளில் தனது அரைசதத்தை எடுத்து முடித்தார். அடுத்த பந்தை லாங் ஆஃபில் டிவில்லியர்ஸ் அருமையான சிக்ஸருக்கு தூக்கினார். 16-வது ஓவரை ஜகாதி வீச டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸரையும் இக்பால் அப்துல்லா ஒரு சிக்சரையும் அடிக்க அந்த ஓவரில் 16 ரன்கள் வந்தது.

17-வது ஓவரில் பிரவீண் குமாரை லெக் ஸ்டம்பிலிருந்து வாரி ஒரு அருமையான ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி முன்னதாக ஒரு மிட்விக்கெட் சிக்ஸ் என்று டிவில்லியர்ஸ் விளாச அந்த ஓவரில் 12 ரன்கள் வந்தது. 18 பந்துகளில் 21 என்று சமன்பாடு மாறியது. 18-வது ஓவரை பிராவோ லெக் பை பவுண்டரியுடன் தொடங்க கடைசி 3 பந்துகளை இக்பால் அப்துல்லா அருமையாக பவுண்டரிக்கு விரட்ட அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது. 19-வது ஓவரின் 2-வது பந்தில் லாங் ஆனில் தட்டி விட்டு 2 ரன்களை டிவில்லியர்ஸ் ஓட பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

இக்பால் அப்துல்லா 25 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், டிவில்லியர்ஸ் 47 பந்துகளில் 5 பவுண்ட்ரி 5 சிக்சர்களுடன் 79 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். குல்கர்னி அற்புதமான பந்து வீச்சுடன் 4 ஓவர்களில் 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது வீணானது. பெங்களூரு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனாலும் குஜராத்துக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்