கரோனா தடுப்பூசி கட்டாயமில்லை: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயமில்லை என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச், விம்பிள்டன் தொடரில் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

34 வயதான முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஒபன் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

சட்டப் போராட்டம்

தடுப்பூசி செலுத்தாமல் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்ததால் ஜோகோவிச் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். மேலும்11 நாட்கள் சட்டப் போராட் டத்துக்கு பின்னர் அவர், ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் புல் தரையில் விளையாடப்படும் பாரம்பரிய மிக்க விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் ஜூன் 27-ம் தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்த போட்டி தொடர்பாக ஆல் இங்கிலாந்து கிளப் ஆலோசனை நடத்தியது.

இதன் பின்னர் ஆல் இங்கிலாந்து கிளப்பு தலைமை நிர்வாகி சாலி போல்டன் கூறும்போது, “அனைத்து வீரர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஊக்குவிக்கப்படும். ஆனால் போட்டியில் கலந்துகொள்வதற்கு இது நிபந்தனையாகாது” என்றார்.

இங்கிலாந்தில் நுழைவதற்கு கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இதனால் நடப்பு சாம்பியனான ஜோகோவிச், கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE