IPL 2022 | நிலைக்காத பேட்ஸ்மேன்கள்... மிரட்டிய பவுலர்கள்... - கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத்

By செய்திப்பிரிவு

மும்பை: கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணியும், கொல்கத்தாவும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் - சகா குஜராத் அணியின் இன்னிங்ஸை தொடங்கி வைத்தனர். 7 ரன்னில் கில் வெளியேறினார். அடுத்ததாக குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சஹா ஜோடி சேர்ந்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

குஜராத் அணி 83 ரன்கள் இருக்கும்போது உமேஷ் யாதவ் பந்து வீச்சில் சகா 25 ரன்னில் வெளியேறினார். அடுத்த வந்த டேவிட் மில்லர் 27 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய பாண்ட்யா அரை சதம் அடித்தார். 69 ரன்களில் இருந்த அவர் சவுத்தி பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். திவாட்டியா 17, ரஷித் கான் 0, அபினவ் மனோகர் 2, பெர்குசன் 0, டயல் 0 என அடுத்தடுத்து வெளியேற குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்தது.

இதனையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறகிய கொல்கத்தாவுக்கு சுனில் நரேன், சாம் பில்லிங்ஸ் இணை தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே சாம் பில்லிங்ஸ் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஓவரில் சுனில் நரேன் 5 ரன்களில் வெளியேற, ரானாவும் நிலைக்கவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் பெரிய அளவில் சோபிக்காமல் 12 ரன்களில் நடையைக்கட்டினார்.

நிலைத்து ஆடிய ரிங்கு சிங் 35 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரஸல் மட்டும் 48 ரன்களில் அவுட்டாக மற்ற மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால், கொல்கத்தா தோல்வியை தழுவியது. 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றியை பதிவு செய்தது.

குஜராத் அணி தரப்பில் ஷமி, யாஷ் டயல்,ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், லோகி பெர்குஸ்கான், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE