IPL 2022 | 'நோ-பால்' சர்ச்சை தொடர்பாக ரிஷப் பந்த் கொடுத்த விளக்கம்

By செய்திப்பிரிவு

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 'நோ-பால்' சர்ச்சை எழுந்த நிலையில், அது தொடர்பாக போட்டி முடிந்ததும் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் சொன்ன விளக்கம் என்ன என்பதை பார்க்கலாம்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இறுதி வரை போராடி தோல்வியைத் தழுவியது டெல்லி அணி. இந்த போட்டியின் கடைசி ஓவரில் (இரண்டாவது இன்னிங்ஸ்) வீசப்பட்ட மூன்றாவது பந்து 'நோ-பால்'? என வாதாடியது டெல்லி. அதற்குக் காரணம் பந்து இடுப்புக்கு மேலே பவுன்ஸ் ஆனது போல தெரிந்தது. அது முறையாக வீசப்பட்ட டெலிவரி எனத் தெரிவித்தனர் கள நடுவர்கள்.

அதை அறிந்து ஆவேசமடைந்தார் டெல்லி கேப்டன் ரிஷப் பந்த். தங்கள் அணியின் பயிற்சியாளரை களத்திற்கே அனுப்பியும் பார்த்தார் பந்த். ஆனால் நடுவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. பந்த் செயலை பலரும் விமர்சித்திருந்தனர். ஆட்டம் முடிந்ததும் அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் பந்த்.

"இந்த ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். நடுவர்கள் 'நோ-பால்' என கடைசி ஓவரில் சொல்லியிருந்தால் எங்களுக்கு அது மதிப்புமிக்கதாக அமைந்திருக்கும். ஆனால் அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. டக்-அவுட்டில் இருந்த எல்லோரும் நடுவர்களின் முடிவை அறிந்து விரக்தி அடைந்தோம். மைதானத்தில் இருந்த அனைவரும் அதனை கவனித்திருந்தனர். மூன்றாவது நடுவர் இதில் தலையிட்டு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நாங்கள் செய்தது தவறுதான். (களத்திற்கு பயிற்சியாளரை அனுப்பியது தொடர்பாக). ஆனால் எங்களுக்கு நடந்ததும் அநீதி. அது ஆட்டத்தின் அந்த தருணத்தில் நடந்தது. இரண்டு பக்கமும் தவறு உள்ளது. அடுத்த போட்டிக்கு தயாராகும் படி எங்கள் அணியினரிடம் சொல்வேன்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE