IPL 2022 | விரல் வித்தை காட்டும் சிஎஸ்கே பவுலர்... யார் இந்த மஹீஷ் தீக்‌ஷனா?!

By எல்லுச்சாமி கார்த்திக்

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இளம் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷனா, தனது சுழற்பந்துகள் மூலம் மாயாஜால வித்தைகளை நிகழ்த்திக் கொண்டு வருகிறார்.

தனது தாய்நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அற்புதமான திறனை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட்டில் என்ட்ரி கொடுத்தவர் மஹீஷ் தீக்‌ஷனா. இடையில் டி20 லீக் தொடர்கள் மற்றும் டி10 தொடரிலும் விளையாடியுள்ளார். 2021 டி20 உலகக் கோப்பையில் சிறந்த பவுலிங் எகானமி கொண்டிருந்த டாப் 15 வீரர்களில் இவரும் ஒருவர். அந்த தொடரின் ஒரு போட்டியில் தனது அணியின் பவுலர்கள் எல்லாம் ரன்களை வள்ளல் போல வாரி கொடுக்க, மஹீஷ் மட்டும் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.

‘மாடர்ன் டே’ கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாக ஒரு தரப்பினர் சொல்வதுண்டு. “இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். நான் என் வேலையை சரியாக செய்வேன்” எனச் சொல்வது போல், அதே மாடர்ன் டே கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் தன்னை தயார்படுத்திக் கொண்டார். கடந்த ஐபிஎல் 2021 சீசனில் சென்னை அணியில் தீக்‌ஷனா ரிசர்வ் வீரராக அழைக்கப்பட்டுள்ளார். தற்போது அதே அணிக்காக களத்தில் விளையாடி வருகிறார்.

யார் இந்த மஹீஷ் தீக்‌ஷனா?

21 வயதான தீக்‌ஷனா இலங்கையைச் சேர்ந்தவர். அந்த நாட்டின் தலைநகர் கொழும்புவில் பிறந்தவர். ஆஃப் பிரேக் பவுலர். 17 வயதில் ‘லிஸ்ட்-ஏ’ கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கினார். அந்தத் தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். தொடர்ந்து அடுத்த ஆண்டு 'பிரீமியர் லீக்' தொடரில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பிறகு இலங்கை 'பிரீமியர் லீக்' தொடரில் ஜாப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடத் தேர்வானார். அடுத்த சீசனில் அதே அணிக்காக 16 விக்கெட்டுகளை கைப்பற்றி, அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். பிறகு எஸ்எல்சி டி20 லீக் தொடரிலும் விளையாடினார்.

இப்படியாக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய தீக்‌ஷனா இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். அதன் மூலம் நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். இடையே அபுதாபி டி10 தொடரிலும் அவர் விளையாடினார். இதுவரை இலங்கை அணிக்காக 4 ஒருநாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் மூலம் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2021ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பட்லர் சதம் பதிவு செய்திருந்தார். ஆனால் அதே ஆட்டத்தில் தீக்‌ஷனா நான்கு ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். அந்த அளவுக்கு தரமாக பந்து வீசி, எதிரே நிற்கும் பேட்ஸ்மேனை கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தவர் இந்த இளம் வீரர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் தீக்‌ஷனாவை சென்னை அணி 70 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. இதுவரை ஐபிஎல் அரங்கில் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். முதல் போட்டியில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. ஆனால் இரண்டாவது போட்டியில் அவரது பந்துவீச்சு திறனால் ஆர்சிபி-யை ஆட்டம் காண செய்தார். 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ் காட்டினார். சென்னை அணியின் வெற்றிக்கு தேவைப்படும் விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுக்கும் விக்கெட் டேக்கிங் பவுலராக இப்போது மிளிர்கிறார்.

“சென்னை அணிக்காக ஐபிஎல் களத்தில் விளையாட நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அப்போது நான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னை வைத்து நண்பர்கள் வேடிக்கையாக பேசுகிறார்கள் என்றே முதலில் நினைத்தேன்.பிறகு மலிங்கா தான் அந்தச் செய்தியை உறுதி செய்தார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு சிஎஸ்கே-வை ரொம்பப் பிடிக்கும். ஏனெனில் எனக்கு தோனியை பிடிக்கும். இப்போது நானும் அவருடன் விளையாடுகிறேன். அவருடன் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. இப்போது அது நிஜம் ஆகியுள்ளது” என தான் சூப்பர் கிங்ஸ்-க்குள் வந்ததை சிம்பிளாக சொல்கிறார் தீக்ஷனா.

ஆல் தி பெஸ்ட் தீக்‌ஷனா!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்