பிரெஞ்சு ஓபன் இறுதி ஆட்டத்தில் ஷரபோவா – ஹெலெப்

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, ருமேனியாவின் சிமோனா ஹெலெப் ஆகியோர் மோத இருக்கின்றனர். இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

சர்வதேச தரவரிசையில் ஷரபோவா 7-வது இடத்தில் உள்ளார். ஆனால் ஹெலப் இப்போதுதான் முதல்முறையாக 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஷரபோவா இப்போது தொடர்ந்து 3-வது முறையாக பிரெஞ்சு ஓபன் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த ஆண்டு செரினா வில்லியம்ஸிடம் ஷரபோவா இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார். அதற்கு முந்தைய ஆண்டு அவர் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

சமீபத்தில் முடிவடைந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் ஷரபோவா – ஹெலெப் ஆகியோர் மோதினர். இதில் ஷரபோவா வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

அதற்கு முன்பு 2012-ல் பெய்ஜிங் ஓபன், இண்டியாவேல்ஸ் டென்னிஸ் போட்டி ஆகியவற்றிலும் இருவரும் மோதியுள்ளனர். இவை இரண்டிலுமே ஷரபோவாதான் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இப்போது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹெலெப்பின் ஆட்டத்திறன் வெகுவாக மேம்பட்டுள்ளது. இத்தொடரின் 7 ஆட்டங்களிலுமே அவர் நேர் செட்களில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை ஒரு செட்டை கூட இழக்கவில்லை

அதே நேரத்தில் அரையிறுதி, காலிறுதி மற்றும் 4-வது சுற்று ஆட்டத்தில் ஷரபோவா கடுமையாகப் போராடித்தான் வெற்றி பெற்றார். எனவே இறுதி ஆட்டத்தில் ஷரபோவாவுக்கு ஹெலெப் கடும் சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஷரபோவா இதில் வெற்றி பெற்றால் 5-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார். ஹெலெப் வென்றால் அவருக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டமாக இருக்கும். போட்டி குறித்து ஹெலெப் கூறியது: இந்தப் போட்டியில் நான் இழப்பதற்கு எதுவும் இல்லை. எனவே நான் மிகவும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை.

எனினும் ஷரபோவாவை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது எனக்குத் தெரியாது. ஏற்கெனவே சிலமுறை அவரிடம் தோல்வியடைந்துள்ளேன். எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடுவேன் என்றார். ஷரபோவா கூறியது: கடுமையான காயத்தில் இருந்து மீண்ட பின்பு இப்போது தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடுமையான முயற்சியின் மூலமே இது சாத்தியமாயிற்று. இறுதி ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என்றார்.

முன்னதாக அரையிறுதி ஆட்டத்தில் கனடாவில் யுகுனி பவுச்சர்டை ஷரபோவா எதிர்கொண்டார். இதில் 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தாலும், கடுமையாகப் போராடி அடுத்த இரு செட்களை 7-5, 6-2 என்ற கணக்கில் ஷரபோவா வென்று வெற்றியை தனதாக்கினார்.

மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனி வீராங்கனை ஆண்ட்ரியா பெட்கோவிக்கை, ஹெலெப் எதிர் கொண்டார். இதில் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஹெலெப் வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE