IPL 2022 | ராஜபக்சேவை ரன் அவுட் செய்த தோனி - பழைய நினைவலைகளில் மூழ்கிய ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

நடப்பு ஐபிஎல் சீசனில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இருந்தாலும் இந்தத் தொடர் தோல்விகளுக்கு மத்தியிலும் ஒரே ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது சிஎஸ்கே விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியின் ஆட்டம். முதல் இரண்டு போட்டிகளில் அவரது பேட் பேசி இருந்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரது விக்கெட் கீப்பிங் திறன் பேசியிருந்தது. ஸ்டம்புகளுக்கு பின்னால் விக்கெட் கீப்பராக நிற்கும் தோனியின் செயல்பாடு மின்னல் வேகத்தில் இருக்கும். அது ஸ்டம்பிங் ஆனாலும் சரி, டைவ் அடித்து கேட்ச் பிடிப்பதானாலும் சரி, ரன் அவுட் செய்வதானாலும் சரி. அதனால் அவர் விக்கெட் கீப்பிங் பணியை கவனிக்கும்போது பேட்ஸ்மேன்கள் க்ரீஸ் லைனில் நிற்கிறோமோ என்பதில் ஒரு கண் வைத்துக் கொண்டே இருப்பார்கள். இருந்தாலும் தோனி வசம் அவர்கள் விக்கெட்டுகளை இழப்பதுண்டு.

அப்படி ஒரு சம்பவம் தான் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடிய ஆட்டத்திலும் நடந்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசியது. சென்னைக்காக இரண்டாவது ஓவரை கிறிஸ் ஜோர்டன் வீசி இருந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்ட்ரைக்கில் இருந்த பனுகா ராஜபக்சே, சிங்கிள் எடுக்க முயற்சி செய்திருப்பார். இருந்தும் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த தவான் பின்வாங்கி இருப்பார். ராஜபக்சே தனது விக்கெட்டை காத்துக்கொள்ளும் நோக்கில் மீண்டும் க்ரீஸை நோக்கி திரும்பியிருப்பார். அந்தப் பந்தை கலெக்ட் செய்த ஜோர்டன் டைரக்ட் ஹிட்டை மிஸ் செய்திருப்பார். இருந்தாலும் மின்னல் வேகத்தில் ஓட்டம் எடுத்து, பந்தை லாவகமாக பிடித்து, புலி பாய்ச்சலோடு ஸ்டம்புகளை தகர்த்திருப்பார் தோனி. ராஜபக்சே அவுட்டாகி பெவிலியன் திரும்புவார். அப்போது சென்னை அணி வீரர்கள் தோனியின் தரமான செயலை பாராட்டி இருந்தார்கள்.

இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடித் தீர்த்தனர். அதேநேரத்தில் சிலர் 2016 டி20 உலகக் கோப்பையில் தோனியின் மின்னல் வேக ரன் அவுட்டையும் ஒப்பிட்டு பேசி இருந்தனர். வங்கதேச அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை மின்னல் வேகத்தில் ஓட்டம் எடுத்து ரன் அவுட் செய்திருப்பார். அதன் பலனாக இந்திய ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE