IPL 2022 | பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சென்னை தோல்வி

By செய்திப்பிரிவு

நடப்பு ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா, பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்தது. அந்த அணிக்காக தவான் 33 ரன்கள் சேர்த்தார். லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். ஜிதேஷ் ஷர்மா 26 ரன்கள் எடுத்தார். சென்னை அணி மொத்தம் 13 வொய்ட் (Wide) வீசியிருந்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை அணி விரட்டியது.

சென்னை அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா தொடக்க வீரர்களாக களம் இறங்கி இருந்தனர். ருதுராஜ் 1 ரன் மட்டும் எடுத்து இரண்டாவது ஓவரில் அவுட்டானார். தொடர்ந்து உத்தப்பா, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா மாதிரியான வீரர்கள் பவர் பிளே ஓவர்களில் அவுட்டாகி இருந்தனர். ஆறு ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்திருந்தது சென்னை.

தொடர்ந்து வந்த ராயுடு 21 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஷிவம் தூபே 57 ரன்கள் எடுத்து அவுட்டானார். பிராவோ ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். டுவைன் பிரிட்டோரியஸ் ஒரு சிக்ஸர் அடித்து 8 ரன்கள் எடுத்து அவுட்டானார். தோனி 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். 18 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 126 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி ஆட்டத்தை இழந்தது. பஞ்சாப் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை அணி நடப்பு சீசனின் முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியுள்ளது. பஞ்சாப் அணிக்காக பந்து வீசிய பவுலர்கள் அனைவரும் விக்கெட் வீழ்த்தி இருந்தனர். ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளை இந்த ஆட்டத்தில் வீழ்த்தி இருந்தார். லிவிங்ஸ்டன் மற்றும் வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். ரபாடா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஒடியன் ஸ்மித் மாதிரியான பவுலர்கள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE