2011-ல் இதே நாளில் உலகக் கோப்பையை வென்று சாதித்த தோனி தலைமையிலான இந்திய அணி!

By செய்திப்பிரிவு

காலச்சக்கரத்தை இதே நாளில் 2011-க்கு பின்னோக்கி நகர்த்தினால் அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை அடையலாம். அன்றைய தினம் கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடிய அந்த 11 வீரர்களின் வெற்றியை தங்களது வெற்றியாகவே கொண்டாடித் தீர்த்தார்கள். கிராமம், நகரம் என வேறுபாடின்றி இந்தக் கொண்டாட்டம் களைகட்டியது.

சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு 50-ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது இந்தியா. தோனி தலைமையிலான அந்த அணியில் சச்சின், சேவாக், ஜாகீர் கான் மாதிரியான அனுபவ வீரர்களுடன் இளம் வீரர்கள் நிறைந்த அணியாக இந்தியா களம் கண்டது. இறுதிப் போட்டியில் டாஸை இழந்து முதலில் பந்து வீசியிருந்தது இந்தியா. இலங்கை 50 ஓவர்களில் 274 ரன்கள் சேர்த்தது. 275 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது.

சேவாக், சச்சின், கோலி என மூவரும் குறுகிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களத்திற்கு வந்த தோனி, கம்பீர் உடன் கூட்டணி அமைத்தார் இருவரும் 109 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். யுவராஜுடன் இணைந்து தோனி 54 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பலனாக ஆட்டத்தில் 10 பந்துகள் எஞ்சியிருக்க உலகக் கோப்பையை வென்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு பிறகு உலகக் கோப்பை (ஒருநாள் கிரிக்கெட்) வென்ற கேப்டன் என்ற சாதனையை படைத்தார் தோனி.

அதை இந்தியாவே கொண்டாடி தீர்த்தது. அதன் பிறகு 2015 மற்றும் 2019 என இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா அரையிறுதி வரை மட்டுமே முன்னேறி இருந்தது. தோனிக்கு 2019 அரையிறுதி ஆட்டம்தான் சர்வதேச கிரிக்கெட் களத்தில் கடைசி போட்டியாக அமைந்தது. அதன் பிறகு அவர் ஓய்வு பெற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE