IPL 2022 | விரைவில் 50% பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ திட்டம்

By செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் அடுத்த வாரம் முதல் போட்டிகளை நேரில் காண 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 25 சதவீத பார்வையாளர்கள் போட்டிகளை நேரில் காண அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நான்கு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் விளையாடி வருகின்றன. கடந்த மார்ச் 26-ஆம் தேதி 2022 ஐபிஎல் சீசன் தொடங்கியிருந்தது. அதற்கு முன்னதாக கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடித்து மைதானத்தின் ஒட்டுமொத்த பார்வையாளர்களில் 25 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே போட்டிகளை நேரில் காண அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையை மேலும் 25 சதவீதம் அதிகரிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

அடுத்த வாரம் முதல் 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக அந்த வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. கரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாம். இதற்கு அனைத்து துறைகளின் அனுமதியும் கிடைத்துள்ளதாம். அதனால், விரைவில் இது நடைமுறைக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் (70 போட்டிகள்) வான்கடே, டி.ஒய்.பாட்டீல், எம்.சி.ஏ மற்றும் பிராபோர்ன் கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE