லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுடன் இணைந்து இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் இன்னொரு அணி குஜராத் டைட்டன்ஸ். கடந்த சீசன்களாக மும்பை அணியின் முக்கிய பிளேயராக இருந்த ஹர்திக் பாண்டியா அதன் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் தலைமையில் புதிய பயணத்தை துவங்கவுள்ள குஜராத் அணியின் பலம், பலவீனம் என்ன?
ஏலத்தில் செயல்பாடு எப்படி? - ஏலத்துக்கு முன்னதாகவே, கேப்டன் ஹ்ர்திக் பாண்டியா மற்றும் ரஷீத் கானை ரூ.15 கோடிக்கும் ஓப்பன் சுப்மன் கில்லை ரூ.8 கோடிக்கும் ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ். ஏலத்தின்போது, டைட்டன்ஸ் மொத்தமாக ரூ.51.85 கோடி செலவிட்ட அந்த அணி நிர்வாகம் அதில், ரூ.25.25 கோடியை லாக்கி பெர்குசன், ராகுல் தெவாட்டியா மற்றும் முகமது ஷமி ஆகிய மூன்று வீரர்களை எடுப்பதற்கே கொடுத்துவிட்டது. ஜேசன் ராய்யை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கும், வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப்பை 2.40 கோடிக்கும் வாங்கியது. டொமினிக் டிரேக்ஸ் (1.10 கோடி), ஜெயந்த் யாதவ் (1.70 கோடி) என வாங்கிய குஜராத் டைட்டன்ஸ் அபினவ் சதராங்கனி என்ற இளம் வீரரை ரூ.2.60 கோடிக்கு வாங்கி ஆச்சரியப்படுத்தியது.
பலம் பொருந்திய பவுலிங் யூனிட்: ஐபிஎல் 2022 இல் டைட்டன்ஸ் எப்படி விளையாடுகிறது என்பது அவர்களின் பந்துவீச்சாளர்களை பொறுத்தே இருக்க போகிறது. ஆம், ஷமி, லாக்கி பெர்குசன், அல்சாரி ஜோசப், என உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன் யாஷ் தயாள் மற்றும் பிரதீப் சங்வான், வருண் ஆரோன் இளம் வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம்பிடிக்க காத்திருக்கின்றனர். இவர்களுடன் தற்போது உடல்தகுதி பெற்றிருக்கும் கேப்டன் ஹர்திக் பாண்டியா, விஜய் ஷங்கரும் வேகப்பந்து வீச்சை மேலும் பலமாக்கலாம். அதேநேரம், ரஷித் கான், சாய் கிஷோர் உடன் ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாட்டியா போன்ற பார்ட் டைம் ஸ்பின்னர்களும் பவுலிங் யூனிட்டிற்கு பக்கபலம் சேர்க்கின்றனர். பவுலிங்கை தலைமையேற்று வழிநடத்த இருக்கும் ஷமியும், ரஷீத்தும் குஜராத் அணியின் துருப்பு சீட்டாக இருக்க போகிறார். இருவரும் கச்சிதமாக வீசக்கூடியவர்கள் என்பதால் அவர்களை நம்பியே குஜராத் அணி பெரும்பாலும் பயணிக்க உள்ளது.
நேரெதிர் பேட்டிங் யூனிட்: பவுலிங் யூனிட்டிற்கு நேரெதிராக பேட்டிங் யூனிட் உள்ளது எனலாம். தொடர் தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பே ஓப்பனிங் பொஷிஷனில் இறங்க வேண்டிய ஜேசன் ராய் தொடரில் இருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவருக்குப் பதிலாக ஆப்கன் வீரர் ரஹ்மமுல்லா குர்பாஸை சேர்த்துள்ளது குஜராத் நிர்வாகம். 20 வயதாகும் ரஹ்மமுல்லா குர்பாஸ் வளர்ந்து வரும் டி20 ஸ்பெஷலிஸ்ட்.
» IPL 2022 அணி அலசல் | தரமான ஆல் ரவுண்டர்கள், டாப் ஆர்டர் அச்சம் - புதிய பயணத்தில் லக்னோ எப்படி?
» கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகல்: சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா அறிவிப்பு
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட், லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் குல்னா டைகர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியதன் மூலம் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் பிரபலமானவராக உள்ளார். மேலும் டி20 போட்டிகளில் 150-க்கும் ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். கேரியர் டி20 தொடர்களில் 69 போட்டிகளில் விளையாடியுள்ள குர்பாஸ் 113 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.
அதுமட்டுமல்ல, குர்பாஸ் ஒரு விக்கெட் கீப்பராகவும் இருப்பதால் அவரைத் தேர்வு செய்தது. எனினும் ஐபிஎல் தொடர்களில் அவரின் அனுபவமின்மையால் தொடக்க ஆட்டங்களில் இவரை களமிறக்குவது என்பது கேள்விக்குறி. இதனால், ஓப்பனிங் பொசிஷனில் சுப்மன் கில் உடன் விருத்திமான் சஹா களமிறங்கவே அதிக வாய்ப்பு. சஹாவை பொறுத்தவரை டெஸ்ட் வீரராக முத்திரை குத்தப்பட்டாலும் ஐபிஎல் தொடர்களில் பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. பவர் பிளே ஓவர்களில் பீல்ட் செட்டை நன்றாக உபயோகப்படுத்தி விளையாட கூடிய வீரர் என்பதும், கீப்பிங் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட மேத்யூ வாட் பாகிஸ்தான் தொடரில் இருப்பதால் முதல் இரண்டு வாரங்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்பதும் சஹாவுக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
அதற்கடுத்த இரண்டு இடங்களில் விளையாடுவதற்கு இளம் வீரர்கள் குர்கீரத் சிங், அபினவ் சதராங்கனி தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. சீனியர் வீரர் டேவிட் மில்லர் தேர்வு செய்யப்பட்டாலும் வங்கதேச தொடர் காரணமாக அவர் இன்னும் அணியுடன் இணையவில்லை. அவர் வர தாமதம் ஆகும் பட்சத்தில் இளம் வீரர்களே சரியான சாய்ஸாக இருப்பர். அபினவ் சதராங்கனியை பொறுத்தவரை, சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர். உள்ளூர் போட்டிகளில் ஹிட்டர் பேட்ஸ்மேனாக பொளந்து கட்டியதால் மெகா ஏலத்தில் அடிப்படை விலை ரூ.20 லட்சத்தில் இருந்து போட்டி போட்டு ரூ.2.60 கோடிக்கு வாங்கியது குஜராத். அதனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ஹர்திக் பாண்டியா மாற்றுக்கருத்தே இல்லாமல் ஐந்தாவது இடத்தில் களமிறங்கவே வாய்ப்பு அதிகம்.
ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை தோள்பட்டை காயத்துக்கு சிகிச்சை பெறச் சென்றவர், பல மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பியிருக்கிறார். அவரின் பார்ம் எந்த அளவு உள்ளது, அவரால் பவுலிங் செய்ய முடியுமா, அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடிக்க போவது யார் என்பது பற்றி ஒரு பெரிய விவாதமே நடந்து வருகிறது. இதனால் தன்னை கேப்டனாக மட்டுமில்லாமல், ஒரு வீரராகவும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஒட்டுமொத்தமாக, குஜராத்தின் பேட்டிங் யூனிட்டில் டாப் ஆர்டர், மிடில் ஆர்டரில் பெரிய இன்னிங்ஸ் விளையாடக் கூடிய ஒரு வீரரின் தேவை அதிகம் உள்ளது. அதற்கான சரியான வீரராக ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்களாக யாரும் இல்லை. சுப்மன் கில் மட்டுமே பார்மில் இருக்கும் ஒரு வீரர் என்பது கவனிக்கத்தக்கது.
ஆனால், லக்னோ அணியை போலவே அல்சாரி ஜோசப், விஜய் ஷங்கர், ஜெயந்த் யாதவ் போன்ற சில திறமையான ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். அது பேட்டிங் யூனிட்டில் உள்ள குறையை பயத்தை ஓரளவு குறைக்கிறது. ஆனால் அவர்களின் நிலைத்தன்மை என்று வரும்போது அங்கும் சில பயங்கள் தொற்றிக்கொள்கிறது.
அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டியாக கேரி க்ரிஸ்டன் ஆகியோரின் ஒற்றை நம்பிக்கையாக ஹர்திக் பாண்டியாவே உள்ளார். அவர்களின் நம்பிக்கையை மட்டுமல்ல, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஹர்திக் பிரச்சினைகளை பூர்த்தி செய்து குஜராத்துக்கு முதல் ஐபிஎல் பட்டத்தை பெற்றுத்தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் விவரம்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரஷீத் கான், சுப்மன் கில், லாக்கி பெர்குசன், ராகுல் தெவாட்டியா, முகமது ஷமி, யாஷ் தயாள், டேவிட் மில்லர், சாய் கிஷோர், அபினவ் சதராங்கனி, மேத்யூ வேட், அல்ஜாரி ஜோசப், ரஹ்மானுல்லா குர்பாஸ், விருத்திமான் சாஹா, ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், டொமினிக் டிரேக்ஸ், வருண் ஆரோன், குர்கீரத் சிங், நூர் அகமது, தர்ஷன் நல்கண்டே, பிரதீப் சங்வான்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago