IPL 2022 அணி அலசல் | ஷேன் வார்ன் செய்த மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துமா ராஜஸ்தான் ராயல்ஸ்?

By செய்திப்பிரிவு

இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடர் 2008-ல் அறிமுகமானபோது இருந்த எட்டு அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மட்டுமே பயிற்சியாளரேயே கேப்டனாக களமிறக்கியது. அவர், சமீபத்தில் மரணம் அடைந்த ஷேன் வார்ன். அவரின் தலைமையில் முதல் சீசனில் சாம்பியன் ஆன ராஜஸ்தான் ராயல்ஸ், இன்று அவரை இழந்துள்ளது. ஐபிஎல்லில் ஷேன் வார்ன் விளையாடிய ஒரே அணி ராஜஸ்தான் மட்டுமே.

முதல் சீசனில் கோப்பை வென்ற ராஜஸ்தான் அணி அதன்பிறகு கோப்பைக்கு பக்கம் கூட செல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால், 2008-ல் கோப்பையை கைப்பற்றிய பிறகான 13 சீசன்களில் மூன்று முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. கடைசியாக 2018ல் பிளே ஆஃப் சென்ற அந்த அணி கடந்த சீசன்களாக மோசமான பெர்பாமென்ஸை வெளிப்படுத்தியுள்ளது. 2019ல் ஏழாவது இடத்தையும், 2020ல் கடைசி இடத்தையும் பெற்ற அந்த அணி 2021ல் மீண்டும் ஏழாவது இடத்தையே பெற்றது.

பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னை புதுப்பித்துக்கொண்டுள்ள ராஜஸ்தான் அணி, பயிற்சியாளர் சங்கரகரா மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையில் வரவிருக்கும் சீசனில் முத்திரை பதித்து ஷேன் வார்னுக்கு அஞ்சலி செலுத்தும் முனைப்பில் உள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் செயல்பாடு எப்படி?

கேப்டன் சஞ்சு சாம்சன் (ரூ.14 கோடி), ஜோஸ் பட்லர் (ரூ.10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ.4 கோடி) ரீடெயின் செய்த ராஜஸ்தான், ரூ.62 கோடி உடன் மெகா ஏலத்தில் கலந்துகொண்டது. யுஸ்வேந்திர சாஹல் ரூ 6.50 கோடி, ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ.5 கோடி, தேவ்தத் படிக்கல் ரூ.7.75 கோடி, ரியான் பராக் ரூ.3.80 கோடி ஆகியோரையும் வாங்கியது.

இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஷிம்ரோன் ஹெட்மியர் மற்றும் டிரெண்ட் போல்ட் முறையே 8.50 கோடி மற்றும் 8 கோடி ரூபாய்க்கும், நாதன் கவுல்டர்-நைல்லை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்கியது. இதுவரை இல்லாத அளவு பல புதிய மாற்றங்களை மெகா ஏலம் மூலமாக சந்தித்துள்ளது ராஜஸ்தான். அதேநேரம் ஒரு மிகப்பெரிய இழப்பும். அது ஜோப்ரா ஆர்ச்சர். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு ஆர்ச்சர் இல்லாததும் காரணமாக அமைந்தது. ராஜஸ்தானின் சிறந்த பௌலர்களில் ஒருவராக கடந்த சில சீசன்களாக இருந்தார் ஆர்ச்சர்.

ஆனால், காயம் காரணமாக கடந்த ஆண்டு விளையாடவில்லை. காயத்தில் இருந்து மீளாததால் இந்தமுறையும் அவர் பங்கேற்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. அதனால் ஏலத்தில் ஆர்ச்சரை விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. ஆர்ச்சரை இழந்தாலும், ராயல்ஸ் நிர்வாகம் டிரெண்ட் போல்ட்டை ஏலம் எடுத்து இழப்பை சரிகட்டியுள்ளது. 2020ல் மும்பை டைட்டில் வெல்ல முக்கிய பங்காற்றியவர் டிரெண்ட் போல்ட். அவரும், பிரசித் கிருஷ்ணாவும், நாதன் கவுல்டர்-நைல்லும், நவ்தீப் சைனியும் அணியின் வேகப்பந்துவீச்சு யூனிட்டுக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். இவர்களுக்கு ஓபேட் மெக்காய், டேரில் மிட்செல் இருவரும் வேகப்பந்துவீச்சுடன் ஆல்ரவுண்டர்களாகவும் பேக் அப் கொடுக்கவிருக்கிறார்கள்.

மற்ற சீசன்களை விட இந்தமுறை பந்துவீச்சில் ஒரு முக்கிய அணியாக ராஜஸ்தான் உருவெடுக்க வாய்ப்புள்ளது. அதற்கு அந்த அணியின் வேகப்பந்துவீச்சு யூனிட் மட்டுமல்ல, சுழற்பந்துவீச்சு யூனிட்டும்கூட. இந்திய அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சு வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் ராயல்ஸின் தெம்பை அதிகப்படுத்துகிறார்கள். இவர்களுடன் கர்நாடகாவைச் சேர்ந்த லெக் ஸ்பின்னர் கே.சி. கரியப்பா, துருவ் ஜூரல் மற்றும் ஷுபம் கர்வால் ஆகியோர் ஸ்பின் + ஆல் ரவுண்ட் ஆப்ஷனை வழங்குகிறார்கள். பவுலிங் யூனிட் நம்பிக்கையை அதிகரிக்க ராயல்ஸ் நிர்வாகம் லசித் மலிங்காவை இவர்களுக்கு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளது.

பேட்டிங் யூனிட் எப்படி?

ராஜஸ்தானின் பேட்டிங் வரிசை பெரும்பாலும் இளம் வீரர்களை நம்பியே உள்ளது. இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், யஷஸ்வி, தேவ்தத் படிக்கல், ரியான் பராக், கேப்டன் சஞ்சு சாம்சன், ஷிம்ரோன் ஹெட்மேயர் என ஹிட்டர்கள் பட்டாளம் ஏராளம். ஆனால் ஓப்பனிங்கில் யாரை இயக்குவதில் இங்கே பிரச்சினை உள்ளது. ஜோஸ் பட்லர் - யஷஸ்வி, சஞ்சு சாம்சன் - யஷஸ்வி இணை கடந்த சீசன்களில் தங்களை டாப் ஆர்டரில் நிரூபித்துள்ளனர். இப்போது புதிதாக டாப் ஆர்டர் ஸ்பெஷலிஸ்ட் தேவ்தத் படிக்கல் இணைந்திருப்பதால் யாரை கேப்டன் சஞ்சு ஓப்பனிங் பேட்டிங்கிற்கு தேர்வு செய்யப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

நம்பர் 3 ஸ்லாட்டை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் நல்ல சாய்ஸ். கடந்த காலங்களில் இந்த இடத்தில் இறங்கி சதங்களை சாம்சன் விளாசியுள்ளார் என்பதால் அவர் அந்த இடத்தில் மிகவும் நம்பகமான வீரராக உருவெடுத்துள்ளார். மிடில் ஆர்டரைப் பொறுத்த வரையில், சாம்சனுக்கு நிறைய சாய்ஸ்கள் உள்ளன. கடந்த சீசன்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய ஷிம்ரோன் ஹெட்மேயர், தென்னாப்பிரிக்காவின் ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன், ஆல்-ரவுண்டர் ரியான் பராக், கருண் நாயர், ஜிம்மி நீஷம், கே.சி. கரியப்பா, டேரில் மிட்செல் என ஹிட்டர்+ரொட்டேட்டர் காம்போவில் வீரர்கள் குவிந்துள்ளனர்.

பெரும்பாலும் இளம் வீரர்கள் நிரம்பிய அணியாக மிகவும் சீரானதாக ராஜஸ்தான் தெரிந்தாலும் நம்பகமான ஆல்-ரவுண்டர் இல்லாதது அணியின் பலவீனமாக உள்ளது. ஜிம்மி நீஷம், கே.சி. கரியப்பா போன்றோர்கள் ஆல் ரவுண்டர் பெர்பாமென்ஸை கொடுத்தாலும், இவர்கள் கடந்த காலங்களில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. மேலும் இவர்கள் ஃபினிஷர்களாக ஜொலிக்கவில்லை. ரியான் பராக்கிற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தும் தன்னை முழுமையாக நிரூபிக்க முடியாமல் தவித்து வருகிறார். அஸ்வின் ஒரு கிளாஸ் ப்ளேயர். ஆனால், டி20 வடிவத்தில் பேட்டிங்கில் அதிகம் அவரை நம்ப முடியாதது போன்றவை ராஜஸ்தான் அணிக்கு பலவீனமாக உள்ளன.

அதேபோல் கேப்டன் சஞ்சு சாம்சன் தொடக்கத்தில் நல்ல பார்மில் இருந்தாலும், அதை கடைசிவரை கடந்த காலங்களில் கடைபிடிக்க தவறியுள்ளார். இதுவும் இதுவரை சந்தித்த தோல்விகளுக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்த பலவீனங்களை சரி செய்து இம்முறை ஷேன் வார்ன் 14 ஆண்டுகளுக்கு முன்பு செய்த அதே மேஜிக்கை சாம்சன் செய்வரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மேயர், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ரியான் பராக், கே.சி கரியப்பா, நவ்தீப் சைனி, ஓபேட் மெக்காய், அனுனய் சிங், குல்தீப் சென், கருண் நாயர், துருவ் ஜூரல், தேஜஸ் பரோகா, குல்தீப் யாதவ், ஷுபம் கர்வால், ஜிம்மி நீஷம், நாதன் கவுல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேரில் மிட்செல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்