உலக சாம்பியன் ஸ்பெயின் வரலாறு காணாத தோல்வி

By ஆர்.முத்துக்குமார்

பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் உலக சாம்பியன் ஸ்பெயின், நெதர்லாந்து அணியிடம் வரலாறு காணாத தோல்வி தழுவியது.

நெதர்லாந்து ஸ்பெயினை 5-1 என்ற கோல் கணக்கில் சுக்கு நூறாக்கியது. உலகக் கோப்பைக் காலபந்துப் போட்டிக்கு உலக சாம்பியன் என்ற தகுதியுடன் வந்த எந்த அணியும் 5 கோல்கள் வாங்கிய தோல்வியைச் சந்தித்ததில்லை.

மேலும் கடந்த 50 ஆண்டுகால ஸ்பெயின் கால் பந்து வரலாற்றில் இது போன்ற ஒரு தோல்வியை ஸ்பெயின் சந்தித்ததில்லை. 1963ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணியிடம் 6-2 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவிய பிறகு இப்போது உலகக்கோப்பையில் இத்தகைய கோல் வித்தியாசத்தில் தோல்வி தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1950ஆம் ஆண்டு பிரேசிலிடம் 6-1 என்று தோல்வி தழுவியிருந்தது ஸ்பெயின்.

நெதர்லாந்து ஸ்ட்ரைக்கர்களான ராபின் வான் பெர்சி, மற்றும் அர்ஜென் ரூபென் ஆகியோர் தலா 2 கோல்களை அடிக்க, இடைவேளைக்குப் பிறகு ஸ்பெயினுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றே கூறவேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் 44வது நிமிடத்தில் வான் பெர்சி அசாத்தியமான முறையில் தலையில் முட்டி அடித்த கோல் ஆட்டத்தை 1-1 என்று சமன் செய்தது. அந்தக் கணத்திலிருந்து ஸ்பெயினுக்கு தலை சுற்றல் தொடங்கியது. டேவிட் பிளைண்ட் மிக மிகத் துல்லியமாக இடது பக்கத்திலிருந்து ஒரு பாஸ் செய்ய அதனை சற்றும் எதிர்பாராதவிதமாக அசாத்தியமான முறையில் எம்பி தலையால் முட்டி கோலுக்குள் அடித்தார் வான் பெர்சி.

கிட்டத்தட்ட நெதர்லாந்து பகுதியிலிருந்து 40 அடி பாஸ் செய்யப்பட்டது. அதனை எடுத்துச் சென்று அடித்தபோது பந்து மேலெழும்பியது கோல் லைனுக்கு நேராக இருந்த வான் பெர்ஸி எம்பி தலையால் முட்டி கோலாக மாற்றினார். ஸ்பானிய கோல் கீப்பர் காஸ்டிலாஸ் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

கோலை அடித்து முடித்து புல்தரையில் வயிறு கீழே இருக்க அவர் சறுக்கியபடியே சென்று பிறகு கோலைக் கொண்டாடினார். இந்த கோல் இந்த உலகக் கோப்பைப் போட்டிகளின் சிறந்த கோல்களில் ஒன்றாகவே இருக்கும் என்றால் அது மிகையாகாது.

அர்ஜென் ரூபனின் ஆட்டம் அற்புதத்தின் உச்சத்தைத் தொட்டது. அவரது வேகத்தினால் 2 கோல்களை அவர் அடித்தார். 7 சர்வதேச போட்டிகளில் 7 கோல்களை அடித்துள்ளார் ரூபென். இதைத் தவிர அறிமுக வீரர் ஸ்டெபான் டீ விரிஜ் ஒரு கோல் அடித்து ஸ்பானிய புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.

துவக்கத்தில் ஸ்பானிய ஆதிக்கமே இருந்தது. அருமையான, வேகமான ஷாட் பாஸ்கள் மூலம் அடிக்கடி நெதர்லாந்து எல்லைக்குள் சென்றனர். அப்படிப்பட்ட ஒரு மூவில்தான் 27வது நிமிடத்தில் ஸ்பானிய வீரர் கோஸ்டா பந்தை எடுத்துக் கொண்டு நெதர்லாந்து கோல் எல்லைக்குள் செல்ல அங்கு நெதர்லாந்து வீரர் ஒன்றும் செய்ய முடியாமல் ஃபவுல் செய்தார். இதனால் பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது.

அதனை ஸ்பானிய வீரர் சாபி அலான்சோ கோலாக மாற்றினார். ஸ்பெயின் உண்மையில் முதலில் முன்னிலை பெற்றது.

பிறகு 44வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வான் பெர்சி அடித்த அதிர்ச்சி கோலால் ஆட்டம் சமன் ஆனது. இடைவேளையின் போது 1-1 என்று இருந்தது.

நெதர்லாந்தின் அர்ஜென் ரூபென், வான் பெர்சி, ஸ்னெய்டர் ஆகிய மூவர் கூட்டணியே நேற்றைய ஸ்பானிய தோல்விக்கு பெரும் காரணமாகும். ஆனால் டேல் பிளைண்ட் என்ற வீரரின் அபாரமான லாங் பாஸ்களே நெதர்லாந்தின் முதல் இரண்டு அபார கோல்களுக்கு வித்திட்டது.

ஆனால் ஸ்பெயினின் டேவிட் சில்வா அபாரமான ஒரு மூவில் 2வது கோலுக்காக அடித்த ஷாட்டை நெதர்லாந்து கோல் கீப்பர் சிலிஸ்சென் கையால் தட்டிவிட்டார். இல்லையெனில் ஸ்பெயின் 2-0 என்று முன்னிலை வகித்திருக்கும். ஆனால் நடக்கவில்லை.

இடைவேளைக்குப் பிறகு நெதர்லாந்து கட்டுப்பாட்டை தங்கள் கால்களுக்குள் கொண்டு வந்தது. மீண்டும் பிளைண்ட் ஒரு பந்தை அருமையாக பாஸ் செய்ய அதனை ரூபென் ஸ்பெயின் வீரர்கள் ஜெரால்ட் பிக் மற்றும் செர்ஜியோ ரேமோஸ் ஆகியோரின் இடையூறுகளைக் களைந்து வேகமாக எடுத்துச் சென்று 2வது கோலை அடித்தார்.

அதன் பிறகும் நெதர்லாந்து நெருக்கடி அதிகரித்தது. அப்படிப்பட்ட மூவ் ஒன்றில்தான் 64வது நிமிடத்தில் டீ விரிஜ் கோலுக்கு அருகில் நின்று கொண்டு வந்த பாஸ் ஒன்றை தலையால் கோலுக்குள் செலுத்தி 3வது கோலைப் பெற்றுத் தந்தார்.

4வது கோல் உண்மையில் ஸ்பெயினின் பரிதாப நிலையைக் காட்டியது. ஸ்பெயின் வீரர் கோல் கீப்பர் கேஸிலாஸ் நோக்கி ஒரு பந்தை அடிக்க அதனை தடுக்கும்போது கட்டுப்பாடு இல்லாமல் பந்து கேஸிலாஸின் காலில் பட்டு சிறிது தூரம் சென்றது. அதனைக் கண்ட நெதர்லாந்தின் பெர்சி வேகமாக வந்து பந்தைப் பிடுங்கிச் சென்று கோலை அடித்தார். அதாவது ஸ்பானிய கோல் அருகே கோல் கீப்பரைத் தவிர ஒருவரும் இல்லை.

பிறகு ரூபென் 5வது கோலை 80வது நிமிடத்தில் அடித்தார். இப்போதும் கூட ஸ்பானிய தடுப்பாட்ட வீரர்களை டான்ஸ் ஆட வைத்தார் ருபென். அதன் பிறகும் கூட ஸ்பெயின் தனது 2வது கோலை அடிக்கும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. மாறாக நெதரலாந்து 6வது கோலை அடிக்கும் என்ற நிலையே இருந்தது. அதுபோலவே ரூபெனுக்கு ஹேட்ரிக் வாய்ப்பும் வந்தது. ஆனால் பந்து கோல் போஸ்ட் மேலே பட்டு எகிறியது.

ஸ்பெயினுக்கு ஒரு ஆறுதல் 2வது கோல் விழுந்தது. ஆனால் அது ஆஃப் சைடு என்று நடுவர் அதையும் மறுத்தார். டாரஸ், ஃபேபர்காஸ் போன்ற அனுபவ வீரர்களை ஏன் இடைவேளைக்குப் பிறகு ஸ்பெயின் களமிறக்கியது என்பதும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

இவ்வாறு ஸ்பானிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் இரவாக இது அமைந்தது. ஆனால் இந்தத் தோல்வியினால் ஸ்பெயின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்து விடவில்லை. ஆனால் அந்த அணி இந்த அதிர்ச்சியிலிருந்து மீள சிறிது காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்