மலேசியாவில் நடைபெறும் சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி போட்டியில் மலேசியாவை 6-1 என்ற கோல் கணக்கில் நொறுக்கிய இந்திய அணி இறுதிக்குத் தகுதி பெற்று ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
இந்தப் போட்டி தொடங்கும் முன் நியூஸிலாந்து 11 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் இருந்தது. இந்திய அணி 9 புள்ளிகளுடன் இருந்தது. மலேசியா அணி இந்தியாவை 7 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே இறுதி வாய்ப்பைப் பெறும் நிலை இருந்தது. ஆனாலும் இந்தியாவை வீழ்த்தி விட்டால் இந்திய அணி இறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்திருக்கும். இந்நிலையில் ஒன்று திரண்டு ஆக்ரோஷம் வெளிப்படுத்திய சர்தார் சிங் தலைமை இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.
இறுதியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் சுல்தான் அஸ்லன் ஷா கோப்பையை 6-வது முறையாக வெல்லும் வாய்ப்பு கிட்டும்.
மேலும் ஆண்ட்வெர்ப் ஹாக்கி தொடரில் மலேசியாவை 3-2 என்று இந்திய அணி வீழ்த்தி மலேசியாவின் ஒலிம்பிக் கனவுகளை இந்திய அணி தகர்த்ததால் அந்த அணி நிச்சயம் இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த பின்னணியில் மலேசியாவை எதிர்கொண்ட இந்திய அணி 4 தடுப்பாட்ட வீரர்கள் 3 நடுக்கள வீரர்கள், 3 முன்கள வீரர்கள் என்ற வியூகத்தில் களமிறங்கியது. மாறாக மலேசியா 3 தடுப்பட்ட வீரர்கள் 4 நடுக்கள வீரர்கள் 3 முன்கள வீரர்கள் என்ற வியூகத்தில் இறங்கியது.
கோல்கீப்பராக ஆகாஷ் அனில் சிக்டேயை இந்திய அணிக் களமிறக்கியது. தொடக்கத்திலேயே மன்பிரீத் பந்தை எடுத்துச் செல்ல சுரேந்தர் மலேசிய டி-க்குள் பந்தை செலுத்தினார், டேனிஷ் முஸ்தபாவின் கோல் முயற்சி எடுபடவில்லை.
அடுத்த 3-வது நிமிடமே வலது புறம் எஸ்.வி.சுனில் அபாரமான ஒரு நகர்த்தலை நிகழ்த்தி பந்தை பேஸ்லைனிலிருந்து மீண்டும் உள்புறம் அடிக்க அங்கு பந்தை அந்த வீரர் உள்ளே செலுத்த திம்மையா கோலாக மாற்ற இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றது.
தொடர்ந்து இந்திய அணியின் ஆதிக்கமே அதிகமிருக்க 7-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு அருமையான டீம் வொர்க்கில் மலேசிய டி வட்டத்துக்குள் தல்வீந்தரிடம் ஹர்ஜீத் பந்தை அளிக்க அவர் மீண்டும் ஹர்ஜீத்திடம் பந்தை கொடுக்க அவர் அருமையாக சற்றும் எதிர்பாராதவிதமாக ரிவர்ஸ் ஷாட்டில் கோலாக மாற்ற இந்தியா 7-வது நிமிடத்தில் 2-0 என்று முன்னிலை பெற்றது. ஹர்ஜீத் சிங்கின் முதல் சர்வதேச போட்டி கோலாகும் இது.
இதற்கு அடுத்ததாக மலேசிய வீரர் ரஷீத் இந்திய வீரர் மஞ்ஜித்தை தள்ளி விட இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோலாக மாற்ற முடியவில்லை.
இரண்டாவது கால்மணி நேர ஆட்டத்தில் மலேசியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இந்திய தடுப்பணை புடைசூழ மலேசிய வீரர் பந்தை கோலுக்கு வெளியே அடித்தார்.
ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் இந்தியா மேலும் மலேசியாவுக்குள் அதன் வட்டத்துக்குள் நெருக்கடி கொடுக்க இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. பெனால்டி ஷாட்டை முஜ்தபா தனது ஸ்டிக்கால் திருப்பி விட ரமந்தீப் சிங் அருமையாக கோலாக மாற்றினார் இந்தியா 3-0 என்று முன்னிலை பெற்றது.
இதற்கு சரியாக 2 நிமிடங்கள் கழித்து மேலும் இந்திய அணி வலதுபுறமும் இடது புறமும் நெருக்கடியைக் கொடுக்க பந்து மலேசிய கோல் எல்லைக்குள் கொண்டு செல்லப்பட்டு பந்து கோலை நோக்கி அடிக்கப்பட அது கிராஸ் பாரில் பட்டும் மீண்டும் வந்தது அதனை மிகச்சாதுரியமாக பயன்படுத்தி டேனிஷ் முஜ்தபா 4-வது கோலாக மாற்றினார்.
முதல் ஹாஃபில் இந்தியா 4-0 என்று முன்னிலை பெற, இடைவேளைக்குப் பிறகு மலேசியாவின் ஆட்டத்தில் கொஞ்சம் கூடுதல் ஆக்ரோஷம் இருந்தது, நிறைய முறை இந்திய எல்லைக்குள் புகுந்தனர். ஆனால் அவ்வாறு ஆக்ரோஷமாக ஆடும்போதே ஒரு ஷாட் இந்திய வீரர் கையில் சிக்க, அது எஸ்.வி.சுனிலுக்கு அனுப்பப்பட அவர் பந்தை டி-யிற்குள் கொண்டு சென்றார். 39-வது நிமிடத்தில் ரமந்தீப் சிங் இந்தியாவின் 5-வது கோலை அடித்தார்.
இந்நிலையில் மலேசியா தன் முதல் கோலை அடித்தது, ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் மலேசிய வீரர் ஷாரி சாபா ஆறுதல் கோல் அடித்தார். அதன் பிறகு ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இருந்த போது இந்தியாவின் தல்வீந்தர் சிங் 6-வது கோலையும் அடிக்க மலேசியா கைவிட்டது. இந்தியா அபார வெற்றியைப் பெற்று இறுதிக்குள் நுழைந்துள்ளது.
2010-ம் ஆண்டு சுல்தான் அஸ்லன் ஷா இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி இறுதிப்போட்டி மழை காரணமாக ரத்து ஆக, தென்கொரியாவுடன் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago