IND vs WI 1st T20I | ரோஹித், சூர்யகுமார் அதிரடியில் இந்தியா வெற்றி!

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டிவென்டி 20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இதன்மூலம் இந்தத் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகள் மூன்று டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 157 ரன்கள் எடுத்த நிலையில், 158 ரன்கள் என்ற இலக்குடன் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியது.

ரோஹித் மற்றும் இஷான் கிஷன் ஓப்பனிங் இறங்கினர். ரோஹித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பவுலிங்கை சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் விளாசினார். 19 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டர்களுடன் 40 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் இருந்த இஷான் கிஷன் பொறுமையாக விளையாடி 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்தமுறையும் விராட் கோலி சோபிக்கவில்லை. 17 ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்திய அணி நிலைகுலைந்தது.

ரிஷப் பந்த் 8 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் - வெங்கடேஷ் ஐயர் இணை சற்று நிதானமாக விளையாடியது. ஆட்டத்தின் 16-வது ஓவரின் 5-வது பந்தில் ஒரு பவுண்டரியையும், கடைசி பந்தில் ஒரு சிக்ஸரையும் விளாசிய சூர்யகுமார், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை வலுவாக்கினார்.

இறுதியில், இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் 18 பந்துகளில் 34 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 13 பந்துகளில் 24 ரன்களும் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் தங்களது இன்னிங்ஸை துவக்கினர். இருவரும் பேசிவைத்தார்போல் ஹிட் மோடில் தொடக்கம் கொடுத்தனர். பிராண்டன் கிங், புவனேஷ்வர் குமார் ஓவரை பவுண்டரியுடன் வெல்கம் செய்தார். அந்த பவுண்டரியை என்ன வேகத்தில் அடித்தோரோ அதே வேகத்தில் புவனேஷ்வர் குமார் ஓவரில் சூர்யாகுமார் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் அவுட் ஆனார். இதன்பின் பூரன் களம்புகுந்தார். இவரும், மேயர்ஸும் அடுத்த ஐந்து ஓவர்களுக்கு இந்திய அணியின் பவுலிங்கை துவம்சம் செய்தனர்.

குறிப்பாக, மேயர்ஸ் அடித்தால் பவுண்டரி மட்டுமே என்னும் சொல்லும் அளவுக்கு ஏழு பவுண்டரிகளை அடித்தவர், 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் சஹால் பந்துவீச்சில் அவுட் ஆனார். மறுமுனையில் இருந்த பூரனுக்கு அடுத்துவந்த வீரர்களில் பொல்லார்ட் தவிர மற்ற எவரும் பெரிய சப்போர்ட் செய்யவில்லை. இதனால் ஒருபுறம் அறிமுக வீரர் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் விக்கெட் விழுந்து கொண்டிருக்க, மறுபுறம் பூரன் தனது அதிரடியை தொடர்ந்து அரைசதம் கடந்தார்.

18-வது ஓவரின் கடைசி பந்தில் பூரனும் 61 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்ஷல் படேல் ஓவரில் அவுட் ஆகினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. கேப்டன் பொல்லார்ட் 24 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் மற்றும் ஹர்ஷல் படேல் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE