IPL 2022 | குஜராத் டைட்டன்ஸ் - பெயர்க் காரணத்தை விவரித்த அகமதாபாத் அணி நிர்வாகம்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஐபிஎல் 15-வது சீசனில் அறிமுகமாகும் அகமதாபாத் அணியின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான அகமதாபாத் அணிக்கு 'குஜராத் டைட்டன்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதேநேரம் புதிதாக அகமதாபாத், லக்னோ என இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக அகமதாபாத் அணி தனது பெயரை அறிவித்துள்ளது. அதன்படி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான அகமதாபாத் அணிக்கு 'குஜராத் டைட்டன்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தனியார் முதலீட்டு நிறுவனமான ’சிவிசி கேப்பிடல் பார்ட்னர்’ (CVC Capital Partner) ரூ.5,635 கோடி முதலீட்டில் அகமதாபாத் அணியை வாங்கியுள்ளது. 'குஜராத் டைட்டன்ஸ்' பெயர் காரணம் குறித்து தெரிவித்துள்ள அணி நிர்வாகம், குஜராத் மாநிலத்தின் கிரிக்கெட் பாரம்பரியத்தை போற்றும்வகையில் இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. உரிமையாளர்களில் ஒருவரான சித்தார்த் படேல், "குஜராத்தின் பல ஆர்வமுள்ள ரசிகர்களுக்காக சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அதனால்தான் நாங்கள் 'டைட்டன்ஸ்' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளோம். வீரர்களின் மெகா ஏலம் நெருங்கிவருகிறது. புதிய சீசனுக்கு ஏற்ற வகையில் சரியான வீரர்களை தேர்ந்தெடுப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 'குஜராத் டைட்டன்ஸ்' ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது. ஏலத்துக்கு முன்பாகவே ஹர்திக் பாண்டியா அதிகாரபூர்வமாக ரூ.15 கோடிக்கு அகமதாபாத் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங் செய்த சுப்மன் கில் ரூ.8 கோடிக்கும், ஸ்பின்னர் ரஷீத் கான் ரூ.15 கோடிக்கும் அகமதாபாத் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தலைமைப் பயிற்சியாளராகவும், விக்ரம் சோலங்கி அகமதாபாத் அணியின் இயக்குநராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் இந்தியா உலகக் கோப்பை வெல்ல உதவிகரமாக இருந்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் அணியின் வழிகாட்டியாகவும் பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE