ஆண்டிகுவா: யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. ராஜ் பாவாவின் அட்டகாசமான ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் துணையுடன் இந்திய இளம்படை தனது இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி மகுடம் சூடியது.
இப்போட்டியில் 190 என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இந்தியப் பந்துவீச்சின் சிறப்பான ஆட்டத்தால் 189 ரன்களில் இங்கிலாந்தை சுருட்ட முடிந்தது.
வெற்றி இலக்கு எளிதுதான் என்ற மனநிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதான். தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஆங்கிரீஷ் ரகுவன்ஷி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்னூர் சிங் - ஷேக் ரஷீத் இணை மிக நிதானமாக விளையாடி, நல்ல அடித்தளத்தை அமைத்தது. ஹர்னூர் சிங் 21 ரன்களும், ஷேக் ரஷீத் அரைசதமும் அடித்தனர்.
கேப்டன் யஷ் துல் 17 ரன்களும், நிஷான் சிந்து ஆட்டமிழக்காமல் அரைசதமும் எடுத்தனர். ஆல்ரவுண்டர் ராஜ் பாவா 35 ரன்கள் எடுத்தார். குஷால் தம்பே ஒரு ரன் மட்டுமே எடுத்தார். தினேஷ் பானா ஆட்டமிழக்காமல் 13 ரன்கள் எடுத்தார்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ராஜ் பாவா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகன் விருதுக்கு இங்கிலாந்தின் டிவால் பிரெவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெருமித தருணம்: கேப்டன் யஷ்
இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் யஷ் துல், "இந்தியாவுக்கு இது பெருமித தருணம். ஆரம்பத்தில் ஒன்றிணைவதில் தடுமாற்றம் இருந்தது. ஆனால், கடைசியில் ஒரு குடும்பமாகவே மாறியது நம் அணி. எங்களுக்கு நிர்வாக ரீதியில் கிடைத்த உறுதுணைக்கும் நன்றி" என்றார் நெகிழ்ச்சியுடன்.
முன்னதாக, இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. ஒப்பனர்களாக ஜார்ஜ் தாமஸ் மற்றும் ஜேக்கப் பீத்தல் வந்தனர். இந்த சீசனில் இங்கிலாந்தின் தொடர் வெற்றிக்கு மிக முக்கிய தூணாக இருந்த இந்த ஜோடியை இரண்டாவது ஓவரிலேயே பிரித்தார் இந்திய பவுலர் ரவிக்குமார். இரண்டே ரன்களில் அவரை வெளியேற்றினார். அடுத்துவந்த இங்கிலாந்து கேப்டன் டாம் பெர்ஸ்ட்டை அதே ரவிக்குமார் தனது இரண்டாவது ஓவரில் டக் அவுட் செய்தார்.
ரவிக்குமார் இங்கிலாந்தின் விக்கெட் சரிவை தொடங்கி வைத்தாலும், இந்தியாவின் ஸ்டார் ஆல் ரவுண்டர் ராஜ் பாவா அதை முழுவதுமாக பார்த்துக்கொண்டார். டாம் பெர்ஸ்ட்டுக்கு பிறகு வந்த அடுத்த மூன்று வீரர்களையும் (ஜேம்ஸ் ரெவ்வை தவிர) பத்து ரன்களுக்கு மேல் எடுக்கவிடாமல் அவுட் செய்தார். ஓப்பனிங் இறங்கி சிறிதுநேரம் நிலைத்திருந்த ஜார்ஜ் தாமஸையும் காலி செய்தார் ராஜ் பாவா. இதனால் 91 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து.
ஜேம்ஸ் ரெவ் மட்டும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடினார். ஆரம்பத்தில் பொறுமையாக ஆடிய ஜேம்ஸ், போக போக அதிரடியாக விளையாடினார். இறுதியாக 95 ரன்கள் எடுத்திருந்த போது ரவிக்குமார் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பின் ராஜ் பாவா கடைசி விக்கெட்டையும் எடுக்க, 45வது ஓவரில் இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் ராஜ் பாவா 5 விக்கெட்டுகளும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இந்திய அணியை போன்றே இங்கிலாந்து அணியும் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி கடைசியாக 1998ம் ஆண்டு பட்டம் வென்றிருந்தது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மகுடம் சூட முனைப்பு காட்டியது. ஆனால், அது நடக்கவில்லை.
U-19 இறுதிப் போட்டியில் இந்திய அணி களம் கண்டது இது 8-வது முறையாகும். இதில், இப்போதைய வெற்றியுடன் சேர்த்து இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த 1988 முதல் நடைபெற்று வரும் இந்த ஜூனியர் உலக கோப்பையை அதிக முறை வென்ற அணி என்ற பெருமையையும் இந்திய அணி தக்கவைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago