மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா செய்துள்ளார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகிகள் உடனான நேற்றைய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவை எடுத்துள்ளார்.
பதவி காலம் முடிவதற்கு கிட்டத்தட்ட இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், லாங்கர் ராஜினாமா செய்திருப்பது குறித்து அறிக்கை வெளியிட்ட அவரின் மேலாளர், "முகம் தெரியாத சிலரின் விமர்சனங்களைத் தாண்டி, டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் என ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை வெற்றியின் உச்சிக்கு கொண்டுச் சென்ற பிறகு தனது பயிற்சியாளர் பணியை முடித்துக்கொண்டுள்ளார். 2018-ல் ஆஸ்திரேலிய அணி எந்த நிலையில் இருந்தபோது லாங்கர் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்தார் என்பதை அவரை விமர்சித்தவர்கள் நினைவுப்படுத்தி பாருங்கள்" என்று கோபமாக தெரிவித்துள்ளார். இந்த ஆவேச வார்த்தைக்கு பின்னாலும், லாங்கரின் ராஜினாமாவுக்கும் பின்னணியில் நீண்ட சர்ச்சைகள் உள்ளன.
2018-ல் பால் டேம்பரிங் விஷயத்தில் சிக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் மிகப்பெரிய தலைகுனிவை சந்தித்தபோது அப்போதைய பயிற்சியாளர் டேரன் லீமேன் ராஜினாமா செய்தார். ஏற்கெனவே, ஸ்மித், வார்னர் போன்றோர் தடை விதிப்பு காரணமாக ஆஸ்திரேலிய மிகப்பெரிய ஆட்டம் கண்டிருந்தது. தள்ளாட்டத்தில் இருந்த அந்த அணிக்கு மீட்பராக சேர்ந்தார் முன்னாள் ஓப்பனிங் வீரர் ஜஸ்டின் லாங்கர். ஒருகாலத்தில் மேத்யூ ஹைடன் உடன் எதிரணிகளை பேட்டிங்கில் துவம்சம் செய்த லாங்கர், ஆஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்டுகள், 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவர். இவரின் வருகை முன்னாள் வீரர்கள் புதுநம்பிக்கையை ஏற்படுத்தியது.
அதன்படியே, பயிற்சியாளர் பொறுப்பேற்றவுடன் கேப்டன் டிம் பெய்ன் உடன் இணைந்து சரிவில் இருந்த அணியை மீட்டெடுக்கும் பணிகளை தொடங்கினார். ஆனால், அவர் வீரர்களிடம் நடந்துகொண்ட விதம் ஆரம்பத்திலேயே சர்ச்சைகளுக்கு விதைபோட்டது. ஒருகட்டத்தில் முன்னணி வீரர்கள் வெளிப்படையாக லாங்கர் மீது புகார் தெரிவிக்க, டிரெஸ்ஸிங் ரூமின் அமைதியை குலைத்தது. பின், தனது கண்டிப்பான நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட லாங்கர், இனி வீரர்களுடன் சுமுகமான உறவை கடைபிடிப்பதாக தெரிவித்தார். இது நடந்து மாதங்கள் ஆகினும், லாங்கர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் உறவு மோசமாகவே செய்தது.
» 2022 குளிர்கால ஒலிம்பிக்: ஒற்றை வீரராக தேசிய கொடியை ஏந்திச் சென்ற இந்தியாவின் ஆரிஃப் கான்
» 155 கி.மீ வேகத்தில் பந்துவீசும் பாகிஸ்தான் பவுலருக்கு ஐசிசி தடை
எனினும், ஒரு பயிற்சியாளராக அணிக்கு மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார் லாங்கர். இவரின் பயிற்சியின் கீழ் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியை தவிர முக்கியமான தொடர்கள் அனைத்திலும் ஆஸ்திரேலியா வெற்றிகொண்டது. டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி என சாதனையின் உச்சத்தை தொட்டது. இந்த வெற்றிகளுக்கு அடித்தளம், லாங்கரின் கண்டிப்பு பாணியிலான பயிற்சிகள் தான். இத்தனை வெற்றிக்கு பிறகும், அணியில் அங்கம் வகிக்கும் சில வீரர்கள், லாங்கர் பயிற்சியாளர் பொறுப்பில் இருப்பதை விருப்பம் தெரிவிக்கவில்லை. குறிப்பாக டெஸ்ட் அணியின் கேப்டன் கம்மின்ஸ் உட்பட பலர் அவருக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில்தான் ஜூன் மாதத்துடன் பதவிக்காலம் முடிவடைவுள்ளதை அடுத்து அதனை நீட்டிக்க லாங்கர் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்கு ரிக்கி பான்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன், மிட்சேல் ஜான்சன் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவும் தெரிவித்திருந்தனர். ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்புக்கொள்ளவில்லை. அதிகபட்சமாக, மேலும் ஆறு மாதங்கள் மட்டுமே பொறுப்பை நீட்டிக்க முடியும் என கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகிகள் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொள்ள விரும்பாத லாங்கர், தனது பதவிகாலம் முடிவடையும் முன்பாகவே ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
லாங்கர் விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார் ரிக்கி பாண்டிங். "ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இது சோகமான நாள். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் சிறந்த நபர்களாக விளங்கிய ஜஸ்டின் லாங்கர் மற்றும் டிம் பெய்ன் விவகாரங்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கையாண்ட விதம் அவமானத்துக்குரியது. கடந்த ஆறு மாதங்களில் மிகப்பெரிய தோல்விகளில் இருந்து அணியை மீட்டெடுத்து கொண்டுவந்தது இவர்கள் இருவர் மட்டுமே. ஆனால் அவர்களை நடத்திய விதம் சங்கடத்துக்குரியது" என்று ரிக்கி பான்டிங் விமர்சித்துள்ளார்.
2018ல் பால் டேம்பரிங் சர்ச்சை, பாகிஸ்தான் அணியுடனான தோல்வி, இந்தியாவுடன் டெஸ்ட் தொடர் தோல்வி என தொடர் தோல்விகளால் மூழ்கிகிடந்த ஆஸ்திரேலியா என்னும் கப்பலை தனது பயிற்சியால் சில மாதங்களிலேயே கரைச்சேர்த்தவர் லாங்கர். அவரின் பயிற்சின் கீழ், 2019ல் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது, அதே ஆண்டில் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டில் டெஸ்ட் தொடரில் வெற்றி, இங்கிலாந்துடன் ஒருநாள் தொடர் வெற்றி, 2020ல் முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது, ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை 4-0 என வீழ்த்தியது என ஆஸ்திரேலியா பெற்ற வெற்றிகள் ஏராளம். உண்மையில், பான்டிங் சொன்னதை போல லாங்கரின் ராஜினாமா ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றின் சோகமான நாள் தான்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago