புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்கீடு என்பது குறைவாகவே இருந்தது.
2020 - 2021ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.2827 கோடியை விளையாட்டுத்துறைக்காக ஒதுக்கீடு செய்தது. அந்த ஆண்டுகள் நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் உள்நாட்டு போட்டிகள் கரோனா தொற்றுநோயால் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் அறிவித்த பட்ஜெட்டை ரூ.1878 கோடியாகக் குறைத்தது. இதேபோல், 2021-2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.2596 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிதியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் வர, திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ.2757.02 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இந்தமுறை விளையாட்டுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்ப்புகள் இருந்தன.
காரணம், இந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டிகளும், சீனாவில் ஆசியன் கேம்ஸ் தொடரும் நடக்கவுள்ளன. இதேபோல், 2024ல் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கு இந்திய வீரர்களை தயார்படுத்த அதிகப்படியான வசதிகள் தேவைப்படுவதால் நிதி ஒதுக்கீடுகள் அதிகமாக இருக்க வேண்டும் என விளையாட்டுத்துறை சார்பில் கோரிக்கைகள் விடப்பட்டன. அந்தவகையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில் விளையாட்டு என்பது குறிப்பிடப்படவில்லை. என்றாலும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் கேமிங் என்று குறிப்பிட்டார்.
அவர் தனது உரையில், "அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக் (AVGC) போன்றவை இளைஞர்களை வேலைகளுக்கு தயார்படுத்துவதற்கா அபரிமிதமான திறனை வழங்குகிறது. எனவே இதனை மேம்படுத்த AVGC ஊக்குவிப்பு பணிக்குழு என்பது அமைக்கப்படும்" என்று தெரிவித்தார். தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கான நிதி விவரங்களை அறிவித்தார். அதன்படி, விளையாட்டுத்துறைக்கு நிதி ஒதுக்கீடு ரூ.3062.60 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டை காட்டிலும் இது ரூ.305.58 கோடி அதிகம் ஆகும். பட்ஜெட் வரலாற்றில் இந்த அளவு பெரியத் தொகை விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது கிடையாது. விளையாட்டுக்கென ரூ.3000 கோடிக்கும் அதிகம் ஒதுக்கீடு செய்யப்படுவது இதுவே முதல்முறை.
கேலோ இந்தியா திட்டத்திற்கான பட்ஜெட் அதிகரிப்பு: விளையாட்டுத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும், ஆசிய மற்றும் ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள திறமையான வீரர்களை அடையாளம் கண்டுகொள்ளும் பொருட்டு மத்திய விளையாட்டுத் துறை சாா்பில் கேலோ இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடும் பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.879 கோடியாக கேலோ இந்தியா திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு ரூ.974 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், இளைஞர்களிடையே தேசியத்தையும் ஒழுக்கத்தையும் வளர்க்கும் திட்டமான National Youth Empowerment திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இந்திய அரசு 10 லட்சம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு கடந்த ஆண்டு ரூ.108 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.138 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய விளையாட்டு ஆணையத்துக்கான (SAI) நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு SAI ஆணையத்துக்கு பட்ஜெட்டில் ரூ.500 கோடி வழங்கப்பட்ட நிலையில் இம்முறை அது ரூ. 660.41 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்ட இந்திய விளையாட்டு ஆணைய மைதானங்களை பழுதுபார்ப்பதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.30 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டு ரூ.75 கோடியாக ஒதுக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago