ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் மெத்வதேவை ரசிகர்களை சிலிர்க்கவைத்த ஆட்டத்தில் வீழ்த்திய ஸ்பெயினின் ரஃபேல் நடால், 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் சூடி, டென்னிஸ் உலகில் புதிய சரித்திரத்தை எழுதினார். 5 மணி 24 நிமிடங்கள் வரை நீடித்த இந்த காத்திரமான ஆட்டத்தில், நடால் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தினார்.
டென்னிஸ் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து படைத்த ஞாயிறுக்கிழமை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் - ஸ்பெயினின் ரஃபேல் நடால் மோதினர். இதுவே 2022-ம் ஆண்டின் மறக்க முடியாத முதல் டென்னிஸ் போட்டியாகவே ரசிகர்களுக்கு அமைந்தது.
களத்தில் ஆரம்பம் முதலே அதகளம்தான். முதல் செட்டில் மெத்வதேவ் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6-2 என்ற கணக்கில் வென்றார். இதனால், இரண்டாவது செட் விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி பரபரத்தது. இந்த செட்டையும் மெத்வதேவ் தான் வென்றார். எனினும், நடால் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்து, கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது செட்டை மெத்வதேவ் 7-6 (7-5) என்ற கணக்கில் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு மிகுந்திருந்த மெத்வதேவுக்கு, தனக்கு வழக்கமான ஆட்ட நேர்த்தியால் மூன்றாவது செட்டில் அதிர்ச்சி அளித்தார் நடால். அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தியதன் மூலம் களத்தில் முன்னேற ஆரம்பித்தார். அதே உறுதியான ஆட்டத்தை நான்காவது செட்டிலும் வெளிப்படுத்தி, அதையும் 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். மெத்வதேவும் இயன்றவரையில் போராடினார். ஆனால், உத்வேகக் காற்றோ நடால் பக்கம் வலுத்தது. முதல் இரண்டு செட்களை இழந்த பிறகும், நடால் மீண்டெழுந்த விதம் கண்டு ரசிகர்கள் சிலிர்த்தனர்.
நடாலின் வெற்றியை உறுதி செய்த ஐந்தாவது செட்டிலும், ஆரம்பத்திலேயே அவர் ஆதிக்கம் செலுத்தினார். இந்த செட்டில் 5-3 என்ற நிலையில் முன்னிலை வகித்த நடாலுக்கு மீண்டும் அதிர்ச்சி தந்தார் மெத்வதேவ். அதன்பின் அடுத்தடுத்து இரண்டு கேம்களை வசப்படுத்தி 5-5 என்ற சமநிலைக்கு வந்தார் மெத்வதேவ். ஆட்டம் விறுவிறுப்பின் உச்சத்துக்கே சென்றது. அதன்பின் இரண்டு கேமையுமே நடால் வென்றார். கடைசி வரை வெற்றியின் விளிம்பில் இருந்த மெத்வதேவ் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இறுதியில், அந்த செட்டை நடால் 7-5 என்ற கணக்கில் வெற்று, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி, 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற மகத்தான சரித்திரத்தை நிகழ்த்தினார்.
இதற்கு முன் இவ்விருவரும் நான்கு முறை மோதியிருக்கின்றனர். அதில், நடால் மூன்று முறையும், மெத்வதேவ் ஒரு முறையும் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
ஆறு மாதங்களுக்கு பிறகு...
கடைசியாக 2020 பிரெஞ்ச் ஓபனுக்கு பிறகு பாதத்தில் ஏற்பட்ட காயத்தால் ஆறு மாதங்கள் நடாலால் விளையாட முடியவில்லை. இந்த வருட தொடக்கத்தில் விளையாட ஆரம்பித்தார். ரோஜர் பெடரர், ஜோகோவிச், நடால் மூவரும் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களில் முதலிடத்தில் இருந்தனர். இந்த ஆண்டில் இதுவரை தோல்விகளை சந்திக்காமல் 10 வெற்றிகளை பெற்றுள்ள நடால், 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று புது வரலாறு படைத்தார்.
முன்னதாக அரையிறுதி வெற்றிக்கு பிறகு பேசிய நடால், "என்னைப் பொறுத்தவரை மற்ற எல்லாவற்றையும் விட ஆஸ்திரேலிய ஓபனே இப்போது பெரிதாக தெரிகிறது. காயத்தில் இருந்து மீண்டு இந்த நிலைக்கு வந்துள்ளதை பார்க்கும்போது நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். 2009-ல் ஒருமுறை வெற்றிபெற்றாலும், 2012-ல் ஜோகோவிச், 2017-ல் ரோஜருக்கு எதிராக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் தோற்றுள்ளேன். ஆனால், இந்த ஆண்டு மீண்டும் ஒரு வாய்ப்பு வரும் என்று நான் நினைக்கவே இல்லை. ஃபைனலில் என்னால் முடிந்தவரை முயற்சிசெய்வேன். ரசிகர்களின் ஆரவாரம் என்னை மீண்டும் இந்த களத்துக்கு கொண்டுவந்துள்ளது. மீண்டும் இங்கே இறுதிப் போட்டியில் விளையாடுவது என்பது எனக்கு நிறைய அர்த்தம் மிகுந்தது" என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.
இறுதிப் போட்டியில் தன்னால் முடிந்தவரை என்று கூறியிருந்த நடால், கடைசி வரை தன் முயற்சியைத் தளரவிடாமல் உத்வேகத்துடன் விளையாடி வெற்றி வாகை சூடியதுடன், ஆடவர் டென்னிஸ் உலகில் புதிய சரித்திரத்தையும் படைத்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago