பார்ல்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 297 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி போலாண்ட் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல்முறையாக கே.எல். ராகுல் ஒருநாள் போட்டியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். என்றாலும் டாஸ் அவருக்கு கைகொடுக்கவில்லை. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்ய, ஆரம்பத்திலேயே இந்திய வேகப்புயல் பும்ரா அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஓபனிங் பேட்ஸ்மேன் மாலனை ஆறே ரன்களில் நடையைக்கட்ட வைத்தார் பும்ரா.
மற்றொரு துவக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா உடன் இணைந்து சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும், அஸ்வின் இந்தக் கூட்டணியை பிரித்தார். டி காக் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து மார்க்கரம் 4 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணியின் அறிமுக வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதன்பின் கேப்டன் பவுமா இளம் வீரர் ராசி வான்டர் டூசன் உடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.
பவுமா நிதானமாக விளையாடினார் என்றால், வான்டர் டூசன் அதிரடி காட்டினார். ஒருகட்டத்தில் இந்திய பௌலர்கள் இவர்கள் கூட்டணியை பிரிக்க முடியாமல் தவித்தனர். கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய பவுமா ஒருநாள் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அவர் செஞ்சுரி பதிவு செய்த அடுத்த சில ஓவர்களில் வான்டர் டூசனும் 83 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார். ஒருவழியாக ஆட்டத்தின் 49-வது ஓவரில் போராடி இந்தக் கூட்டணியை பிரித்தார் பும்ரா. 110 ரன்கள் எடுத்தபோது கேப்டன் பவுமா பும்ரா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இந்திய அணிக்கு எதிராக நான்காவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற பெருமையை பவுமா - வான்டர் டூசன் பெற்றது. 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் இவர்கள் எடுத்தனர். இறுதிவரை களத்தில் நின்ற வான்டர் டூசன் மொத்தம் 96 பந்துகளை சந்தித்து 126 ரன்கள் சேர்த்தார்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா இரண்டு விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.