உத்தரகாண்ட் தேர்தல்: பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர் ஹரக் சிங் ராவத் இன்று காங்கிரஸில் சேர்கிறார்?

By ஏஎன்ஐ

டேராடூன்: உத்தரகாண்டில் உள்ள பாஜக அரசில் அமைச்சராக இருந்த ஹராக் சிங் ராவத் கட்சியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்ட நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்டில் உள்ள 70 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது, மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசியல் முதல்வர்கள் மட்டும் 3 பேர் இதுவரை மாற்றப்பட்டு ஒருவிதமான நிலையற்ற தன்மையே நிலவுகிறது. அதேநேரம், காங்கிரஸ் கட்சியும் இழந்த ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே பாஜக அரசில் அமைச்சராக இருந்த ஹராக் சிங் ராவத்துக்கும், முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கும் இடையே உட்கட்சி மோதல் தீவிரமானது. ஹராக் சிங் ராவத் தன்னுடைய மருமகளுக்கு பாஜகவில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு கோரினார். ஆனால், அதற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் மோதல் தீவிரமானதையடுத்து, அமைச்சரவையிலிருந்து விலக்கியதோடு மட்டுமல்லாமல், பாஜகவிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கிவைத்து முதல்வர் தாமி உத்தரவிட்டார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் முதல்வர் புஷ்கர் சிங் செயல் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், ஹராக் சிங் ராவத்தும்,அவரின் மருமகள் அனுகீர்த்தி கசன் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்காக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இருவரும் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து காங்கிரஸில் சேரலாம் எனத் தெரிகிறது. ஹராக் சிங் ராவத்துக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏக்கள் இருவரும் உடன் சென்றதாகவும், அவர்களும் காங்கிரஸில் இணைவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹராக் சிங் ராவத் காங்கிரஸ் கட்சியிலிருந்துதான் பாஜகவுக்கு மாறினார். மீண்டும் ஹராக் சிங் காங்கிரஸுக்கு வருவதை முன்னாள் முதல்வர் ஹரிஸ் ராவத் வரவேற்றுள்ளார். ஹராக் சிங் ராவத்துக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று ஹரிஸ் ராவத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உத்தரகாண்ட் தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து மத்தியக் குழு உறுப்பினர் கடந்த சனிக்கிழமை கூடி விவாதித்துப் பட்டியலிட்டுள்ளனர். ஆனால், அந்தப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை ஹராக் சிங் ராவத் காங்கிரஸில் சேர்ந்தால், அவருக்கும், அவரின் மருமகளுக்கும் காங்கிரஸில் வாய்ப்பு வழங்கப்படும்.

கடந்த 2016-ம் ஆண்டு ஹரிஸ் ராவத் அரசுக்கு எதிராக ஹராக் ராவத் பிரச்சினையை ஏற்படுத்தி, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹராக் சிங் ராவத் தனது மருமகன் கீர்த்திக்கு லான்ஸ்டோனி தொகுதியில் சீட் கேட்டு வருகிறார். மேலும் பாஜக எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியில் இருந்த யாஷ்பால் ஆர்யாவும் காங்கிரஸில் சேர்ந்துள்ளார். அவருக்கும், அவரின் மகனுக்கும் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE