கூக்ளி, யார்க்கர்களில் மடிந்த மும்பை இந்தியன்ஸ்: டெல்லி அணி வெற்றி

By இரா.முத்துக்குமார்

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 17-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி டேர் டெவில்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட டெல்லி டேர் டெவில்ஸ் அணி 4 விக்கெடுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி மந்தமான பேட்டிங், டெல்லி அணியின் அபார பந்து வீச்சு ஆகியவற்றின் கலவையில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

குறைந்த இலக்கை டெல்லி டேர் டெவில்ஸ் அணி சிறப்பாக தடுத்து வெற்றி பெற்றதற்குக் காரணம் அமித் மிஸ்ரா, கிறிஸ் மோரிஸ், ஜாகிர் கான் ஆகியோரது பந்து வீச்சைக் குறிப்பிடலாம், அமித் மிஸ்ராவின் கூக்ளிகள் கடைசி வரை சரியாகவே புரிந்து கொள்ளப்படவில்லை, அதே போல் கிறிஸ் மோரிஸ், ஜாகிர் கான் யார்க்கர்களுக்கு மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா, கெய்ரன் பொலார்டு ஆகியோரிடம் கூட விடையில்லை. ஜாகீர் கான் கேப்டன்சி முறை கபில்தேவை நினைவூட்டுவதாக அமைந்தது. அதாவது கடைசி வரை வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகமும், தன்னம்பிக்கையும், யார்க்கர்களும், கடைசியில் பொலார்ட் ஷாட்டை கேட்ச் பிடிக்க முன்னால் ஓடி வராமல் பின்னால் நின்று தரையில் பட்டு பிடித்து 2 ரன்களை பவன் நேகி விட்டுக் கொடுத்த போது அவரது மந்தத் தன்மைக்கு உடனடியாக அதிருப்தியைத் தெரிவித்தது போன்றவை கபில்தேவ் ரக தலைமைத்துவ உணர்வு.

மும்பை இந்தியன்ஸ் அணி பவர் பிளே முடிவில் 50 ரன்களைக் கடந்து நன்றாகச் சென்று கொண்டிருந்தது. குருணால் பாண்டியா 17 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருந்த போது 12.2 ஓவர்களில் 102/2 என்று மும்பை இந்தியன்ஸ் பாதுகாப்பாகவே சென்று கொண்டிருந்தது.

ஆனால் ஜாகிர் கான் ரோஹித் சர்மாவுக்கு ஒரு நெஞ்சுயர ஷார்ட் பிட்ச் பந்தை வீச அதை அவர் தடுத்தாட ரன்னர் முனையிலிருந்து தடதடவென ஓடிய குருணால் பாண்டியாவை, ஜாகிர் கான் பந்தை ஓடிச் சென்று எடுத்து சரியாக ரன் அவுட் செய்ய மும்பை இந்தியன்சின் ரன் வேகம் குறைந்தது. இதன் பிறகே மும்பை இண்டியன்ஸ் அணியின் ஆட்டம் உத்வேகம் குறைந்தது.

ரோஹித் சர்மா 48 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவிடம் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ரன் அவுட் ஆனார். ஆனால் அவர் முன்னமேயே அடிக்கத் தொடங்கியிருக்க வேண்டும், ஒரு முனையை தக்க வைக்கிறேன் பேர்வழி என்று 18 பந்துகளில் 41 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்று ஆகும் அளவுக்கு அவர் காலூன்றும் வேலையைச் செய்திருக்கக் கூடாது, ‘ஆங்க்கர்’ ரோலை அவர் கொஞ்சம் கூடுதலாகப் புரிந்து கொண்டார் போலும். இவரும் பொலார்டும் மாறி மாறி அவர் அடிப்பார் என்று இவரும், இவர் அடிப்பார் என்று அவரும் சிங்கிள்களை பரிமாறிக் கொண்டனர்.

கெய்ரன் பொலார்டால் ஒன்றும் செய்ய முடியவில்லை, அவருக்கு அமித் மிஸ்ரா, கிறிஸ் மோரிஸ், ஜாகிர் கான் ஆகியோர் கடும் தொல்லைகளைக் கொடுத்தனர், அவரும் நல்ல பந்துகளை அடிக்கும் அளவுக்கு உத்தி ரீதியான துல்லியமான வீரர் அல்ல. ஒரே புல்டாஸ் வீசினார் ஜாகீர் கான் அதனை முறையாக சிக்ஸ் அடித்தார். ஆனால் கடைசியில் 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜாகீர் கானின் கட்டரை சரியாக கணிக்காமல் கவர் திசையில் மோரிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

முன்னதாக தொடக்கத்திலேயே பார்த்திவ் படேல் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு அம்பாத்தி ராயுடு 23 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து அமித் மிஸ்ராவின் ஹூக்ளிக்கு பவுல்டு ஆனார். குருணால் பாண்டியா ஜாகீர் கானால் ரன் அவுட் ஆன பிறகு அதிரடி வீரர் ஜோஸ் பட்லரை கடும் நெருக்கடிக்குள்ளாக்கிய அமித் மிஸ்ரா ஒரு வேகமான கூக்ளியை வீச பட்லர் ஒதுங்கிக் கொண்டு ஆட முயன்றார், ஆனால் அவரது வலது கால் ஸ்டம்புக்கு நேராக நிலைக்க பந்து கால்காப்பைத் தாக்க எல்.பி. ஆனார்.

14.3 ஓவர்களில் 110/4 என்ற நிலையில், 33 பந்துகளில் 55 ரன்கள் என்று ஓரளவுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு மும்பைக்கு இருந்தது, ஆனால் பிரமாதமான பவுலிங்கினால் பவுண்டரிகளே அடிக்க முடியாமல் 18 பந்துகளில் 41 என்பது 12 பந்துகளில் 32 என்பதாகி கடைசி ஓவரில் 21 ரன்கள் என்ற கடுமையான நிலையை எட்ட மும்பை இந்தியன்ஸ் தோல்வி தழுவியது.

டெல்லி அணியில் அமித் மிஸ்ரா 4 ஓவர்களில் 24 ரன்கள் 2 முக்கிய விக்கெட்டுகள். மொகமது ஷமி 3 ஓவர்களில் 24 ரன்கள் விக்கெட் இல்லை, பவன் நெகி (அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர்) 1 ஓவர் 19 ரன்கள் சாத்துமுறையைச் சந்தித்தார். கிறிஸ் மோரிஸ் 4 ஓவர் 27 ரன் 1 விக்கெட், ஜாகிர் கான் 4 ஓவர் 30 ரன் ஒரு விக்கெட், இம்ரான் தாஹிர் 4 ஓவர் 29 ரன் விக்கெட் இல்லை.

சஞ்சு சாம்சன், டுமினி அதிரடி:

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட டெல்லி டேர் டெவில்ஸ் அணி முக்கிய அதிரடி வீரர் குவிண்டன் டி காக் விக்கெட்டை அவரது சொந்த எண்ணிக்கையான 9 ரன்களில் மெக்லினாகனிடம் இழந்தது.

ஸ்ரேயஸ் ஐயர் நன்றாகத் தொடங்கி ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 19 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியாவிடம் ஆட்டமிழக்க, கருண் நாயரும் 5 ரன்களில் ஹர்பஜனிடம் அவுட் ஆக டெல்லி அணி 8 ஓவர்களில் 54/3 என்று தடுமாறியது.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் (60), ஜே.பி.டுமினி ஜோடி இணைந்து 51 பந்துகளில் 4-வது விக்கெட்டுக்காக 71 ரன்களைச் சேர்த்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது, சஞ்சு சாம்சன், 48 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 60 ரன்கள் எடுத்து மெக்லினாகனிடம் வீழ்ந்தார். கடைசியில் ஜே.பி.டுமினி சில அருமையான அதிரை ஷாட்களை ஆடி 31 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 49 ரன்கள் எடுக்க, பவன் நேகி 10 ரன்கள் எடுக்க 164 ரன்களை எட்டியது.

மும்பை பந்து வீச்சிலும் குருணால் பாண்டியா சிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 25 ரன்களையே விட்டுக் கொடுத்தார். ஆனால் ஹர்திக் பாண்டியா 1 ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்திய நிலையிலும் அவருக்கு மீண்டும் பவுலிங் அளிக்கப்படவில்லை. பும்ரா தொடர்ந்து சாத்து வாங்கியும் அவர் 4 ஓவர்கள் கொடுக்கப்பட்டார், இதில் அவர் 42 ரன்களை விட்டுக் கொடுத்தார். சவுதிக்கும் ஓவர் முடிக்கப்படவில்லை. ஹர்பஜனுக்கும் ஓவர் முடிக்கப்படவில்லை, இது என்ன ரோஹித் சர்மாவின் கேப்டன்சி என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி டேர் டெவில்ஸ் அணி கொல்கத்தா போலவே 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் நிகர ரன் விகிதத்தின் படி 2-வது இடம். ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்