கோலி, புஜாரா, ரஹானேவை வழிக்கு கொண்டுவர தோனியின் ஃபார்முலாதான் சரி: சச்சின், சேவாக்கே தாங்கவில்லையே!

By க.போத்திராஜ்

எந்த ஓர் அணியிலும் மூத்த வீரர்கள் ஃபார்ம் குறைந்துவிட்டால், அந்த அணியில் நீண்ட நாட்கள் நிலைக்க விரும்பமாட்டார்கள் அல்லது தாங்களாகவே வெளியேறி உள்நாட்டு போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு வருவார்கள்; சிலர் ஓய்வு அறிவித்து செல்வதும் உண்டு. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளில் மூத்த வீரர்கள் ஃபார்ம் இல்லாமல் இருந்தால் இதுபோன்று செய்வதுண்டு

பெஞ்சை தேய்ப்பது: ஆனால், இந்திய அணியில் மட்டும்தான் மூத்த வீரர் என்ற அடையாளத்தோடு ஃபார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி... தொடர்ந்து இடத்தை அடைத்துக்கொண்டு அணியில் நீடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இளம், திறமையான பல வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும்போது, அவர்களுக்கு வழிவிடாமல் மூத்த வீரர் என்ற அடையாளத்துடனே பெஞ்சைத் தேய்ப்பதுதான் இந்திய அணியில் இப்போது அல்ல, காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது.

தோனி ஃபார்முலா: அதிலும் சச்சின், சேவாக், கங்குலி, கம்பீர் காலத்தில் இதுபோன்று மூத்த வீரர்கள் பலர் இருந்தாலும், ஃபார்மில் இல்லாவிட்டால் அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள். ஆனால், மூத்த வீரர்களாக இருந்தும், ஃபார்மிலும் தொடர்ந்து இருந்தால், என்ன செய்ய முடியும். தேர்வுக்குழுவினருக்கும் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டு அவர்களை நீக்கவும் முடியாமல், இளம் வீரர்களை அறிமுகம் செய்யவும் முடியாத சூழல்தான் இருக்கும்.

இதுபோன்ற குழப்பமானநிலையில்தான் இந்திய அணிக்கு கேப்டனாக வந்த மகேந்திர சிங் தோனி கொண்டுவந்த ஃபார்முலாதான் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு கொண்டு வந்தது.

இதே ஃபார்முலாவைத்தான் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் செயல்படுத்த வேண்டும். முதலில் இந்திய அணியில் உள்ள சிக்கல் என்பதே மூத்த வீரர்கள்தான். அதிலும் புஜாரா, ரஹானே, கேப்டன் கோலி ஆகிய 3 வீரர்கள்தான் அணியின் வெற்றிக்கும் பலநேரங்களில் காரணமாக இருந்திருக்கிறார்கள், தோல்விக்கும் காரணமாக இருந்துள்ளார்கள், இளம் வீரர்கள் வாய்ப்பையும் பறிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

புதிய வீரர்கள் வருவதே கடினம, அவ்வாறு வந்து திறமையை நிரூபித்தும் சிலர் வெளியேதான் காத்திருக்கிறார்கள். உதாரணமாக ஸ்ரேயாஸ் அய்யர், கருண் நாயர் போன்ற இளம்வீரர்கள் நிலை என்ன என்பது தெரிந்ததுதானே.

இடத்தை அடைத்த ரஹானே: அதிலும் ரஹானேவின் ஃபார்ம், கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திேரலியத் தொடரிலிருந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையாகவே இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் அடிலெய்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அந்தப் போட்டியில் ரஹானே 42, 0 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

மெல்பர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்டில் ரஹானே சதம் (112, 27), சிட்னியில் நடந்த போட்டியில் (22, 4), காபா நடந்த டெஸ்டில் ரஹானே 37, 24 என சொல்லிக்கொள்ளும் வகையில் ரன்கள் அடிக்கவில்லை. ஒரே ஒரு சதத்தை மட்டும் அடித்து அணியில் ஒட்டிக்கொண்டார். இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரிலும் ரஹானே சொதப்பலாக பேட்டிங் செய்தார். சென்னையில் நடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் ரஹானே முதல் டெஸ்டில் (1,0), 2-வது டெஸ்டில் (67, 10) என அடித்தார்.

அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் (7 ரன்கள்) 4-வது டெஸ்டில் 27 ரன்கள் மட்டுமே ரஹானே சேர்த்தார். இங்கிலாந்து பயணத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானே லாட்ஸில் நடந்த ஒரு போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்தார். மற்ற டெஸ்ட் போட்டிகளில் 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை. நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் (35,4) என ரஹானே கோட்டைவிட்டார். ரஹானே கடந்த 25 இன்னிங்ஸ்களில் 2 அரைசதம், ஒரு சதம் மட்டுமே அடுத்துள்ளார். மற்ற இன்னிங்ஸ்களில் எல்லாம் சராசரியாக 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை.

தென் ஆப்பிரிக்கா தொடர்தான் ரஹானேவுக்கு இறுதி வாய்ப்பாக இருக்கும் என கூறப்பட்டது. அந்தப் போட்டியிலாவது ரஹானே பொறுப்புடன் பேட் செய்வாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 போட்டிகளிலும் சேர்த்து ஒரு அரைசதம் உள்பட 136 ரன்கள்தான்.

புஜாரா ஃபார்ம்: அடுத்ததாக புஜாரா, 2020-21 சீசனில் புஜாரா, 8 போட்டிகளில் விளையாடி 404 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 4 அரைசதங்கள், 2 முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். சராசரி 28 ரன்கள்தான்.

2021ம் ஆண்டுசீசனில் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய புஜாரா 250 ரன்கள் மட்டும்தான் சேர்த்தார். இதில் 2 அரைசதங்கள், 37 ரன்கள் சராசரி வைத்துள்ளார். 2021-22 சீசனில் 4 போட்டிகளில் விளையாடிய புஜாரா 114 ரன்கள் சேர்த்துள்ளார்.

இதில் ஒரு அரைசதம், சதம் கூட அடிக்கவில்லை, 2 முறை டக்அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார். தென் ஆப்பிரிக்கத் தொடர்தான் புஜாராவுக்கு காட்டப்படும் கடைசிக் கருணை வாய்ப்பு என்று கூறப்பட்டது. ஆனால், ஒரு அரைசதம் உள்பட 156 ரன்கள் மட்டுமே 3 டெஸ்ட் போட்டிகளிலும் அடித்துள்ளார்.

சதம் அடிக்காத கேப்டன்: கடைசியாக கேப்டன் விராட் கோலி, அணியில் வெற்றிக்கான கறுப்புக்குதிரைகளில் மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக சவாரி செய்து வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை பெற்று வருகிறார் கோலி. ஆனால், பேட்டிங்கில் அவரின் செயல்பாடு படுமோசமாக இருக்கிறது. சர்வதேச அரங்கில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக மதிக்கப்படும் கோலி, கடந்த 2019ம் ஆண்டிலிருந்துடெஸ்ட் அரங்கில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

அதிலும் புள்ளபூச்சி வங்கதேசத்தை கொல்கத்தாவுக்கு அழைத்து நையப்புடைத்து அனுப்பிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடித்தார். அதன்பின் இங்கிலாந்து தொடர், நியூஸிலாந்து தொடர், இங்கிலாந்து பயணம், நியூஸிலாந்துடன் உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப், தென் ஆப்பிரிக்கப் பயணம் என பலவற்றிலும் கோலி இடம் பெற்று ஒரு போட்டியில்கூட சதம் அடிக்கவில்லை. ரன்களும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

அணியின் கேப்டனாக இருக்கும் கோலி, சரியாக விளையாடாத வீரர்களைச் சுட்டிக்காட்டும்போது தன்னையும் கணக்கில் சேர்க்க வேண்டும்தானே. கடந்த 3 ஆண்டுகளாக கோலியின் ஃபேட்டிங் ஃபார்ம் எங்கு சென்றது. கடந்த 2018ம் ஆண்டு ஓல்ட்டிராபோர்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து கோலி 300 பந்துகளைச் சந்தித்ததுதான் கடைசியாகும்.

அதன்பின் 4 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்பிரிக்கத் தொடரில் கடைசி டெஸ்டில் 300 பந்துகளைச் சந்தித்தார். இதிலிருந்து டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது கிரீஸில் எத்தனை மணிநேரம் நின்று விளையாடியிருக்கிறார் என்பது தெரியவருகிறது.

மூவரும் ஒன்றுதான்: ஆதலால், இந்திய அணியில் ரஹானே, புஜாரா எவ்வாறு மூத்த வீரர்கள் என்ற அடையாளத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கிறார்களோ அதே அடையாளத்துடன்தான் கோலியும் இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

இதே அடையாளத்துடன் நீண்டகாலமாக சதம் அடிக்காமல் இருந்தவர்தான் தோனி என்பதையும் மறந்துவிடக்கூடாது. ஆனால் அவர் கண்டுபிடித்த ஃபார்முலாவை அவர் மட்டும் அவருக்கு பயன்படுத்தவில்லை; மற்றவர்களுக்குப் பயன்படுத்தினார். அந்த ஃபார்முலாவைத்தான் கோலி, ரஹானே, புஜாராவுக்கு பயன்படுத்த வேண்டும்.

தோனியின் ஃபார்முலா என்ன என்றுதானே கேட்கிறீர்கள்?

2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணம் சென்றது. அப்போது இந்திய அணியில் சச்சின், சேவாக், கம்பீர் என பல ஜாம்பவான்கள் இருந்தனர். அப்போது அணிக்கு கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டு சில ஆண்டுகளே ஆகி இருந்தன.

இந்திய அணியில் இருந்த சச்சின், சேவாக், கம்பீர் 3 பேருமே தொடக்க வீரர்கள், சீனியர் வீரர்கள் என்பதால், மூவருக்குமே ஒரே போட்டியில் வாய்ப்பு வழங்கிட முடியாது. சுழற்ச்சி முறையில்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று தோனி அறிவித்தார்.

சுழற்சி முறையில் வாய்ப்பு: தோனியின் இந்த முடிவு 3 சீனியர் வீரர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொண்டு 3 சீனியர் வீரர்களும் ஆடினர். அதற்கு தோனி கூறிய காரணம், “அடுத்துவரும் உலகக் கோப்பைப் போட்டிக்கு இந்திய அணியைத் தயார் செய்ய இளம் வீரர்கள் தேவை; அதற்கு அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

சீனியர் வீரர்கள் வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால், சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கலாம்” என்று தெரிவித்தார். 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்து மிகுந்த செல்வாக்குடன் தோனி இருந்ததால், தோனியின் வார்த்தைக்கு பிசிசிஐயிடம் அதிகமான மதிப்பு இருந்தது. இதனால்வேறு வழியின்றி பிசிசிஐயும் சம்மதித்தது.

இந்த நேரத்தில் தேவை: தோனியின் இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்திதான் அந்தத் தொடரில் கம்பீர், சேவாக், சச்சின் மூவருமே களமிறக்கப்பட்டனர். தோனியின் அந்த ஃபார்முலாவைத்தான் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் ரஹானே, கோலி, புஜாராவுக்கு பயன்படுத்த வேண்டும்.

அதாவது மூவருக்குமே ஒரே போட்டியில் வாய்ப்பு வழங்கிடக்கூடாது. யாராவது ஒரு வீரருக்கு மட்டும்தான் ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும், மற்ற இரு வீரர்களும் பெஞ்சில் அமர வேண்டும். ஒருபோட்டியில் கோலி களமிறங்கினால், ரஹானே புஜாரா அமர வேண்டும், ரஹானே வாய்ப்புப் பெற்றால் கோலி, புஜாரா அமர வேண்டும்.

பதவி பறிப்பு: முதலில் கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு அவரை சாதாரண பேட்ஸ்மேனாக களமிறக்கி ஃபார்மே நிரூபிக்கச் சொல்ல வேண்டும். கேப்டன் பதவியை இளம் வீரர்களான கே.எல்.ராகுல், ரிஷப் பந்திடம் வழங்கலாம்.

தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி இதேபோன்று கேப்டனாக மட்டும் இருந்து பேட்டிங்கில் நிரூபிக்காமல் இருந்தார். அப்போது பயிற்சியாளராக இருந்த சேப்பல், முதலில் பேட்ஸ்மேனாக நிரூபிக்க வேண்டும் என்று கங்குலியைக் கேட்டுக்கொண்டதால்தான் இருவருக்குமே மோதல் நேர்ந்தது. ஆனால், சேப்பல் கேட்டதுதான் நிதர்சனம். அதேபோன்று கோலியின் பேட்டிங் ஃபார்மையும் நிரூபிக்கக் கூற வேண்டும்.

இந்த மூவருக்கும் சுழற்ச்சி முறையில் வாய்ப்பளித்தும் தங்களை நிரூபிக்கத் தவறினால், ஒவ்வொருவராக அணியிலிருந்து நீக்குவதுதான் இந்திய அணியை சிறந்த அணியாக மாற்ற சரியான தீர்வாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

மேலும்