145 ஆண்டுகளில் முதல்முறை: ரிஷப் பந்த் சதத்தால் தப்பித்தது; மாயஜாலம் நிகழ்த்துவார்களா இந்தியப் பந்துவீச்சாளர்கள்: தென் ஆப்பிரி்க்கா நிதானம்

By க.போத்திராஜ்


கேப் டவுன்
கேப் டவுன் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றி யார் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என்பதால், இந்திய அணியும், தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களும் கடும் பிரயத்தனம் செய்வார்கள். இன்னும் 111 ரன்கள் மட்டுமே வெற்றிக்கே தேவை, கைவசம் 8 விக்கெட்டுகளுடன் தென் ஆப்பிரி்க்க அணி விளையாடி வருகிறது.

ரிஷப் பந்த்தின் அற்புதமான சதத்தால் இந்திய அணி மிகப்பெரிய சரிவிலிருந்து தப்பித்து 2-வது இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வெற்றி வாய்ப்பு

212 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 2 விக்ெகட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்துள்ளது. கீகன் பீட்டர்ஸன் 48 ரன்களுடன் களத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு இன்னும் 111 ரன்கள் தேவைப்படுகிறது கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன.

இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு முழுமையாகக் கைநழுவிப் போகவில்லை. வெற்றிக்குத் தேவை இந்திய அணிக்கு இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டும்தான். பீட்டர்ஸன், டூசென், புமா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டாலே ஏறக்குறைய வெற்றி பெற்றது போலத்தான். கடைசிவரை நிலைத்து ஆடும் பெரிய இன்னிங்ஸ் விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால் துணிச்சலாக பந்துவீச்சாளர்கள் அழுத்தம் கொடுத்தால் விக்கெட்டுகளை வீழ்த்தலாம்.

மிக முக்கியம்

இன்று காலையில் முதல் ஷெசன் இரு அணிகளுக்கும் முக்கியமானது. புதிய பந்தில் விக்கெட்டுகளை விடாமல் தென் ஆப்பிரி்க்க அணி முயற்சிக்கும், அதேநேரம், விக்கெட்டுகளை எடுக்கவும் இந்திய பந்துவீச்சாளர்கள் தீவிரமாக முயற்சி செய்வார்கள்.

ஆதலால் முதல் ஷெசனில் இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்திவி்ட்டால் வெற்றி இந்திய அணியின்பக்கம்தான் என்பதில் சந்தேகமில்லை. இதில் முக்கியமான அம்சம், தென் ஆப்பிரிக்க அணி இதுபோன்ற நெருக்கடியான தருணங்களை சமாளித்து ஆடக்கூடிய மனப்பக்குவம் இல்லாத சோக்கர்ஸ் என்று கிரிக்கெட்டில் வர்ணிப்பதுண்டு அதைநினைவில் வைத்து அழுத்தம் கொடுக்கலாம்.

இந்திய அணியின் பேட்டிங் இந்த அளவு மோசமாகஅமையும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே மீதான அனைத்து நம்பிக்கைகளும் தூள்தூளாக நொறுக்கிவிட்டன. இந்தத் தொடருக்குப் பின்பும் மூத்த வீரர்களான இருவருக்கும், ஏன் விராட் கோலிக்கும் வாய்ப்பு அளிப்பது இளம் வீரர்களுக்கு செய்யும் துரோகம். ஆதலால், இந்த 3 வீரர்களையும் அணியிலிருந்து ஓரங்கட்டி, உள்நாட்டுப் போட்டிகளில்விளையாட வைத்த ஃபார்முக்குத் திரும்பியபின் அழைக்கலாம். அதுவரை காத்திருப்பில் இருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கலாம்.

ரஹானே, புஜாரா இருவருமே 4-வது ஸ்டெம்புக்கு வெளியே சென்ற பந்தை தொட்டுத்தான் இரு இன்னிங்ஸிலும் ஆட்டமிழந்ததை என்னவென்று சொல்வது.

இனியும் தேவையா

முதல் டெஸ்டில் ரஹானே (48,20), புஜாரா(0,16) 2-வது டெஸ்டில் ரஹானே(0,58),புஜாரா(3, 53), 3-வது டெஸ்டில் ரஹானே(9,1), புஜாரா(43,9) ஆகிய ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ஒட்டுமொத்தத்தில் ரஹானே(130ரன்கள்), புஜாரா(154) ரன்கள் சேர்த்துள்ளனர். இரு அனுபவமிக்க பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பளித்து எந்தவிதமான பயனும் இந்தத் தொடரில் இல்லை.

ரஹானே, புஜாரா இருவருக்கும் இந்திய அணியில் மிகப்பெரிய பிரேக் கிடைக்கப் போகிறது உறுதியாகிவிட்டது, அல்லது ரஹானே டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

145 ஆண்டுகால வரலாறு

இந்திய அணியில் 2-வது இன்னிங்ஸில் 11 பேட்ஸ்மேன்களில் 8 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். அதுமட்டுமல்லாமல் 145 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அணி தனது 20 விக்கெட்டுகளையும் கேட்ச் மூலமே பறிகொடுத்தது என்றால் அது இந்திய அணி மட்டும்தான்.
முதல் இன்னிங்ஸிலும், 2-வது இன்னிங்ஸிலும் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் கேட்ச் மூலமே விக்கெட்டை இழந்தனர். இதற்கு முன் 5 முறை 19 பேட்ஸ்மேன்கள் கேட்ச் மூலம் விக்கெட்டை இழந்திருக்கிறார்கள். ஆனால் 20 பேட்ஸ்மேன்கள் இழக்கவில்லை.

ரிஷப் பந்த் (100நாட்அவுட்)மட்டும் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடி சதம் அடிக்காமல் இருந்திருந்தால் இந்திய அணியின் நிலையை சிந்தித்துப் பாருங்கள் படுமோசமாக இருந்திருக்கும். ரிஷப் பந்த் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்தாலும் இதுபோன்ற நேரத்தில் அவசியமான இன்னிங்ஸை விளையாடி தனது இருப்பை உறுதி செய்து விடுகிறார். மயங்க் அகர்வால் இந்தத் தொடர் முழுவதும் வாய்ப்புக் கொடுத்தும் பெரிதாக ஏதும் செய்யவில்லை, அகர்வாலுக்குரிய கதவும் ஏற்ககுறைய அடைக்கப்படலாம்.

4 ஆண்டுகளுக்குப்பின்.... சாதனை.....!!!

கேப்டன் கோலி ஏறக்குறைய தனது பேட்டிங்கில் பல்வேறு தவறுகளைத் திருத்திக்கொண்டு இரு இன்னிங்ஸிலும் ஆடினார். கடந்த 2018ம் ஆண்டு டிரன்ட்பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசியாக இரு இன்னிங்ஸிலும் 100 பந்துளுக்கு மேல் கோலி சந்தித்திருந்தார். அதன்பின் 4 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் இரு இன்னிங்ஸிலும் கோலி 100 பந்துகளை இரு இன்னிங்ஸிலும் சந்தித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் கோலி 201 பந்துகளில் 79 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 143 பந்துகளில் 29 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதுமட்டுமல்லாமல் நாட்டிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் 4 ஆண்டுகளுக்குப்பின் கோலி ஒரு டெஸ்ட் போட்டியில் 300 பந்துகளைச் சந்தித்துள்ளார். அப்படியென்றால் கோலியின் பேட்டிங் கடந்த 4ஆண்டுகளாக எந்த லட்சணத்தில் இருந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.

சர்ச்சை டிஆர்எஸ்

2-வது இன்னிங்ஸில் 21-வது ஓவரில் அஸ்வின் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கக் கேப்டன் டீன் எல்கர் கால்காப்பில் வாங்கியதற்கு களநடுவர் மரியாஸ் எராஸ்மஸ் அவுட் வழங்கிவிட்டார். ஆனால், டிஆர்ஸுக்கு எல்கர் அப்பீல் செய்யவே, பந்து லெஸ் ஸ்டெம்புக்கு மேலே செல்வதாகக் கூறி அவுட் இல்லை என மறுக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த விராட் கோலி, அஸ்வின், துணைக் கேப்டன் ராகுல் மூவரும் தென் ஆப்பிரிக்க டிஆர்எஸ் முறையை கடுமையாக விமர்சித்தனர். அதிலும் கேப்டன் கோலி ஸ்டெம்ப் மைக் அருகே சென்று காட்டமான கருத்துக்களைக் கூறினார்.

ரிஷப் பந்த் அற்புதம்

2-வது இன்னிங்ஸில் குறிப்பிடப்பட வேண்டியது ரிஷப் பந்தின் இன்னிங்ஸ் அற்புதமாக பேட் செய்த பந்த் 4-வது சதத்தை நிறைவு செய்தார். இந்த 4 சதங்களுமே வெளிநாட்டு மண்ணில் அடிக்கப்பட்டவை. ரபாடா , இங்கிடி பந்துவீச்சுக்கு மூத்த வீரர்களே பேட்டால் தடவி தடுமாறியபோது, ஷாட் பிட்சுகளையும், பவுன்ஸர்களைையும், பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினார். ரிஷப் பந்த்துக்கு இருக்கும் துணிச்சல், பேட்டிங் நுணுக்கம் கூட ரஹானே, புஜாரா, அகர்வாலுக்கு இல்லை.

ரிஷப்பந்த்தை அடிக்கவிட்டு கோலி தேவையான ஒத்துழைப்பு வழங்கியதால்தான் 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தது. கோலியின் ஆட்டத்தில் அதிகமான பொறுமையும், பந்தைத் தேர்வு செய்து ஆடுவதில் நேர்த்தி தென்பட்டாலும், ஸ்ட்ரைக் ரேட் பராமரிப்பது அவசியம். இரு இன்னிங்ஸிலும் கோலியின் பேட்டிங்கில் ஸ்ட்ரைட் ரேட் இல்லை.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் 2-வது இன்னிங்ஸில் மார்கோ ஜேஸன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா, இங்கிடி தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்