ரபாடா ராக்கெட் வேகத்தில் சுருண்டது இந்திய அணி: போராடிய கோலி ஆட்டத்தில் திராவிட் சாயல்

By க.போத்திராஜ்

கேப்டவுன்: ரபாடாவின் துல்லியமான ராக்கெட் வேகப்பந்துவீச்சு, ஆலிவர், ஜேஸனின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கேப்டவுனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தனி ஒருவனாகப் போராடிய கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் சேர்த்துள்ளது. மார்க்ரம் 8 ரன்னிலும், கேசவ் மகராஜ் 6 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங் செய்தது நல்ல முடிவுதான் என்றாலும் 223 ரன்கள் என்பது எதிரணிக்கு சவால் அளிக்கக்கூடிய ஸ்கோர் அல்ல. இன்னும் கூடுதலாக 70 ரன்கள் சேர்த்திருந்தால், இந்திய அணி வலுவாகப் போராட முடியும். இல்லாவிட்டால் இதுபோன்ற ஸ்கோர்கள் பந்துவீச்சாளர்களுக்கே நெருக்கடியையும், அழுத்தத்தையும் அதிகரிக்கும்.

2-வது நாளான இன்று முதல் ஷெசனையும், ஆடுகளத்தின் ஈரப்பதத்தையும் பயன்படுத்தி இந்தியப் பந்துவீச்சாளர்கள் 4 முதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படும், தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

ஒருவேளை விக்கெட்டை வீழ்த்தாவிட்டால், ஆட்டம் தென் ஆப்பிரிக்கா பக்கம் சாயவே வாய்ப்புள்ளது. குறிப்பாக 2-வது இன்னிங்ஸிலும் இந்திய அணி 200 ரன்களை இலக்காக வைத்து விளையாடுவது ஆபத்து எனத் தெரிந்துகொண்டு ஓரளவுக்கு ஸ்கோர் செய்ய வேண்டும்.

முதல் இன்னிங்ஸில் புஜாராவின் பேட்டிங்கில்கூட சிறிது ஃபயரைப் பார்க்க முடிந்தது. ஆனால், ரஹானே தேறுவார் போலத் தெரியவில்லை. இனியும் அவரை அணியில் வைப்பது வேஸ்ட் என்றுதான் கூற வேண்டும். சிறந்த பந்துவீச்சுக்கு எதிராக இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் தாங்குவார்களா என்பதற்கு நேற்றைய ஆட்டம் சிறந்த உதாரணமாகும்.

அதிலும் ரபாடாவின் பந்துவீச்சைக் குறிப்பிட்டே தீர வேண்டும். ரபாடாவின் பந்துவீச்சில் என்ன மாதிரியான வேகம், “சும்மா ஈட்டி இறங்குவது போல் சர்..சர்” எனப் பந்துகள் வந்ததன.

ரபாடா தான் வீசிய பந்தில் லைன் லென்த்தை மாற்றி வீசவே இல்லை. 140 கி.மீ. வேகத்தில் அனைத்துப் பந்துகளும் ஸ்டெம்ப்பை நோக்கியே வந்ததால், பேட்ஸ்மேன்கள் சிறிது கவனக்குறைவாக ஆடினாலும் விக்கெட்டை இழக்க நேரிடும். ரபாடா வீசிய பந்துகள் பெரும்பாலும் காற்றிலேயே வாப்லிங் ஆகி பிட்ச் ஆகும்போதுதான் எந்தத் திசையில் செல்லும் என்பதைக் கணிக்க முடியும். இதனால் பேட்ஸ்மேன்கள்தான் கணிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

ரபாடாவுக்குத் துணையாக, ஆலிவர், இங்கிடி, ஜேஸன் ஆகியோரும் சிறப்பாகப் பந்துவீசினர். இதில் ஜேஸன், ஆலிவரும் துல்லியத்தை மாற்றாமல் வீசிய இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஒட்டுமொத்தத்தில் பழைய தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சைப் பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

குறிப்பிடப்படவேண்டிய மற்றொரு அம்சம், விராட் கோலியின் பேட்டிங். முதல் இன்னிங்ஸில் விராட் கோலி விளையாடினாரா அல்லது தனது 49-வது பிறந்த நாளில் திராவிட் களமிறங்கி விளையாடினாரா எனத் தெரியவில்லை. ராகுல் திராவிட்டின் பேட்டிங் சாயல் கோலியின் பேட்டிங்கில் தெரிந்தது. இதை வர்ணனையில் சுனில் கவாஸ்கரே குறிப்பிட்டார்.

கோலியை ஆட்டமிழக்கச் செய்ய நேற்று தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்ப் திசையிலும், 4-வது ஸ்டெம்ப்புக்கும் பந்துகளை வீசினர். ஆனால், கோலி லாகவமாக அதை பேட்டைத் தூக்கி லீவ் செய்தார். இது முற்றிலும் திராவிட்டின் ஸ்டெயில் என்பது ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்களுக்குப் புரிந்திருக்கும்.

கோலியின் பேட்டிங் ஸ்டைலில் திராவிட் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கோலி அனைத்துப் பந்துகளைத் தனது கால்களை முன்னே நகர்த்தி ஆடுவதைக் குறைத்து பக்கவாட்டில் நகர்ந்து ஆடுதல் போன்ற ஷாட்களை நேற்று காண முடிந்தது. பேட்டிங்கில் பல பாலபாடங்களை கோலிக்கு, திராவிட் எடுத்திருப்பது நன்கு உணர முடிந்தது.

விராட் கோலி தான் முதலில் சந்தித்த 100 பந்துகளில் 67 பந்துகளைத் தொடாமல் லீவ் செய்திருந்தார். கோலி நேற்று சந்தித்த 201 டெலிவரிகளில் தவறான ஷாட்கள் வெறும் 16 மட்டும்தான். இதிலிருந்து கோலியின் கட்டுக்கோப்பான பேட்டிங் திராவிட்டின் மூலம் கிடைத்திருக்கிறது தெரிகிறது.

ரபாடா, ஆலிவரின் பந்துவீச்சுக்கு ராகுல், அகர்வால் தொடக்கத்திலிருந்தே தடவினர். ரன் சேர்க்க முடியாமல் திணறினர். இதுபோன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் ராஜ்ஜியம் நடத்தும் ஆடுகளங்களில் நல்ல பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆடமுடியும்.

ஆலிவரும், ரபாடாவும் தொடர்ந்து மெய்டன்களாக எடுத்து, ராகுலுக்கும், அகர்வாலுக்கும் நெருக்கடி அளித்தனர். வேறு வழியின்றி ராகுல் 12 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக மயங்க் அகர்வால் 15 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் 2-வது ஸ்லிப்பில் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

புஜாரா, கோலி ஜோடி ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தனர். கோலி நிதானமாக ஆட, புஜாரா ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டைவிட நேற்று புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட்தான் அதிகமாக இருந்தது, புஜாராக அரை சதத்தை நோக்கி நகர்ந்தபோது, 43 ரன்களில் ஜேஸன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்துவந்த ரஹானே, கோலியுடன் சேர்ந்தார். ரஹானே அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும்போது, ரபாடா பந்துவீச்சை ஆடுவதெல்லாம் சாதாரணம் கிடையாது. அதிலும் ரபாடாவின் நேற்றைய பந்துவீச்சு ராக்கெட் வேகத்தில் இருந்தது, ரஹானேவுக்கு ரபாடா வீசிய பந்து அற்புதமானது பேட்ஸ்மேனால் ஊகிக்க முடியாத அளவுக்கு சென்று, பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச்சானது. ரஹானே 9 ரன்னில் வெளியேறினார்.

அடுத்துவந்த ரிஷப் பந்த், கோலியுடன் இணைந்தார். வழக்கம்போல சில ஷாட்களை ஆடிவிட்டு, ரிஷப் பந்த்தைச் சொல்லிவைத்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் போட்டுத் தூக்கினர். ரிஷப் பந்த் 27 ரன்னில் ஜேஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அஸ்வின் (2), தாக்கூர் (12), பும்ரா (0), ஷமி (7) என விரைவாக ஆட்டமிழந்தனர். கோலி 79 ரன்கள் சேர்த்த நிலையில், வழக்கம்போல் அவுட்சைட் ஆஃப் திசையில் சென்ற பந்தைத் தொட்டு ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும், ஜேஸன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்