இந்தியக் கிரிக்கெட்டின் “எவர் சுவர் இவர்தான்” - பிரியாவிடையை மறுத்த தியாகி  திராவிட்

By க.போத்திராஜ்

இந்திய கிரிக்கெட்டின் சுவர் எனச் சொல்லிக்கொண்டு பலர் வரலாம்; ஆனால் Ever சுவர் இவர்தான்... அதுதான் ராகுல் திராவிட். ஹேப்பி பர்த் டே ராகுல் திராவிட்.... இன்று 49-வது பிறந்தநாள்.

இந்தியக் கிரிக்கெட்டில் கவாஸ்கர், வெங்சர்க்கார், கபில்தேவ், அமர்நாத் ஆகியோருக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் திறமையான பேட்ஸ்மேன்களைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்திய அணிக்குக் கிடைத்தவர்தான் ராகுல் திராவிட். உலகின் எந்த அணியின் வேகப்பந்துவீச்சையும் அனாயசமாக எதிர்த்து நின்று விளையாடக் கூடியவர் ராகுல் திராவிட் மட்டும்தான். தோற்றுவிடும் என்ற நிலையில் இந்திய அணி இருந்தபோதெல்லாம் களமிறங்கி அணியை சுவர்போல் காத்தவர் திராவிட் என்பதால்தான். அவருக்கு இந்திய கிரிக்கெட்டின் சுவர் என்ற அடைமொழியும் வந்தது

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ராகுல் திராவிட் பிறந்தாலும், அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர், வளர்ந்தது படித்தது அனைத்தும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில்தான்.
திராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை கடந்த 1996-ம் ஆண்டு லாட்ர்ஸ் மைதானத்தில் இ்ங்கிலாந்து அணிக்கு எதிராகத் தொடங்கியது. ஒருநாள் கிரிக்கெட் அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் இலங்கைக்கு எதிராகத் தொடங்கியது.

ஏறக்குறைய 16 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய திராவிட்டின் மிகப் பெரிய சாதனை, டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் விளாசியுள்ளார். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய திராவிட் 36 சதங்கள், 63 அரைசதங்கள் உள்பட 13,288 ரன்கள் சேர்த்துள்ளார். 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய திராவிட் 12 சதங்கள், 83 அரைசதங்கள் உள்ளிட்ட 10,889 ரன்கள் சேர்த்துள்ளார்.

இந்திய அணியின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்டாலே சச்சின், கங்குலிக்கு அடுத்தார்போல் திராவிட் வந்துவிடுவார். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், பாகிஸ்தான், நியூஸிலாந்து என எந்த அணியின் வேகப்பந்துவீச்சையும் "வந்துபார் பார்க்கலாம்" என்ற தோரணையில்தான் திராவிட்டின் பேட்டிங் இருந்தது.

சச்சின், கங்குலி கூட சில நேரங்களில் வெளிநாட்டு ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விரைவாக ஆட்டமிழந்திருக்கிறார்கள். இருவரும் ஆட்டமிழந்து சென்றாலும் ரசிகர்கள் மனதில் ஓரமாக ஒரு நம்பிக்கை ஒட்டிக்கொண்டிருக்கும் அது ராகுல் திராவிட். " ஏய் திராவிட் இன்னும் அவுட்ஆகலப்பா… இந்தியா தப்பிச்சுரும்..." என்ற வாக்கியம் 2000 ஆண்டுகளில் டிவி பார்த்த ரசிகர்கள் பேசிக்கொண்டு சென்றதை பலர் கேட்டிருக்கலாம். இந்திய அணிக்காக பல இன்னிங்ஸ்களை கட்டமைத்த எஞ்சினியர் திராவிட் என்பதில் சந்தேகமில்லை.

பல தருணங்களில் இந்திய அணியின் மானத்தை காப்பாற்றி வந்தது, இக்கட்டான நேரத்தில் தனியாளாக நின்று போராடும் போர்வீரன் ராகுல். டெஸ்ட் மேட்சுக்கென்றே பிறந்தவர் என்பதைப்போல் பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றும் விதத்தில் ஆடுவதிலும் ராகுல் திராவிட் வல்லவர்.

டொனால்ட், போலக், டிவ்லிலயர்ஸ், மெக்ராத், வால்ஷ், ஆம்புரோஷ், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் போன்ற பல வேகப்பந்துவீச்சாளர்களைப் பார்த்து இந்திய பேட்ஸ்மேன்கள் தொடை நடுங்கிய நேரத்தில் சவாலாக இருந்து ஆடியவர் ராகுல் திராவிட்தான்.

பவுண்டரி லைனிலிருந்து அசுர வேகத்தில் ஒடி வந்து வேகப்பந்துவீச்சாளர் வீசும் பந்தை சற்றும் அலட்டிக்கொள்ளாமல், தனது பிரன்ட்ஃபுட் மூலம் திராவிட் வைக்கும் ஸ்ட்ரோக்கால் பந்துவீச்சாளர் வெறுத்துவிடுவார். " இதுக்கு எதுக்கு நான் பவுண்டரி லைனிலிருந்து ஓடி வந்துபந்துவீசனும், நான் டயர்ட் ஆனதுதான் மிச்சம்" என பந்துவீச்சாளர்களை புலம்ப வைத்தவர் திராவிட் மட்டும்தான்.

ஒருநாள் போட்டிகளில் திராவிட் மந்தமாகவே விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் 1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பைதான் திராவிட்டின் திறமை அனைவருக்கும் தெரிந்தது, அந்தத் தொடரில் 2 சதங்கள்உள்ளிட்ட 461 ரன்களை திராவிட் குவித்தார்.

அதுமட்டுமல்ல திராவிட்டின் டெஸ்ட் இன்னிங்ஸிலும், ஒருநாள் இன்னிங்ஸிலும் பல முக்கியமான மறக்க முடியாத போட்டிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது, 2001ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆன் பெற்ற பின்பும், திராவிட்(180), லட்சுமண்(281) இருவரும் சதம்அடித்து 376 ரன்கள் கூட்டணி சேர்ந்து இந்தியஅணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது இன்றளவும் மறக்க முடியாத இன்னிங்ஸாகும். அதிலும் மெக்ராத், ஷேன் வார்னே போன்ற ஜாம்பவான்கள் இருவரையும் ஆட்டமிழக்க வைக்கமுடியாமல் தண்ணி குடித்தகாலமாகஇருந்தது.

2004ம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் பயணம் சென்றபோது, திராவிட் அடித்த 270 ரன்களை இன்றளவும் பாகிஸ்தான் வீர்கள் மறந்திருக்கமாட்டார்கள். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருந்தபோது, 3-வது டெஸ்ட் நடந்தது.

இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 131 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதற்கு முக்கியக் காரணம் ராகுல் திராவிட்டின் இன்னிங்ஸ்தான். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்கள் விளாச, திராவிட் 270 ரன்கள் சேர்த்தார். ஆனால், பாகிஸ்தானோ முதல் இன்னிங்ஸில் 224, 2வது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைச் சந்தித்தது.

2011ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் திராவிட் அடித்த 146 ரன்களும் மறக்க முடியாத இன்னிங்ஸாகும். இந்திய அணி டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தபோதிலும் நம்பிக்கையையும்,விடா முயற்சியையும் கைவிடாமல் திராவிட் சதம் அடித்து மிரளவைத்தார்.

இந்திய அணிக்காக எந்த இடத்தில் களமிறங்கவும், எந்தப் பணியைச் செய்யவும் திராவிட் தயங்காதவர். தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார், 3-வது வீரராக, நடுவரிசையில் களமிறங்கி தன்னை பேட்டிங்கில் திராவிட் நிரூபித்துள்ளார். இந்திய அணியில் கூடுதலாக ஒரு பந்துவீச்சாள் சேர்க்க வேண்டும் என்ற கருத்து எழுந்தபோது கையில் விக்கெட் கீப்பர் க்ளோவ் ஏந்தி கீப்பிங் பணியையும் திராவிட் செய்தார்.

திறமையான வீரராக இருந்தபோதிலும் கேப்டன் பதவி என்று வந்தபோது அது திராவிட்டுக்கு வெற்றிகரமாக இ்ல்லை. கடந்த 2007ம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் சுற்றோடு இந்திய அணி வெளியேறியதால் கேப்டன் பதவியை திராவிட் உதறினார்.

கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை ராகுல் திராவிட்படைத்திருக்கிறார். தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 31 ஆயிரத்து 258 பந்துகளைச் சந்தித்து விளையாடியுள்ளார், இவருக்கு அடுத்ததாக சச்சின் உள்ளார். 3-வது வரிசையில் களமிறங்கி 10 ஆயிரம் ரன்கள் வரை அடித்தவர், டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 4 இன்னங்ஸில் சதம் அடித்தவர், குறைவான டக்அவுட் ஆகியவர் என பல சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்திய கிரிக்கெட்டில் சச்சின், திராவிட், கங்குலி, சேவாக், விவிஎஸ் லட்சுமண் இருந்த காலம் பொற்காலம் எனச் சொல்லப்படும். இவர்கள் 5 பேரையும் ஆட்டமிழக்கச் செய்வது என்பது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதிலும் திராவிட் போன்றோர் நங்கூரமிட்டால் எதிரணி பந்துவீச்சாளர்கள் கதி அதோகதிதான். திராவிட், சச்சின் கூட்டணி, திராவிட் கங்குலி கூட்டணி, திராவிட், சேவாக் கூட்டணி என எது சேர்ந்தாலும் எதிரணி நிலை பரிதாபத்துக்குரியதாகத்தான் இருந்திருக்கிறது.

இன்று பிரியாவிடைக்காக இந்திய வீரர்கள் திட்டமிட்டு ஓய்வு பெறுகிறார்கள். அது ஐபிஎல் டி20 தொடராகட்டும், இந்திய அணியாகட்டும் முன்கூட்டிேய ஓய்வு குறித்து திட்டமிட்டு பிரியாவிடையின் புகழுக்காக அலைகிறார்கள்.சென்னையில்தான் ஓய்வு பெறுவேன், டி20 உலகக் கோப்பையோடு புறப்படுவேன் என்றெல்லாம் திட்டமிட்டு ஓய்வை தீர்மானிக்கிறார்கள்.

ஆனால், எந்தப் புகழுக்கும், பிரியாவிடைக்கும் மயங்காத தியாகி திராவிட்தான். பிரியாவிடை டெஸ்ட் போட்டியை வெளிநாட்டில் நடத்துகிறோம் என்று பிசிசிஐ சார்பில் திராவிட்டிடம் கேட்டபோது, “ரிட்டயர்ட் ஆகவேண்டும் என்று முடிவு செய்தபின் தேவையில்லாமல் எதற்கு ஒரு பிரியாவிடை டெஸ்ட்போட்டி. அதெல்லாம் வேண்டாம்” என்று மறத்த தியாகி திராவிட்.

இந்திய அணியின் எவர் சுவர் இவர்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்