கடைசி விக்கெட்டுடன் விடை பெற்றார் டெய்லர்: வங்கத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து

By செய்திப்பிரிவு

கிறிஸ்ட்சர்ச் : வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளின் வெற்றியும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தன. ஆட்ட நாயகனாக இரட்டை சதம் அடித்த கேப்டன் லாதமும், தொடர் நாயகனாக கான்வேயும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 521 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ-ஆன் பெற்றது. 2-வது இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழக்க 117 ரன்களில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெஸ்ட் போட்டி தொடங்கி 3-வது நாளில் முடிவு கிடைத்துள்ளது.

நியூஸிலாந்து அணியின் அனுபவ பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லருக்கு இது 112-வது டெஸ்ட் போட்டி மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாகும். இந்தப் போட்டியுடன் அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

டெய்லர் தனது டெஸ்ட் வாழ்க்கையிலேயே 8 ஓவர்கள்தான் வீசியுள்ளார். அதில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன் பந்து வீசியிருந்தார். கடைசி டெஸ்ட் போட்டியில் டெய்லர் பந்து வீச 3-வது பந்தில் வங்க தேசத்தின் கடைசி விக்கெட்டான இபாதத் ஹூசைன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 0.3 ஓவர்களில் 0 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியுடன் ரோஸ் டெய்லர் விடைபெற்றார்.

நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் கேப்டன் லாதம் அடித்த இரட்டை சதம் (252), கான்வேயின் (109) சதம் ஆகியவையாகும். இருவரும் சேர்ந்து 2-வது விக்கெட்டுக்கு 315 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிலும் கேப்டன் லாதம் இரட்டை சதம் அடித்து, 6 கேட்ச்சுகளைப் பிடித்து சாதனை படைத்தார். ஒரு போட்டியில் 6 கேட்ச்சுகளைப் பிடித்து, இரட்டை சதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமையும் லாதமுக்குக் கிடைத்தது.

இருவரும் அமைத்துக்கொடுத்த இமாலய ஸ்கோர்தான் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சில் கடந்த போட்டியில் ஜொலிக்காத டிரண்ட் போல்ட், சவுதி, ஜேமிஸன் ஆகிய மூவரும் சேர்ந்து வங்கதேச பேட்டிங்கை நிலைகுலையச் செய்தனர்.

டிரண்ட் போல்ட் தனது 75-வது டெஸ்ட் போட்டியில் 300-வது விக்கெட்டை வீழ்த்தினார். 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 4-வது நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் சர் ரிச்சார்ட் ஹாட்லி, டேனியல் வெட்டோரி, டிம் சவுதி ஆகியோர் சாதித்துள்ளனர்.


2-வது இன்னிங்ஸை இன்று காலை வங்கதேச அணி ஆடத் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளைச் சீரான இடைவெளியில் இழந்து வந்தது. இஸ்லாம் (21), நயிம் (24), ஷான்டோ (29), மோமினுள் ஹக் (29) என வரிசையாக வீழ்ந்தனர்.

விக்கெட்டுகள் சரிந்தபோதிலும் விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் நிதானமாக பேட் செய்து டெஸ்ட் அரங்கில் தனது 2-வது சதத்தை நிறைவு செய்து ஜேமிஸன் பந்துவீச்சில் 102 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்து தோல்வி அடைந்தது. 229 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த வங்கதேசம், அடுத்த 49 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

நியூஸிலாந்து தரப்பில் ஜேமிஸன் 4 விக்கெட்டுகளையும், வாக்னர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்