நாங்கள் சரியான திசையில்தான் செல்கிறோம்; 3-வது டெஸ்ட்டிலும் வெல்வோம்: டீன் எல்கர் சூசகம்

By செய்திப்பிரிவு

ஜோகன்னஸ்பர்க்: ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டில் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற வெற்றி சரியான திசையில்தான் செல்கிறோம் என்பதைக் காட்டுகிறது. 3-வது டெஸ்ட்டிலும் வெல்வோம் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வென்றது. இதன் மூலம் ஜோகன்னஸ்பர்க் வாண்டரரர்ஸ் மைதானத்தில் கடந்த 30 ஆண்டுகளில் முதல் வெற்றியை தென் ஆப்பிரிக்க அணி பதிவு செய்தது.

தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது அந்த அணியின் பந்துவீச்சாளர்கள்தான். ரபாடா, ஜேஸன், ஆலிவர் ஆகியோர் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை முதல் இன்னிங்ஸில் சிதைத்துவிட்டனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை 200 ரன்களில் சுருட்டியதுதான் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முதல் படியாக அமைந்தது.

இதனால் 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்க இருக்கிறது.

இந்தப் போட்டி குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர், இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''வாண்டரரர்ஸ் மைதானத்தில் எங்களுக்குக் கிடைத்த வெற்றி, நாங்கள் சரியான திசையில் செல்கிறோம் என்று உணர்த்தியிருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அணிக்குள் சாதகமான மனநிலையை, நம்பிக்கையான சூழலை உருவாக்கியிருக்கிறது.

செவ்வாய்க்கிழமை நடக்கும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் மிகப்பெரிய சவாலாக இருக்கும். நாங்கள் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறோம். இந்தத் திட்டங்களுக்கு எங்கள் வீர்ரகள் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பது முக்கியம்.

எங்கள் அணியில் வீரர்கள் பலர் அனுபவம் இல்லாதவர்கள். ஆனால், வாண்டரர்ஸ் மைதானத்தில் கிடைத்த வெற்றியால் உற்சாகமாக, நம்பிக்கையாக இருக்கிறார்கள். ஆனாலும், நாங்கள் நினைத்தவாறு பல்வேறு விஷயங்கள் நடக்கவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். பல்வேறு விஷயங்களில் நாங்கள் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதை அணிக்குள் மீண்டும் வலியுறுத்துவோம். எங்களின் செயல்திட்டத்தை எந்தவிதமான தளர்வுகள் இல்லாமல் செயல்படுத்துவோம், செயல் திட்டத்தில் மாற்றம் இருக்காது’’.

இவ்வாறு எல்கர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE