ஜோகன்னஸ்பர்க்:
ஊருக்கு எந்தவிதமான கெடுதலும் வராமல் காப்பவர்தான் எல்லைச்சாமி. கிராமங்களில் இதுபோன்ற எல்லைச்சாமிகள் பலர் வணங்கப்படுவதை பார்த்திருக்கிறோம். அதுபோல அணிக்கு தோல்வியும் வராமல் , பந்துவீச்சில் பல அடிகளை உடலில் தாங்கி, விக்கெட்டை இழக்காமல், தோல்விக் குழிக்குள் விழாமல் எல்லைச்சாமியாக இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியைக் காத்தவர் கேப்டன் டீல் எல்கர். முதலில் அவருக்கு சபாஷ்…
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
» தடுப்பூசி செலுத்தாவிட்டால் விளைவுகளை சந்திக்கத் தான் வேண்டும்: ஜோகோவிச் விவகாரத்தில் நடால் கருத்து
தென் ஆப்பிரிக்க அணியைத் தோல்வி குழிக்குள் விழாமல் தடுத்தவர், எல்லைச்சாமியாகத் காத்தவர் கேப்டன் டீன் எல்கர்தான். கட்டுப்பாடான ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்கர் 96 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஹீரோ எல்கர்
4-வது நாள் ஆட்டம் மழையால் 2 ஷெசன்களும் வீணானநிலையில் உள்ளூர்நேரப்படி மாலை 3.30 மணிக்குதான் ஆட்டம் தொடங்கியது. எல்கர், டூசென் ஆட்டத்தைத் தொடங்கினர். இந்தியப் பந்துவீச்சாளர்களும் தங்களால் முடிந்த அளவு போட்டியை தங்கள் பக்கம் இழுக்க முயன்றனர், ஆனால், டூசென்(40) விக்கெட்டை மட்டுமே ஷமியால் வீழ்த்த முடிந்தது. அதன்பின் வந்த புமா, எல்கருடன் சேர்ந்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
எல்கர் 96 ரன்களுடனும், புமா 23 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 67.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் சேர்த்து தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
எல்கர் நினைத்திருந்தால், புமாவை அமைதி காக்கக் கோரி, இன்னும் 4 ரன்கள் அடித்து சதத்தை உறுதி செய்திருக்கலாம். ஆனால், களத்தில் இறங்கியது முதல் கடைசிவரை அணியின் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கருதி ஆடினார். புமாவை அவரின் இயல்பான ஆட்டத்தில் ஆட சுதந்திரம் அளித்தார் எல்கர்.
எல்கர் தனது கையில் அடி, ஷாட் பந்தில் முதுகில்அடி என உடலையே தடுப்பாகப் பயன்படுத்தி விக்கெட் இழக்காமல் அணியை காத்தார் என்றால் மிகையாகாது. ஆட்டநாயகன் விருதும் எல்கருக்கே வழங்கப்பட்டது.
30 ஆண்டுகளில் முதல் தோல்வி, வரலாற்று வெற்றி
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 4-வது இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஸ்கோர் செய்த தென் ஆப்பிரிக்காவின் 2-வது கேப்டன் டீல் எல்கர்(96ரன்கள்) ஆவார். இதற்கு முன் கடந்த 1991-92ம் ஆண்டில் இந்திய அணி்க்கு எதிராக டர்பனில் நடந்த போட்டியில் கேப்டன் கெப்லர் வெசல்ஸ்115 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். அதன்பின் இந்த ஸ்கோரை எந்த தென் ஆப்பிரிக்க கேப்டனும் முறியடிக்கவில்லை. இன்றுவரை இதுதான் அதிகபட்சம்.
வான்டரரஸ் மைதானத்தில் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விைளயாடியுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோற்றுள்ளது, அதாவது கடந்த 30 ஆண்டுகளில் முதல் தோல்வியை வான்டரர்ஸ் மைதானத்தில் இந்திய அணி சந்தித்திருக்கிறது.
அதேபோல வான்டரரஸ் மைதானத்தில் இதுவரை இந்திய அணிக்கு எதிராக 6 போட்டிகளில் ஆடி தென் ஆப்பிரிக்க அணி வென்றதே இல்லை, முதல் மற்றும் வரலாற்று வெற்றியை தென் ஆப்பிரிக்க அணி பதிவு செய்துள்ளது.
சிறந்த கேப்டன்
இந்திய அணிக்கு எதிராக 4-வது இன்னிங்ஸில் அதிகபட்ச சேஸிங்கில் 3-வதாக தென் ஆப்பிரிக்க சேஸிங் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன் 1977-78ல் பெர்த்தில் இந்திய அணி நிர்ணயித்த 339 ரன்களை ஆஸ்திரேலியா சேஸிங் செய்தது.அதன்பின் 1987-88ல் டெல்லியில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த276 ரன்களை மே.இ.தீவுகள் சேஸிங் செய்தது.
3-வது அதிகபட்ச சேஸிங் இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் சேஸிங்தான். அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்க அணி உள்நாட்டில் 4-வது இன்னிங்ஸில் சேஸிங் செய்த 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
பேட்டிங், பந்துவீச்சில் ஃபயர்
தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, பேட்டிங்கிலும் கடந்த முதல் டெஸ்ட் போட்டியைவிட தேறியிருந்தனர், அனைத்துப் பிரிவிலும் ஒருவிதமான ஃபயர் காணப்பட்டது. குறிப்பாக ரபாடா பந்துவீச்சில் ராக்கெட் வேகம் இருந்தது, ஆலிவரின் நெருக்கடி தரும் பந்துவீச்சு, ஜேஸனின் பந்துவீச்சு ஆகியவை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அளவில் குடைச்சலைக் கொடுத்தது.
கடந்த முதல் டெஸ்ட் போட்டியில் செஞ்சூரியன் மைதானம் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்துமே அதில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சு எடுபடவில்லை. ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கப் பந்துவீ்ச்சில் காணப்பட்ட ஒரு துடிப்பு, ஃபயர், தீர்மானம்தான் இந்திய அணியை 202 ரன்களுக்குள் சுருட்ட வைத்தது.
பேட்டிங்கைப் பொறுத்தவரை அனுபவமான வீரர் குயின்டன் டீ காக் திடீரென ஓய்வு அறிவித்தபின் தென் ஆப்பிரி்க்க பேட்டிங் வரிசை பற்றி போடப்பட்ட கணக்கீட்டை தவறு என வீரர்கள் நிரூபித்துள்ளனர்.
கேப்டன் டீல்கர், புமா, டூசென், மார்க்ரம், பீட்டர்ஸன் ஆகியோர் தங்களாலும் அணியை காப்பாற்ற முடியும், கரை சேர்க்க முடியும் என்பதை நிரூபித்துவிட்டனர்.
இந்திய அணியின் உலகத்தரம் வாய்ந்த பும்ரா, ஷமி, சிராஜ், தாக்கூர் பந்துவீச்சையும் சமாளித்து ஆடி வெற்றித் தேடித்தந்துள்ளனர். அதிலும் 3-வது நாளில் பீட்டர்ஸன், மார்க்கரம்ஆகியோர் கேப்டன் எல்கருக்கு கொடுத்த ஆதரவு, டூசென், எல்கர் ஜோடே சேர்த்த 82ரன்கள் பார்ட்னர்ஷிப் போன்றவைதான் வெற்றியை தென் ஆப்பிரிக்கப் பக்கம் இழுத்தது.
எதையும் தாங்கும் எல்கர்
தலையில் அடி, கழுத்தில் அடி, தோள்பட்டை, மார்பு என இந்திய பந்துவீச்சாளர்களின் பவுன்ஸர்களையும், ஷாட் பந்துகளையும் சுவராக இருந்து எல்கர் தாங்கினார். இவை அனைத்தும் எல்கரின் வெற்றிக்கும்,அணியின் வெற்றிக்குமான அடையாளங்கள். பிரையன் லாராவின் ஸ்கூலில் படிக்காமல் ஷிவ் நராயன்சந்தர்பால் ஸ்கூல் ஆஃப் பேட்ஸ்மேன்ஷிப்பில் படித்தவர் எல்கர் என்பது புரிந்துவிட்டது.
ஒட்டுமொத்தத்தில் தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் இழந்த ஃபயரை, நம்பிக்கையை, 2-வது ஆட்டத்தில் மீ்ட்டுவிட்டதால், 3-வது டெஸ்ட் போட்டி ஸ்வாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.
பந்துவீச்சாளர்கள் பாவம்
இந்திய அணியைப் பொறுத்தவரை இன்னும் கூடுதலாக 50 ரன்கள் சேர்த்திருந்தால் ஓரளவுக்கு ஆட்டத்தை நம்முடைய பக்கம் திருப்பியிருக்கலாம். ஆனால், பந்துவீச்சாளர்களை இந்தப் போட்டியில் எந்தவிதமான குறையும் கூறக்கூடாது. கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களால்தான் இந்திய அணி பெரும்பாலும் வெற்றி பெறுகிறது. ஆனால், பெயர் என்னவோ பேட்ஸ்மேன்களுக்குத்தான் கிடைக்கிறது.
பேட்ஸ்மேன்களின் இயலாமை
கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணி 4-வது இன்னிங்ஸில் சேஸிங் செய்து வென்றதாக போட்டிகளை எடுத்தால் விரல்விட்டு எண்ணிவிடலாம். எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் எடுத்துக்கொடுத்து வெற்றிக்கு வழிகாட்டிவருவது பந்துவீச்சாளர்கள் என்பதில் சந்தேகமில்லை. முதல் இன்னிங்ஸிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களால் முடிந்த சிறந்தபங்களிப்பை வழங்கினார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், 240 ரன்கள் இலக்கை வைத்துக்கொண்டு அதற்குள் சுருட்ட வேண்டும் என்று பேட்ஸ்மேன்களின் கையாளாகாத தனத்தை பந்துவீச்சாளர்களின் தலையில் ஏற்றவும் கூடாது, அதற்கு பந்துவீச்சாளர்களை குறைகூறவும் முடியாது.
முதுகெலும்பு இல்லாத பேட்டிங்
பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்திய அணி முதுகெலும்பில்லாமல்தான் இருந்தது. ராகுல், அகர்வால் ஸ்கோர் செய்வதுதான் அணி முழுமைக்கான ஸ்கோர் என மற்ற வீரர்கள் எண்ணுகிறார்கள்., மற்ற பேட்ஸ்மேன்களான புஜாரா, ரஹானே, ரிஷப் பந்த், விஹாரி ஆகியோரின் பங்களிப்பு மீதும் கேள்வி எழுகிறது.
முதல் இன்னிங்ஸில் முதல் பேட்டிங் செய்யும்போது, 300 ரன்களுக்கு மேல் அடிப்பதுதான் எதிரணிக்கு நெருக்கடியும், அழுத்தத்தையும் கொடுக்க முடியும். இந்திய அணி 202 ரன்களில் சுருண்டபோதே இந்திய அணியின் தோல்வி தெரியத் தொடங்விட்டது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்வி்க்கான முழுக்காரணம் பேட்ஸ்மேன்கள்தான். மூத்த வீரர்கள் என்ற அடையாளத்தை சுமந்துகொண்டு அணியில் அட்டைபோல் ஒட்டியிருக்கும் ரஹானே, புஜாரா, இருவரும் முதல் இன்னிங்ஸில் ஜொலித்திருந்தால், தோல்வியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், தங்களின் இடத்துக்கு ஆபத்து வரப்போகிறது எனத் தெரிந்தவுடன் இருவரும் அரைசதம் அடித்துதங்கள் இருப்பை உறுதி செய்ததிலேயே மிகப்பெரிய சுயநலம் தெரிகிறது.
நேர்மையற்ற ரிஷப்பந்த்
ரிஷப்பந்தின் இரு இன்னிங்ஸ்களிலும் பொறுப்பற்ற பேட்டிங்கை தவிர்த்து, நிதானமாக ஆடியிருக்கலாம். அதுமட்டுமல்லாமல் விக்கெட்கீப்பிங்கில் நேர்மையில்லை. முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் டூசென் அவுட் ஆகியபோது, அவரின் பேட்டிலும், பேடிலும் பட்டு தரையில் பட்டு வந்த பந்தை ரிஷப் பந்த் கேட்ச் பிடித்தார். ஆனால், விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததை உணர்ந்த டூசென் வெளியேறினார். ஆனால் டிவி ரீப்ளேயில் ரிஷப் பந்த் பிடித்தது கேட்ச இல்லை, தரையில் பிட்ச் ஆனபின்பு பிடித்தார் எனத் தெரிந்தது. ஆனால், ரிஷப் பந்த் இதை அறிந்தும் நேர்மையற்றவராக செயல்பட்டதற்கு அணிக்கு கிடைத்த பரிசு தோல்வி
பந்துவீச்சில் சிராஜுக்கு திடீரென ஏற்பட்ட காயம், மழை நின்றபின் இந்திய வீரர்கள் பந்துவீசியபோது, பந்து ஈரமானவுடன் பந்துவீ்ச்சாளர்களால் இறுகப்பிடித்து பந்துவீச முடியாததும் பெரும் பின்னடைவுதான். நீண்டநேரம் நடுவரிடம் இந்திய அணிதரப்பு பேசியபின்புதான் பந்து மாற்றப்பட்டது.பந்தை சரியாகப் பிடித்து வீச முடியாததால்தான் கடைசிநாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் அதிகமான பவுண்டரி, வைடு ஆகியவற்றை வீசினர். இந்திய அணியின் தோல்வி்க்கு இயற்கையின் சதியும் ஒரு காரணம் எனக் கூறிக்கொண்டு ஆறுதலடைந்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago