தடுப்பூசி செலுத்தாவிட்டால் விளைவுகளை சந்திக்கத் தான் வேண்டும்: ஜோகோவிச் விவகாரத்தில் நடால் கருத்து

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், ஆஸ்திரேலிய அரசும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்றிரவு மெல்போர்ன் விமான நிலையம் வந்த நோவாக் ஜோக்கோவிச் விசா ரத்து செய்யப்பட்டது. அவர், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததே இதற்குக் காரணம். ஏற்கெனவே பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் தேசத்தின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஜோகோவிச், பிடிவாதமாக நீதிமன்றத்தை நாடியுள்ளார். மருத்துவ விலக்கு பெற்று ஆஸ்திரேலிய ஒபன் டென்னில் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் 9 முறை ஆஸி ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச் உறுதியாக உள்ளார். அவருக்கு நிகழ்ந்த சம்பவத்தை அவருடைய செர்பிய நாடு தனிப்பட்ட அவமானமாகக் கருதி ஆஸ்திரேலியாவுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ஜோகோவிச் கோவிட் தடுப்பூசி எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடால் பதிலடி: இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் கருத்து தெரிவித்துள்ளார். ஜோகோவிச்சுக்கு நேர்ந்த சம்பவத்தற்காக அவர் பரிதாபப்படவில்லை. மாறாக, எனக்கு கடந்த மாதம் கரோனா வந்தது. ஆனால் நான் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளேன். நீங்கள் தடுப்பூசி போட்டிருந்தால் இங்கே மெல்போர்னில் விளையாடலாம். அதுதான் அவர்கள் தெளிவாகச் சொல்லும் சேதி. இங்கு மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம். விதிகளை மீறியதால் உலகம் நிறையவே துன்பப்பட்டுவிட்டது. இதெல்லாம் அறிந்தும் அவர் தனது முடிவை சுயமாக எடுத்தார். ஒரு மாதத்திற்கு முன்னரே விதிகள் தெரிந்திருந்தும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அதன் விளைவுகள் இருக்குமல்லவா? இருப்பினும் அவருக்கு நடந்த சம்பவத்திற்காக வருந்துகிறேன்.

இவ்வாறு நடால் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE