பேட்டிங்கை மறந்த ரஹானே, புஜாரா: பேட்ஸ்மேன்களின் சொத்தை ஆட்டத்தால் சுருண்ட இந்திய அணி: காப்பாற்றிய அஸ்வின், ராகுல்

By க.போத்திராஜ்


ஜோகன்னஸ்பர்க் :கே.எல்.ராகுலின் அரைசதம், ரவிச்சந்திர அஸ்வினின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு சுருண்டது.

பேட்டிங்அம்னீஷியாவா!

பேட்டிங்அம்னீஷியா நோய் வந்துவிட்டது போன்று ரஹானேவும், புஜாராவும் பேட்செய்கிறார். எந்தப் பந்தை லீவ் செய்வது, தொடுவது என்பது கூடத் தெரியாமல் பேட்டை நீட்டி விக்கெட்டைகோட்டைவிட்டதால்தான் இந்திய அணி மோசமான ஸ்கோரை எட்டியது. பிசிசிஐ வைத்துள்ள நம்பிக்கை மீது கரியைபூசும் வகையில் புஜாரா, ரஹானே இருவரும் விளையாடிவருவதால் இனிமேல் அணியில் நீடிப்பது மிகக்கடினம். இதே கருத்தைத்தான் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் நேற்றைய வர்ணனையின்போது கூறி எச்சரித்தார்..

கேப்டன் கோலி இல்லாத நிலையில் இரு மூத்த வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால், இருவரின் பேட்டிங்கிலும் ஒருவிதமான பிடிப்பு, தன்னம்பிக்கை இல்லாமல் தோல்வி அடைந்தவர்கள்போல் பேட் செய்தனர்.

அனுபவமான பேட்ஸ்மேனா

அதிலும் ரஹானே அவுட் ஆனவிதம் கொடுமையிலும் கொடுமை. 4-வது ஸ்டெம்புக்கு சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டார்.அனுபவமிக்க பேட்ஸ்மேன் என்று அணியில் நீடிக்கும் ரஹானே இதுபோன்றபந்தை முதலில் தொடலாமா என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். ரஹானே ஆட்டமிழந்தவிதம் அவர் மீதான நம்பிக்கையை துண்டு துண்டுகளாக கழித்தெறித்துவிட்டது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 63.1ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின ஆடிய தென் ஆப்பிரிக்க அணி கவனமாகஆடி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 32 ரன்கள் சேர்த்து 167 ரன்கள் பின்தங்கியுள்ளது. எல்கர் 11ரன்களுடனும், பீட்டர்ஸன் 14 ரன்களுடனும்களத்தில் உள்ளனர்.

முதல் இன்னிங்ஸ் முக்கியம்

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கும், தென் ஆப்பிரிக்க அணிக்கும் இருந்த வேறுபாடு என்னவென்றால், முதல்நாளில் இந்திய அணி எவ்வாறு சிறப்பாக பேட்டிங் செய்ததுதான். முதல்நாள் பேட்டிங் என்பது ஆட்டத்தை முன்னோக்கி நகர்த்திச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை 2-வது டெஸ்டில் நிலைக்கவிடாமல் தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி சபாஷ் போட வைத்துள்ளனர். குறிப்பாக ஜேன்ஸன், ரபாடா, ஆலிவர் மூவரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தங்கள் பந்துவீச்சில் பெரும் தொந்தரவு கொடுத்தனர்.

130கி.மீ வேகம்தானே...

இதில் ரபாடா பந்துகள் சராசரியாக 140 கி.மீ வேகத்தில் வந்ததால் இந்திய பேட்ஸ்மேன்கள் அடிப்பதில் சிரமம் இருந்திருக்கலாம். ஆனால், ஆலிவர், ஜேன்ஸன் வீசும் பந்துகள் சராசரியாக 130 கி.மீ தாண்டவில்லை. இவர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் ரஹானே, புஜாரா, அகர்வால்,ரிஷப்பந்த் ஆட்டமிழந்ததை என்னவென்று சொல்வது.

இன்று முதல் ஷெசன் முக்கியம்

இந்திய அணி ஒருவேளை முதல் டெஸ்ட் போட்டி போன்று 300 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால், இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அதை துரத்துவது சுலபமல்ல. அதிலும் பும்ரா, ஷமி, சிராஜ் பந்துவீச்சை சமாளித்து விளையாடுவது வாண்டரரஸ் மைதானத்தில் கடினம்தான். நாள் செல்லச் செல்ல வாண்டரர்ஸ் மைதானம் மாறத் தொடங்கும்

இந்திய அணி இப்போது அடித்துள்ள 202 ரன்களும் சிறிய ஸ்கோராக இருந்தாலும், இதைக் கடந்து தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை பெறுவது இந்த ஆடுகளத்தில் எளிதானது அல்ல. இப்போதுள்ள சூழலில் எந்த அணி சிறப்பாகச் செயல்படும்,ஆட்டம்யார் பக்கம் சாயும் என்பதையும் உறுதியாகக் கூற முடியாது.

ஆனால், இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தின் முதல் ஒருமணிநேரம் அல்லது முதல் ஷெசன் இ்ந்திய அணிக்கும், தென் ஆப்பிரிக்க அணிக்கும் மிகவும் முக்கியமாகும். இந்த ஷெசனில் தென் ஆப்பிரிக்கா விக்கெட்டை இழக்காமல் தாக்குப்பிடித்துவிட்டால், இந்த டெஸ்ட் சுவாரஸ்யமாகச் செல்லும். அல்லது பும்ரா, ஷமி பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழக்கும்பட்சத்தில் ஆட்டம் இந்திய அணி பக்கம் திரும்பும்.

மானம் காத்த அஸ்வின்
இந்திய அணியின் மானம் காத்த இருவீரர்கள் என்றால் அது கேப்டன் கே.எல்.ராகுல், அஸ்வின் மட்டும்தான். கடைசிநேரத்தில் ரன் சேர்க்க வேண்டிய நேரத்தில் அஸ்வின் சில ஷாட்களை ஆடி அதிரடியாக ரன் சேர்க்கதுணிந்த முடிவு பாராட்டுக்குரியது. ஸ்பெஷலிஸ்ட் எனச் சொல்லிக்கொள்ளும் ரஹானே டக்அவுட், புஜாரா 3 ரன்கள் என வேஸ்ட் லக்கேஜ்ஜாக மாறிய நிலையில், டெய்லண்டர்கள் வரிசையில் இறங்கிய அஸ்வின் 50 பந்துகளில் 6 பவுண்டரி உள்ளிட்ட 46 ரன்கள் சேர்த்ததும், அதிலும் ஸ்ட்ரைக் ரேட் 92 வைத்திருந்தது பாராட்டுக் குரியது.

பும்ராவைவிட மோசம் ரஹானே

சுவாரஸ்யமான புள்ளிவிவரம் என்னவென்றால், கடந்த இங்கிலாந்து தொடரிலிருந்து ரஹானேயின் பேட்டிங் சராசரியைக் கணக்கிட்டால் பும்ராவின்பேட்டிங் சராசரிதான் அதிகமாக இருக்கிறது.
ரஹானே கடைசி 7 டெஸ்ட் போட்டிகளில் 12 இன்னிங்ஸ்களில் 216 ரன்கள் சேர்த்துள்ளார் இதில் ஒரு அரைசதம், 2 டக்அவுட்.ரஹானேயின் பேட்டிங் சராசரி 18 ரன்கள் மட்டும்தான்.

ஆனால், ஜஸ்பிரித் பும்ரா கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்ஸில் பேட் செய்து 122 ரன்கள் சேர்்த்துள்ளார்.இவரி்ன் பேட்டிங் சராசரி 20.33 ரன்களாகும். டெஸ்ட் போட்டியில் துணைக் கேப்டனாக இருந்தவர், ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன், சீனியர் வீரர் என்ற பட்டத்தை ஒட்டிக்கொண்டு அணியில் இருக்கும் ரஹானேயின் பேட்டிங் சாதனை இதுதான்.

விக்கெட் சரிவு

இந்திய அணியைப் பொறுத்தவரை எந்த வீரரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்கூட அமைக்கவில்லை. அதிகபட்சமாக விஹாரி, ராகுல் அமைத்த 42 ரன்கள் சேர்த்தனர் மற்ற வீரர்கள் யாரும் ஜொலிக்கவில்லை. பேட்டிங்கிலும் 36 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி, அடுத்த 13 ரன்களுக்குள் அடுத்தடுத்து ரஹானே, புஜாரா விக்கெட்டை இழந்தது.

அதேபோல, 156 ரன்கள் வரை 5 விக்கெட்டை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 31 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நடுவரிசை பேட்ஸ்மேன்களின் தோல்வியடைந்த பேட்டிங் ஒட்டுமொத்த அணியையும் புதைகுழிக்குள் தள்ளியது.

பந்துவீச்சாளர்கள் மீது சவாரி

இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே பேட்ஸ்மேன்களால் கிடைத்த வெற்றியைவிட, பந்துவீச்சாளர்களை வைத்து பெற்ற வெற்றிதான் அதிகமாக இருக்கும். பேட்ஸ்மேன்களில் கேப்டன் கோலி, புஜாரா, ரஹானே என யாரும் பெரிதாக எந்த இன்னிங்ஸும் சொல்லிக்கொள்ளும் வகையில் ஆடவில்லை. பந்துவீச்சாளர்களான பும்ரா, ஷமி, இசாந்த் சர்மா, சிராஜ், அஸ்வின், அக்ஸர் படேல், ஜடேஜா போன்ற பந்துவீச்சாளர்கள் எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தி பெற்ற வெற்றியாகத்தான் இருந்துள்ளது.

பேட்ஸ்மேன்கள் 600 ரன்கள் அடித்தோம், அதை வைத்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றோம், ஒரு அணி நிர்ணயித்த ஸ்கோரை சேஸிங் செய்து வென்றோம் என்று சமீபத்தில் எந்த ரெக்கார்டையும் இந்திய அணி வைக்கவில்லை. இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமற்றதாக மாறிவருகிறது. அதிலும் நடுவரிசையில் பேட்டிங் புற்றுநோய் போன்று செல்லரித்து வருகிறது. விரைவாக களையாவிட்டால், அடு்த்துவரும் இளம் வீரர்கள் செட்டில் ஆகவதற்கு நீண்டகாலம் தேவைப்படும்.

நல்ல தொடக்கம்

அகர்வால், ராகுல் அருமையான தொடக்கத்தை அளித்தனர். ராகுல் நிதானமாக பேட் செய்ய ,அகர்வால் அவ்வப்போது சில பவுண்டரிகள் அடித்து ரன்களைச் சேர்த்தார். ஆனால், ஜேன்ஸன் பந்துவீச்சில் லென்த் பந்தில் பேட்டில் அவுட்சைட் எட்ஜ்எடுத்து 26 ரன்னில் அகர்வால் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த புஜாரா 33 பந்துகளை தேய்த்து, 3 ரன்கள் சேர்த்து ஆலிவர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வேகம் குறைவாக, ஷாட்டாக அவுட்சைட் ஆஃப் சைட் சென்ற பந்தை தொட்டு புஜாரா விக்கெட்டை விக்கெட் கீப்பர் வெரேனேயிடம் பறிகொடுத்தார். அடுத்துவந்த ரஹானே வந்தவேகத்தில் தேவையில்லாமல் அவுட்சைட் ஆஃப் சைடு சென்ற பந்தை தொட்டு கல்லி திசையில் பீட்டர்ஸனிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஆலிவருக்கு அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் வீழ்ந்தன

விஹாரி ஏமாற்றம்

4-வது வீரராக வந்த விஹாரி, ராகுலுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றார். ஆனால், ரபாடா வீசிய ஷாட்பந்தில் வேன்டர் டூசெனிடம் கேட்ச் கொடுத்து விஹாரி 20 ரன்னில் வெளியேறினார். விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தபோதிலும் மனம்தளராமல் பேட் செய்த ராகுல் அரைசதம் அடித்தார். ஜேஸன் வீசிய ஷாட் பந்தை ஹூக் ஷாட் அடிக்க முயன்ற ராகுல், பேட்டின் முனையில்பந்து பட்டு கேட்ச்ஆனது. ராகுல் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அஸ்வின் அதிரடி

அடுத்துவந்த அஸ்வின், ரிஷப்பந்துடன் சேர்ந்து அதிரடியாக ஷாட்களை ஆடி ரன்களை வேகமாகச் சேர்த்தார். ரிஷப் பந்த் 17 ரன்னில் ஜேன்ஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தாக்கூர்(0), ஷமி(9) என வரிசையாக வெளியேறினர். அஸ்வின 46 ரன்கள் சேர்த்து அருமையான இன்னிங்ஸுடன் ஆட்டமிழந்தார்.
63.1 ஓவர்களில் இந்திய அணி 202 ரன்களுக்குஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ஜேன்ஸன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா, ஆலிவர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்